• search
நாகப்பட்டினம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

தை அமாவாசை: திருநாங்கூர் பெருமாள் கோவில்களில் 11 கருடசேவை - துர்கா ஸ்டாலின் தரிசனம்

Google Oneindia Tamil News

நாகை: சீர்காழி அருகே திருநாங்கூரில் 11 கருடசேவை உற்சவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த வைபவத்தில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு 11 திவ்ய தேச பெருமாள்களை வழிபட்ட பேறும் கிடைத்து விடுவதால் இதில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கு, மறுபிறவி கிடையாது என்பது நம்பிக்கை. திமுக தலைவர் மு.க ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் கலந்துகொண்டு 11 பெருமாள்களையும் வழிபட்டு சாமி தரிசனம் செய்தார்.

108 திவ்ய தேசங்களில் நாங்கூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் 11 ஆலயங்கள் இருக்கின்றன. மணிமாடக்கோவில் நாராயணப் பெருமாள் ஆலயத்தில், 11 ஆலயங்களின் சுவாமிகளும் ஆண்டுக்கொரு முறை தங்க கருட வாகனத்தில் எழுந்தருள்வார்கள்.

வைணவத்தில் 'பெரிய திருவடி' எனப்படும், கருடாழ்வார் மீது இறைவன் எழுந்தருளும் திருக்கோலமே கருட சேவை'. கருட சேவையை தரிசித்தால் பல புண்ணிய பலன்கள் கிட்டும் என்பது நம்பிக்கை. இந்த நிலையில், ஆண்டு தோறும் தை அமாவாசைக்கு மறுநாள் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்துள்ள நாங்கூர் மணிமாடக்கோவில் நாராயணப் பெருமாள் ஆலயத்தில் 11 கருட சேவை உற்சவம் வெகு விமரிசையாக நடைபெறும்.

11 பெருமாள் கோவில்கள்

11 பெருமாள் கோவில்கள்

108 திவ்ய தேசங்களில் நாங்கூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் 11 ஆலயங்கள் இருக்கின்றன. மணிமாடக்கோவில் நாராயணப் பெருமாள் ஆலயத்தில், 11 ஆலயங்களின் சுவாமிகளும் ஆண்டுக்கொரு முறை தங்க கருட வாகனத்தில் எழுந்தருள்வார்கள். கரிகால் சோழன், பெண் எடுத்த பெருமைக்குரியது திருநாங்கூர். இந்த ஊரிலும், இதனைச்சுற்றிய 2 கிலோமீட்டர் தொலைவுக்குள்ளும் 108 வைணவ திவ்ய தேசங்களுள் 11 திவ்ய தேசங்கள் அமைந்துள்ளன. அதேபோல இதற்கு சமமான பாடல் பெற்ற 11 சிவதலங்களும் இங்கே இருக்கின்றன.

புராண கதை

புராண கதை

தனது தந்தையான தட்சனின் யாகத்துக்குச் சென்ற பார்வதி தேவியை, தட்சன் அவமானப்படுத்தினான். அதைக் கேள்வியுற்றுக் கடுஞ்சினம் கொண்ட சிவன், சீர்காழிக்கு அருகிலுள்ள உபயகாவிரி எனும் இடத்தில் ருத்திர தாண்டவம் ஆடினார். அவரது ரோமம் விழுந்த இடங்களில் இருந்து ருத்திரர்கள் தோன்றி ஆடத்தொடங்கினார்கள். சிவபெருமானின் கோபத்தை அடக்க வழிதெரியாது தவித்த தேவர்கள், மகாவிஷ்ணுவிடம் முறையிட்டனர்.

11 பெருமாள்கள்

11 பெருமாள்கள்

திருமால், திருநாங்கூரில் 11 வடிவங்களோடு சிவபெருமான் முன்பாகத் தோன்றி, அவரை சாந்தப்படுத்தி கோபத்தைத் தணித்தார். அதன்படி திருமணிமாடக் கோவிலில் ஸ்ரீநாராயணப் பெருமாளாகவும், திருஅரிமேய விண்ணகரத்தில் ஸ்ரீகுடமாடுகூத்தராகவும், திருச்செம்பொன்செய் கோவிலில் ஸ்ரீசெம்பொன் அரங்கராகவும், திருத்தெற்றியம்பலத்தில் ஸ்ரீசெங்கண்மாலாகவும், திருவெள்ளக்குளத்தில் ஸ்ரீஅண்ணன் பெருமாளாகவும், திருவண்புருடோத்தமத்தில் ஸ்ரீபுருஷோத்தமப் பெருமாளாகவும், திருமணிக்கூடத்தில் ஸ்ரீவரதராஜப் பெருமாளாகவும், திருவைகுந்த விண்ணகரத்தில் ஸ்ரீவைகுந்த நாதப் பெருமாளாகவும், திருத்தேவனார்த்தொகையில் ஸ்ரீமாதவப் பெருமாளாகவும், திருப்பார்த்தன்பள்ளியில் ஸ்ரீதாமரையாள் கேள்வனாகவும், திருக்காவளம்பாடியில் ஸ்ரீகோபால கிருஷ்ணனாகவும் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர்.

