நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக வாட்ஸ்அப் குரூப்பில் கமெண்ட்.. கொல்லப்பட்ட நபர்.. என்.ஐ.ஏ விசாரணை
மும்பை: நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக சமூக வலைதளத்தில் பதிவிட்ட விவகாரத்தில் ராஜஸ்தான் டெய்லர் கொலை செய்யப்பட்ட நிலையில் மகாராஷ்டிராவிலும் மெடிக்கல் கடை உரிமையாளரும் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கிலும் மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
பாஜகவின் செய்தி தொடர்பாளராக இருந்தவர் நுபுர் சர்மா. இவர் மே மாத இறுதியில் தெலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்று இஸ்லாமிய இறைதூதர் நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.
இவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் வெடித்தன. பாஜகவில் இருந்து நுபுர் சர்மா சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
நுபுர் ஷர்மா பேச்சுக்கு அவர் காரணமில்லை.. ஆர்எஸ்எஸ் இயக்கத்திற்கு தடை தேவை.. திருமாவளவன் அதிரடி!

டெய்லர் கொலை வழக்கு
இருப்பினும் நுபுர் சர்மா விவகாரம் இன்னும் தொடர்ந்து பிரச்சனைகளை கிளப்பி வருகிறது. அதாவது நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்ட 28 ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் உள்ள மால்டாஸ் தெருவில் வசித்து வந்த டெய்லர் கண்ணையா லால் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு விசாரணை என்ஐஏவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதன்படி என்ஐஏ அதிகாரிகள் 4 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க துவங்கி உள்ளனர்.

மகாராஷ்டிராவிலும் கொலை
இதற்கிடையே தான் மகாராஷ்டிரா மாநிலம் அமராவாதி மாவட்டம் கோத்வாளி போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வந்தவர் உமேஷ் பிரஹலாத்ராவ் (வயது 54). இவர் மெடிக்கல் கடை நடத்தி வந்தார். ஜூன் 21 இரவில் மெடிக்கல் கடையில் இருந்து டூவீலரில் வீட்டுக்கு சென்றார். அப்போது மர்மநபர்களால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.

5 பேர் கைது
இதுபற்றி கோத்வாளி போலீசார் வழக்குப்பதிவு செய்து வந்தனர். கொலை தொடர்பாக முதாசீர் அகமது (22), ஷாரூக் பதான் (25), அப்துல் தவ்பிக் (24), சோயிப் கான் (22), அதிப் ரசீத் (22) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஷமீம் அகமது பெரோஸ் அகமது தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

நுபுர் சர்மாவுக்கு ஆதரவால் கொலை
இவர்களிடம் நடத்திய விசாரணையில் நுபுர் சர்மாவை ஆதரித்து உமேஷ் பிரஹலாத்ராவ் வாட்ஸ்அப் குழுவில் தகவல் பகிர்ந்துள்ளார். இதையடுத்து கோபமடைந்தவர்கள் அவரை தீர்த்து கட்டியது தெரியவந்து. இவர்களிடம் இருந்து கத்தி, செல்போன், கொலைக்கு ப பயன்படுத்திய கார், மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

என்ஐஏவிடம் ஒப்படைப்பு
இந்நிலையில் தான் உமேஷ் பிரஹலாத்ராவ் கொலை வழக்கில் தொடர்புடைய நபர்கள் மீதும் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. இதனால் இந்த வழக்கையும் என்ஐஏ விசாரணைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதுபற்றி உள்துறை அமைச்சகம் தனது டுவிட்டர் பக்கத்தில், ‛‛ஜூன் 21ல் மகாராஷ்டிரா அமராவதியில் உமேஷ் கொலை செய்ய்ப்பட்ட வழக்கின் விசாரணையை மத்திய உள்துறை அமைச்சகம் என்ஐஏவிடம் ஒப்படைத்துள்ளது. கொலையின் பின்னணியில் உள்ள சதி, அமைப்புகளின் தொடர்பு மற்றும் சர்வதேச தொடர்புகள் குறித்து முழுமையாக விசாரிக்கப்படும்" என கூறப்பட்டுள்ளது.