பிஎன்பி மோசடி: டொமினிகாவில் கைதான மெகுல் சோக்சியை இந்தியாவிடம் ஒப்படைக்க ஆன்டிகுவா வலியுறுத்தல்
மும்பை: போலி ஆவணங்களை பயன்படுத்தி பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13,500 கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டு தலைமறைவான மெகுல் சோக்சி டொமினிகாவில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த தேவையான நடவடிக்கைகளில் மத்திய அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. அதே நேரத்தில் அவர் இந்திய குடிமகன் அல்ல என்றும் கரீபியன் தீவு தேசத்தின் குடிமகன் என்பதால் ஆன்டிகுவா மற்றும் பார்புடாவுக்கு மட்டுமே அனுப்ப முடியும் என்றும் டொமினிகா நாடு தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஆன்டிக்குவா வலியுறுத்தியுள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேட்டில் முதல் குற்றவாளியான கீதா ஜெம்ஸ் நிறுவனத்தின் தலைவர் நீரவ் மோடியின் உறவினர் மெகுல் சோக்சி. இந்தியாவிலிருந்து தப்பிச் சென்ற மெகுல் சோக்சி கியூபா சென்ற நிலையில் அங்கிருந்து தலைமறைவானார்.

அவரை இந்தியா காவல்துறையினர் தேடி வந்த நிலையில் கரீபிய தீவான ஆண்டிகுவா மற்றும் பர்புடா நாட்டில் அவர் இருப்பது கண்டறியப்பட்டது. கடந்த 2018ம் ஆண்டு முதல் அந்நாட்டின் குடியுரிமையை பெற்று அங்கு வசித்து வரும் நிலையில் அவரை இந்தியாவிற்கு நாடு கடத்துவதற்கான சட்ட நகர்வுகளை இந்தியா மேற்கொண்டு வந்தது.
இந்நிலையில் அவர் மீதான வழக்கில் தீர்ப்பு வரவிருந்த நிலையில் அந்த அழுத்தம் காரணமாக தான் இந்தியாவிற்கு நாடு கடத்தப்படலாம் என்ற அச்சத்தில் அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆண்டிகுவா மற்றும் பர்புடாவில் தலைமறைவானார். அவருடைய கார், கடற்கரை அருகே கண்டறியப்பட்ட நிலையில் ஆண்டிகுவாவின் விமான நிலையங்கள் வழியாக மெகுல் சோக்சி எங்கேனும் சென்றாரா என தேடப்பட்டது.
பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி மன்னன் மெகுல் சோக்ஷி டொமினிகாவில் பிடிபட்டது எப்படி?
அவர் கடல் மார்க்கமாக படகுகளில் தப்பிச் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. இந்த நிலையில் டொமினிகா நாட்டின் கடல்பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் படகில் சென்ற மெகுல் சோக்சி யை விசாரித்த டொமினிகா காவல்துறையினர் அவர் தேடப்படும் குற்றவாளி என்பதை கண்டறிந்தனர்.
மெகுல் சோக்ஸி கடலில் சில ஆவணங்களை தூக்கி எறிந்ததால், அதனை ஸ்கூபா டைவர்கள் உதவியுடன் தேடும் முயற்சியிலும் டொமினிகா காவல்துறையினர் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் மெகுல் சோக்ஸி சட்டவிரோதமான முறையில் டொமிகாவிற்கு தப்பிச் சென்றதற்கு ஆண்டிகுவா பிரதமர் கேஸ்டன் பிரவுனி கண்டனம் தெரிவித்துள்ளார். இப்படி சென்றதன் மூலம் வரலாற்று தவறை மெகுல் சோக்சி செய்துவிட்டதாகவும், அவரை மீண்டும் ஆண்டிகுவாவிற்கு அனுப்ப வேண்டாம், இந்தியாவில் அவர் மீது தீவிரமான வழக்குகள் இருப்பதால் மெகுல் சோக்சியை இந்தியாவிடம் ஒப்படைத்துவிடுமாறும் பிரவுனி, டொமினிகா அரசை கேட்டுக்கொண்டுள்ளார்.
இருப்பினும் மெகுல் சோக்சி ஆண்டிகுவாவின் குடியுரிமை பெற்றிருப்பதால் அவரை ஆண்டிகுவாவிடம் மட்டும் தான் ஒப்படைக்க வேண்டும் எனவும் மெகுல் சோக்சி வேண்டும் என்றே டொமினிகா சென்றதை போல தோன்றவில்லை என்றும் மெகுல் சோக்சியின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

மொகுல் சோக்சியை இந்தியாவிடம் ஒப்படைக்க ஆண்டிகுவா திட்டமிட்டுள்ளது. மெகுல் சோக்சியை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று டொமினிகாவை ஆண்டிகுவா நாடு வலியுறுத்தியுள்ளது. இந்தியாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டினை ஆண்டிகுவா நாடு எடுத்திருப்பதால், மெகுல் சோக்சியை இந்தியாவிற்கு தடை ஏதும் இல்லாமல் அனுப்பி வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மெகுல் சோக்சி இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டால், பண மோசடி வழக்குகளில் விசாரணையை எதிர்கொள்ளாமல் இந்தியாவிலிருந்து தப்பிச் சென்றவர்களில் மீண்டும் நாடு கொண்டுவரப்படும் முக்கிய நபராக இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
நீரவ் மோடியை இந்தியாவிற்கு நாடு கடத்த தடை ஏதும் இல்லை என்று இங்கிலாந்து நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்த நிலையில் தற்போது மெகுல் சோக்சியின் வருகை பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேட்டு வழக்கை துரிதப்படுத்தும் என இந்திய புலனாய்வு அமைப்புகளுக்கு நம்பிக்கையை தந்துள்ளது.