கோட்சேவை புகழ்றீங்க.. ஆனா, வெளிநாட்டிலிருந்து யார் வந்தாலும் காந்தி ஆசிரமம் கூட்டிப்போறீங்க- சிவசேனா
மும்பை: ‛‛ நாதுராம் கோட்சேவை பெருமைப்படுத்தி, அவரது சித்தாந்தத்தை ஆதரிக்கும் பாஜக தான் வெளிநாட்டு விருந்தினர்களை காந்தியின் சபர்மதி ஆசிரமத்துக்கு அழைத்து செல்கிறது. ஏனென்றால் உலகில் இந்தியாவின் அடையாளமாக காந்தி உள்ளார்'' என பாஜகவை, சிவசேனா விமர்சனம் செய்துள்ளது.
இந்தியா வரும் வெளிநாட்டு தலைவர்கள் குஜராத் மாநிலத்தில் உள்ள காந்தியின் சபர்மதி ஆசிரமத்துக்கு செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
தமிழை நீதிமன்ற அலுவல் மொழியாக அறிவித்திடுக! நீதித்துறை விழாவில் முதல்வர் முன்வைத்த 3 கோரிக்கைகள்!
சமீபத்தில் மட்டும் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் காந்தியின் ஆசிரமத்தை பார்வையிட்டுள்ளனர்.

சபர்மதி ஆசிரமத்தில் போரிஸ் ஜான்சன்
அதாவது இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ஏப்ரல் 21, 22 ஆகிய தேதிகளில் 2 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்தார். 21ம் தேதி குஜராத் மாநிலத்தில் உள்ள காந்தியின் சபர்மதி ஆசிரமத்தை அவர் பார்வையிட்டார். மேலும் அக்சர்தாம் கோவிலுக்கு சென்றவர், தொழிலதிபர்களுடன் கலந்துரையாடினார். தொழிலதிபர் கவுதம் அதானியை சந்தித்து பேசினார். 22ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியை, போரிஸ் ஜான்சன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சுற்றுப்பயணத்தின்போது இந்தோ பசிபிக் பிராந்திய பாதுகாப்பு, இருநாடுகளுக்கு இடையேயான தொழில் ஒப்பந்தம், முதலீடு குறித்து விவாதிக்கப்பட்டன.

தலையங்கத்தில் விளாசல்
இந்நிலையில் தான் சபர்மதி ஆசிரமத்துக்கு போரிஸ் ஜான்சன் வந்ததையும், பாஜகவையும் ஒப்பிட்டு சிவசேனா கட்சி விமர்சனம் செய்துள்ளது. இதுகுறித்து சிவசேனா கட்சியின் நாளிதளான சாம்னா தலையங்கம் எழுதப்பட்டுள்ளது. அதில் பாஜகவின் செயல்பாடுகள் விமர்சனம் செய்யப்பட்டுள்ளது. இந்த தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்தியாவின் அடையாளம் காந்தி
குஜராத்தில் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் பிரமாண்ட சிலை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் உள்பட பிற வெளிநாட்டு விருந்தினர்கள் அழைத்து செல்லப்படவில்லை. அனைத்து தலைவர்களும் காந்தியின் சபர்மதி ஆசிரமத்துக்கு தான் அழைத்து செல்லப்படுகின்றனர். ஏனெனில் காந்தி உலக அரங்கில் இந்தியாவின் அடையாளமாக இருக்கிறார்.

கோட்சேவை பெருமைப்படுத்தும் பாஜக
பாஜக ஒருபுறம் நாதுராம் கோட்சேவை பெருமைப்படுத்தி, அவரது சித்தாந்தத்தை பின்பற்றுகிறது. மறுபுறம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்யும் வெளிநாட்டு தலைவர்களை சபர்மதி ஆசிரமத்துக்கு அழைத்து சென்று ராட்டையில் நூல் நூற்க செய்கிறார்கள். ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு. போரிஸ் ஜான்சன் இந்தியாவில் தங்கிய நாளில் தலைநகர் டெல்லி உள்பட நாடு முழுவதும் வகுப்புவாத கலவரத்தால் பதட்டமான சூழல் நிலவியது. இந்திய நாடு சுதந்திரம் அடைந்தபோது மதவெறுப்பு மற்றும் வன்முறை சூழல் இருந்தது. இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் தற்போதைய இந்திய வருகையிலும் அதே சூழல் நிலவியது.
இவ்வாறு கூறப்பட்டு இருந்தது.