உத்தவ்விற்காக அழுது புலம்பிய எம்எல்ஏ.. கடைசி நிமிடத்தில் அணி மாறி அதிர்ச்சி.. காலியாகிறதா சிவசேனா?
மும்பை: சில நாட்களுக்கு முன் உத்தவ் தாக்கரேவுக்கு ஆதரவாக மக்கள் மத்தியில் அழுது புலம்பிய சிவசேனா எம்எல்ஏ சந்தோஷ், கடைசி நேரத்தில் ஏக்நாத் ஷிண்டே அணிக்கு தாவியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவில் அரசியலில் சிவசேனா - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு எதிராக திடீரென சிவசேனா எம்எல்ஏ-க்கள் போர்க்கொடி தூக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. சூழலை கட்டுக்குள் கொண்டு வர இறுதிவரை போராடிய முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிட்ட பின்னர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து மகாராஷ்டிரா முதலமைச்சராக சிவசேனா அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டேவும், துணை முதல்வராக பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ்-ம் பதவியேற்றனர்.

இதையடுத்து ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி உத்தரவிட்டார். பின்னர் மகாராஷ்டிரா சட்டமன்றத்தின் 2 நாட்கள் சிறப்புக் கூட்டத் தொடர் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற சபாநாயகர் தேர்தலில் பாஜகவின் நர்வேகர் மொத்தம் 164 வாக்குகள் பெற்று புதிய சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார்.
இந்த நிலையில் மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு, பெரும்பான்மையை நிரூபித்து நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற்றது. நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற 144 வாக்குகள் தேவைப்பட்ட நிலையில், 164 வாக்குகளை பெற்று ஏக்நாத் ஷிண்டே அரசு வெற்றிபெற்றுள்ளது.
அதில் பாஜக எம்எல்ஏ-க்கள் 106 பேர், சிவசேனா அதிருப்தி எம்எல்ஏ-க்கள் 40 பேர் மற்றும் சுயேட்சைகள் 18 பேர் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே அரசுக்கு ஆதரவளித்துள்ளனர். ஏக்நாத் ஷிண்டே அரசுக்கு எதிராக 99 பேர் வாக்களித்தனர். அதுமட்டுமல்லாமல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 10 எம்எல்ஏ-க்கள் உட்பட 22 பேர் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. இதனிடையே கடைசி நிமிடத்தில் சிவசேனா கட்சியின் உத்தவ் தாக்கரே அணியைச் சேர்ந்த இரு எம்எல்ஏ-க்கள் ஏக்நாத் ஷிண்டே அணிக்கு தாவியுள்ளனர்.
உத்தவ் தாக்கரே அணியில் இருந்த எம்எல்ஏ-வான சந்தோஷ் பங்கர் மற்றும் ஷ்யாம் சுந்தர் ஆகியோர் கடைசி நேரத்தில், ஏக்நாத் ஷிண்டே அணிக்கு மாறியுள்ளனர். எம்எல்ஏ சந்தோஷ் பங்கர் கடந்த 24ம் தேதி, அசாமில் முகாமிட்டிருந்த ஏக்நாத் ஷிண்டேவை மீண்டும் உத்தவ் தாக்கரேவுடன் இணைய வேண்டும் என்று மக்கள் மத்தியில் அழுது புலம்பி கோரிக்கை விடுத்திருந்தார்.
அப்போது பால் தாக்கரேவின் உண்மையான தொண்டன் நான், ஒருபோதும் சிவசேனாவை விட்டு வெளியேற மாட்டேன் என்று பேசி இருந்தார். இதனை ஏராளமானோர் பகிர்ந்து இதுதான் சிவசேனா கட்சி என்றும், தொண்டர்களுக்கும், எம்எல்ஏ-க்களுக்கும் முன்னுதாரணமாக சந்தோஷ் இருக்கிறார் என்றும் பேசப்பட்டது.
ஆனால் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன், நேற்று இரவு அதிருப்தி எம்எல்ஏ-க்கள் தங்கி இருந்த விடுதிக்கு சென்ற சந்தோஷ் பங்கர் ஏக்நாத் ஷிண்டே அணியுடன் இணைந்துள்ளார். இதனால், அவர் சில நாட்களுக்கு முன் அழுது புலம்பிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.