ஷீனா போரா கொலை வழக்கு: இந்திராணி முகர்ஜிக்கு ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்
மும்பை: ஷீனா போரா கொலை வழக்கில கைதாகி சிறையில் உள்ள இந்திராணி முகர்ஜிக்கு உச்சநீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்தது.
தனியார் தொலைக்காட்சியின் தலைமைப் பொறுப்பை வகித்து வந்தவர் பீட்டர் முகர்ஜி. இவரது மனைவி இந்திராணி முகர்ஜி. இவர் தனது முன்னாள் கணவருக்கு பிறந்த மகள் ஷீனா போராவை கொலை செய்ததாக கடந்த 2015 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.
பீட்டர் முகர்ஜிக்கும் அவருடைய முன்னாள் மனைவிக்கும் பிறந்த மகன் ராகுல் முகர்ஜியை ஷீனா போரா காதலித்ததால் இந்த கொலை நடந்ததாக தெரிகிறது. இந்திராணி மும்பையில் உள்ள பைகுல்லா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இது என்ன புதுஸ்ஸா.. ஷீனா போரா உயிரோடுதான் இருக்கிறாராம்.. இந்திராணி முகர்ஜி பரபரப்பு கடிதம்

ஜாமீன்
இந்த நிலையில் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் இந்திராணி மனு தாக்கல் செய்தார். ஆனால் அந்த ஜாமீன் மனுவை எதிர்த்து சிபிஐ ஒரு மனு தாக்கல் செய்தது. அதில் இந்திராணி முகர்ஜி தனது மகளைக் கொன்றவர், மகனை கொல்ல முயற்சித்தவர், இதை சாதாரண வழக்காக கருதிவிட முடியாது.

கருணை
எனவே நீதிமன்றத்தில் எந்த கருணையையும் பெற தகுதியற்றவர். மேலும் இந்திராணி வெளியே வந்தால் சாட்சியங்களை அழித்து தலைமறைவாகிவிடுவார் என சிபிஐ தெரிவித்தது. இந்த நிலையில் இன்றைய தினம் இந்திராணியின் ஜாமீன் மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் இந்திராணி முகர்ஜி சிறையில் ஆறரை ஆண்டுகளை கழித்துவிட்டார். அதனால் அவருக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது என உத்தரவிட்டனர்.

ஷீனா போரா
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பீட்டர் முகர்ஜி கடந்த 2020 ஆம் ஆண்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அவருக்கு என்னென்ன நிபந்தனைகள் விதிக்கப்பட்டதோ அவை அனைத்தும் இந்திராணிக்கும் பொருந்தும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் ஷீனா இறக்கவில்லை அவர் உயிரோடு இருக்கிறார்.

ஷீனா போரா உயிருடன் இருக்கிறார்
பைகுல்லா சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆஷா கார்கே, கடந்த ஜூன் மாதம் 2021 ஆம் ஆண்டு ஷீனாவை போல் ஒரு பெண்ணை ஸ்ரீநகரில் (காஷ்மீர்) பார்த்ததாக கூறினாராம். ஆஷாவின் கூற்றை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள சிபிஐக்கு சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என இந்திராணி மனு தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.