உதயநிதி ஸ்டாலின் கைது... காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை.. நடந்தது என்ன..?
நாகை: திருக்குவளையில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்படுள்ளார்.
இதனால் காவல்துறையினருக்கும் திமுகவினருக்கும் இடையே சிறியளவில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனிடையே கைது நடவடிக்கைகளுக்கு அஞ்சியவன் நானில்லை என்றும் தொடர்ந்து பரப்புரை மேற்கொள்வேன் எனவும் உதயநிதி உறுதிபடக் கூறியுள்ளார்.
ஒரு பக்கம் வேல்யாத்திரை.. இன்னொரு பக்கம் திமுக பிரச்சாரம்.. களமிறங்கியது அதிமுக.. அதிரடி மீட்டிங்!

போலீஸார் குவிப்பு
திமுகவின் தேர்தல் பிரச்சாரத்தை உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்குகிறார் என நேற்று செய்தி வெளியானதில் இருந்தே போலீஸ் அவரை கண்காணிக்கத் தொடங்கியது. திருச்சி மாவட்ட திமுக நிர்வாகிகள் இல்ல திருமண விழாக்களில் பங்கேற்பதற்காக நேற்றிரவு திருச்சி சென்ற அவர் சங்கம் ஹோட்டலில் தங்கினார். இதையடுத்து நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று காலை 8 மணிக்கு விடுதியில் இருந்து புறப்பட்ட உதயநிதியை கண்காணிக்க அவர் செல்லும் வழிகள் எங்கும் போலீஸ் குவிக்கப்பட்டிருந்தது.

போலீஸ் கெடுபிடி
இதனை உதயநிதி ஸ்டாலினும் உணராமல் இல்லை. தன்னை கைது செய்ய காவல்துறை நோட்டமிடுவதை அறிந்துகொண்டார். இதையடுத்து கைதுக்கு இடம் கொடுக்காத வகையில் நடந்துகொண்டு திட்டமிட்டபடி பிரச்சாரத்தை தொடங்குவதில் கவனமாக இருந்தார். திருமண நிகழ்ச்சிகளில் உதயநிதி பங்கேற்கும் வரை அமைதியாக இருந்த காவல்துறையினர், நாகையை நோக்கி அவர் செல்லும் போது கெடுபிடியை காட்டத் தொடங்கினர்.

ஒத்துழைப்பு
திருவெறும்பூர் மற்றும் புதுக்குடி என்ற இரண்டு இடங்களிலும் உதயநிதி ஸ்டாலின் பின்னால் கார்கள் அணிவகுத்து செல்லக்கூடாது என முட்டுக்கட்டை போடப்பட்டது.எப்படியும் அங்கு இதை வைத்து வாக்குவாதம் வரும், இதன் மூலம் கைது நடவடிக்கை மேற்கொள்ளலாம் என நினைத்த நிலையில் காவல்துறைக்கு ஒத்துழைப்பு கொடுத்து சமயோஜிதமாக இரண்டு கார்களில் மட்டும் திருக்குவளை நோக்கி சென்றார் உதயநிதி.

திமுகவினர் ஆவேசம்
அங்கு திட்டமிட்டது போல் தனது முதல் பரப்புரையை தொடங்கி திமுகவினருக்கு உற்சாகம் அளித்தார். இதையடுத்து மேடையில் இருந்து கீழே இறங்கிய அவரை போலீஸார் கைது செய்வதாக கூறினார். இதைக்கேட்டு அங்கிருந்த திமுகவினர் ஆவேசமடைந்து போலீஸ் அராஜகம் ஒழிக என முழக்கம் எழுப்பினர். அவர்களை அமைதிப்படுத்திய உதயநிதி ஸ்டாலின், காவல்துறையினர் அழைத்துச் சென்ற திருமண மண்டபத்துக்கு நடந்தே சென்றார்.