4 நாளுக்கு முன்பு அரசு பேருந்து.. இன்னிக்கு 108 ஆம்புலன்ஸ்.. பூம்புகார் எம்எல்ஏவின் அசத்தலான காரியம்
நாகை: மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு பேருந்தை 6 கி.மீ தூரம் ஓட்டிய பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் இன்று ஆம்புலன்ஸையும் ஓட்டி அசத்தினார்.
மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பனார்கோவிலை அடுத்த அரங்கக்குடி வடகரையில் தனியார் அறக்கட்டளை சார்பில் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா மாவட்ட திமுக வர்த்தக அணி அமைப்பாளர் சம்சுதீன் தலைமையில் நடைபெற்றது.
இந்தியாவில் விடாமல் அதிகரிக்கும் கொரோனா.. 3 லட்சத்தை தாண்டி தினசரி கேஸ்கள்.. கேரளா, கர்நாடகா மோசம்
இதில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், திமுக மாவட்ட பொறுப்பாளருமான நிவேதா முருகன் கலந்துகொண்டு ஆம்புலன்ஸ் வாகனத்தின் சாவியை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக வழங்கினார்.

ஆம்புலன்ஸ் வாகனம்
இதையடுத்து ஆம்புலன்ஸ் வாகனத்தை வடகரையிலுள்ள தெருக்களில் அவர் இயக்கி பார்த்தார். இதே போல் அவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அரசு பேருந்தையும் இயக்கினார். கடந்த சட்டசபை தேர்தலின் போது வாக்கு சேகரிக்க தரங்கம்பாடி தாலுக்கா திருவிடைகழி கிராம மக்களிடம் நிவேதா முருகன் சென்றார்.

மயிலாடுதுறை
அப்போது அவர்கள் திருவிடைக்கழியில் இருந்து மயிலாடுதுறைக்கு சென்று வந்த அரசு நகர பேருந்து சேவை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திடீரென நிறுத்தப்பட்டது. இதனால் அப்பகுதியை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்களும் பொதுமக்களும் சிரமத்தை சந்தித்து வருவதாக தெரிவித்தனர். இதனால் நிறுத்தப்பட்ட பேருந்து சேவையை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர்.

தேர்தலில் வென்ற எம்எல்ஏ
இந்த நிலையில் தேர்தலில் வென்ற நிவேதா முருகன் , கடந்த 4 தினங்களுக்கு முன்பு திருவிடைக்கழி- மயிலாடுதுறை இடையே A31 பேருந்து சேவையை தொடங்கி வைத்தார். மேலும் அதே பேருந்தில் ஏறி திருவிடைக்கழியிலிருந்து சங்கரன்பந்தல் வரை 6 கி.மீ. தூரம் பேருந்தை ஓட்டிச் சென்று அசத்தினார்.

பேருந்தை இயக்கிய மயிலாடுதுறை எம்எல்ஏ
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மயிலாடுதுறை எம்எல்ஏ ராஜ்குமார், அவரது தொகுதியில் பேருந்து சேவையை தொடங்கி சுமார் 10 கி.மீ. தூரத்திற்கு பயணிகளுடன் பேருந்தை இயக்கினார். இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் பெண்களுக்கு இலவச பயணம் என்பதால் அவர்களும் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.