பாஜக ஆட்சியில் விரட்டப்படும் இந்துக்கள்.. இதுதான் ”இந்துத்துவா” ஆட்சியா? - சிவசேனா பத்திரிகை கேள்வி
மும்பை: உத்தவ் தாக்கரே அரசுக்கு எதிராக அசாமில் முகாமிட்டுள்ள ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான எம்.எல்.ஏக்களை யோகா முகாம் என சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னா விமர்சித்து இருக்கிறது.
மகாராஷ்டிரா சட்டசபையில் உள்ள 288 இடங்களில் பாஜகவுக்கு 106 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். 2019 தேர்தலில் பாஜகவுடன் இணைந்து போட்டியிட்ட சிவசேனாவுக்கு 55 இடங்கள் கிடைத்தன.
ஆனால் தேர்தலுக்கு பிறகு யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் சிவசேனா, காங்கிரஸ் தேசியவாத காங்கிரஸ், சிறு கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் ஆதரவுடன் ஆட்சியமைத்தது.
சிவசேனாவின் ஆட்சி, கட்சி, சின்னம் அத்தனையும் அம்போ? 'பாட்ஷா' முகத்தை காட்டப் போகும் உத்தவ் தாக்கரே!

பாஜக திட்டம்
சிவசேனா தலைமையிலான மகா விகாஷ் அகாடி கூட்டணி ஆட்சிக்கு மொத்தம் 169 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருந்தது. தொடர்ந்து பாஜகவுக்கு எதிராக அரசியல் செய்து வந்த ஆளும் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளை பல வகைகளில் வளைக்க முயன்றது பாஜக. அதன் பயனாக மாநிலங்களவை மற்றும் சட்ட மேலவைத் தேர்தலில் பாஜகவின் ஆட்டத்துக்கு ஓரளவு வெற்றி கிடைத்தது.

அணி தாவிய எம்.எல்.ஏக்கள்
இந்த நிலையில் கடந்த 21ம் தேதி பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தின் சூரத் நகரில் உள்ள சிவசேனா அமைச்சர் ஏக்னாத் ஷிண்டே தலைமையிலான 34 எம்.எல்.ஏக்கள் முகாமிட்டனர். அதன் பின்னர் பாஜக ஆளும் அசாம் மாநிலத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு கடந்த 2 நாட்களில் மட்டும் மேலும் 5 எம்.எல்.ஏக்கள் ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் 39 ஆக அவர்களின் பலம் அதிகரித்துள்ளது.

தேசிய கட்சி ஆதரவு
இந்த நிலையில் அதிருப்தி எம்.எல்.ஏக்களுடன் அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. அதில், "நமது சுக துக்கங்கள் எல்லாம் ஒன்றுதான். நாம் ஒற்றுமையாக இருந்தால் வெற்றி நமக்குதான். ஒரு தேசிய கட்சி.. "மகாசக்தி". உங்களுக்கு தெரியும், அவர்கள் பாகிஸ்தானை வீழ்த்தினர். அவர்கள் நமக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்து இருக்கின்றனர். அனைத்து உதவிகளையும் செய்வதாக அறிவித்துள்ளனர்." என்றார்.

சாம்னா பத்திரிகை விமர்சனம்
இந்த நிலையில் ஏக்நாத் ஷிண்டேவின் பேச்சை சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னா கடுமையாக விமர்சித்துள்ளது. அதில், அதிருப்தி எம்.எல்.ஏக்களை யோகா முகாம் என பகடி செய்துள்ள சாம்னா, "யோக கும்பலின் தலைவர் பாஜக பாகிஸ்தானுக்கு பாடம் கற்பித்ததாக கூறுகிறார். அதற்கு என்ன ஆதாரம் வைத்துள்ளார்கள்? காஷ்மீரில் பாகிஸ்தான் ஊடுருவல் தொடர்கிறது. இந்து பண்டிட்டுகள் கொல்லப்படுகின்றனர். இந்துத்துவா அரசு என்றும் கூறும் பாஜக ஆட்சியில் இந்துக்கள் விரட்டப்படுகின்றனர். இதுதான் உங்கள் மகாசக்தியா?" என்று கேள்வி எழுப்பியுள்ளது.