மற்றொரு புராண கதை

மற்றொரு புராண கதை

இதே போல மற்றொரு புராண கதையும் கூறப்படுகிறது. பிரம்மனின் ஐந்தாவது தலையைக் கொய்ததால், சிவபெருமானுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது. அது நீங்க நாங்கூர் திருத்தலம் சென்று, 11 ருத்ர தோற்றங்கள் கொண்டு அஸ்வமேத யாகம் செய்யும் படிக் கூறினார் திருமால். சிவபெருமானும் 11 ருத்ர தோற்றம் கொண்டு, யாகம் செய்தார். அதன் நிறைவின்போது 11 ருத்ர தோற்றத்திற்கும், 11 பெருமாள்களாகத் தோன்றி திருமால் காட்சி தந்தார். அப்படி பெருமாள் கொண்ட 11 கோலங்களே, திருநாங்கூரில் அமைந்துள்ள 11 திவ்ய தேசங்கள் என்கிறது தலவரலாறு.

127 ஆண்டு கால வரலாறு

127 ஆண்டு கால வரலாறு

127 ஆண்டுகளுக்கு முன்பு 11 திவ்யதேசப் பெருமாளையும் ஒரு நாளில் திருநாங்கூரில் எழுந்தருளச்செய்யும் வைபவத்தை பக்தர்கள் ஏற்படுத்தினர். அந்த வைபவம் இடைவிடாமல் இன்றுவரை நடந்துவருகிறது. இந்த வைபவம் கடந்த வியாழக்கிழமை அதிகாலை ஸ்ரீ திருமங்கையாழ்வார் திருநகரியிலிருந்து புறப்பட்டு, அன்று மாலை திருநாங்கூரில் பெருமாள்களுக்கு மங்களாசாசனம் செய்து வைத்த நிகழ்வோடு தொடங்கியது. அன்றிரவு மங்களாசாசனம் முடிந்து இரவு அர்த்தஜாம பூஜைகள் நடைபெற்றன.

11 உற்சவ மூர்த்திகள்

11 உற்சவ மூர்த்திகள்


அதைத்தொடர்ந்து, உற்சவத்தின் சிறப்பு நிகழ்வாக, கடந்த 12ஆம் தேதி மதியம் 1.30 மணியளவில், திருநாங்கூரைச் சுற்றியுள்ள 11 திருக்கோயில்களிலிருந்து 11 பெருமாள் உற்சவமூர்த்திகள் திருநாங்கூர் மணிமாடக் கோவில் பந்தலில் எழுந்தருளினர். பிறகு திருமங்கையாழ்வார் தனது தேவியான குமுதவல்லி நாச்சியாருடன் பந்தலில் எழுந்தருளி ஒவ்வொரு பெருமாளிடமும் சென்று மங்களாசாசனம் செய்தார்.

தங்க கருட வாகனம்

தங்க கருட வாகனம்

இரவு 12 மணியளவில் 11 பெருமாள்களும் தங்கக் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சி அளித்தனர். திருமங்கையாழ்வார் நாச்சியாருடன் ஹம்சவாகனத்தில் எழுந்தருளினார். பின்பு வெண்குடையுடன் மங்கள வாத்தியங்கள் முழங்க வீதியுலா நடைபெற்றது.

பக்தர்கள் பங்கேற்பு

பக்தர்கள் பங்கேற்பு

நாங்கூர் 11 கருட சேவை 127 வது ஆண்டு உற்சவத்தில், தமிழகம் மட்டுமன்றி பல மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சீர்காழி, நாகை, மயிலாடுதுறையில் இருந்து திருநாங்கூருக்கு அரசு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு, காவல்துறை அதிகாரிகள் தலைமையில் குழு அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு முழு பாதுகாப்பு வழங்கப்பட்டது.

English summary
11 garuda seva festival held in Divya Desams in Thirunangoor area near Sirgazhi in Nagapattinam district. The 11th Karudasevai festival was held on Friday in Thirunangur near Sirkazhi. It is hoped that the devotees who attend this ceremony will not be reborn as they will get the blessings of worshiping the 11 Divya Desa Perumals. DMK leader MK Stalin's wife Durga Stalin attended and worshiped all the 11 great deities.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X