அடிச்சார் பாரு அபாயிண்ட்மெண்ட்! ஸ்டாலினின் ஸ்பீடு.. சந்தித்த மறுநாளே அருந்ததியர் மருத்துவருக்கு பணி
நாமக்கல்: சிலுவம்பட்டி அருந்ததியர் குடியிருப்பில் சேர்ந்த ஹோமியோபதி மருத்துவர் ஜெயபிரகாஷை நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசிய நிலையில், இன்று கல்லூரியில் பணிபுரிவதற்கான பணி ஆணையை வழங்கினார் முதலமைச்சர் வழங்கினார்.
நாமக்கல் பொம்மைகுட்டை மேட்டில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நகர்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு நடைபெற்றது.
காலை 9:30 மணிக்கு தொடங்கி மாலை 5 மணியுடன் நிறைவுபெற்ற இந்த மாநாட்டிற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாமக்கல் சென்றுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் முகமெல்லாம் ஒரே பூரிப்பு! ராஜேஷ்குமார் எம்.பிக்கு செம கவனிப்பு! நாமக்கல் ருசிகரம்!

கலைகட்டும் நாமக்கல்
இந்த மாநாட்டில் தமிழ்நாடு முழுவதும் திமுக மூத்த நிர்வாகிகள் மாநகராட்சிகளின் மேயர்கள், துணை மேயர்கள், நகராட்சி தலைவர்கள், நகராட்சி துணைத் தலைவர்கள், பேரூராட்சித் தலைவர்கள், பேரூராட்சி துணைத் தலைவர்கள் என பலர் கலந்துகொண்டனர். இந்த பிரமாண்ட நிகழ்வில் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான கடமைகளை முதலமைச்சர் விளக்கினார்.

ஸ்டாலினுக்கு வரவேற்பு
இந்த மாநாட்டில் பங்கேற்பதற்கு முன்பாக அண்டை மாவட்டமான கரூர் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதனை தொடர்ந்து பரமத்திவேலூர் காவேரி பாலம் வழியாக நாமக்கலுக்கு அவர் சென்றார். அங்கு கீரம்பூர் சுங்கச்சாவடிக்கு வந்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அமைச்சர் மதிவேந்தன் தலைமையில் திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அருந்ததியர் காலனி
அங்கிருந்து முதலமைச்சர் தங்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சுற்றுலா மாளிகை வரை 6 கிலோ மீட்டர் தூரம் வரை தொண்டர்கள் வழிநெடுக சாலையோரம் நின்று உற்சாக வரவேற்பு வழங்கினர். இந்த நிலையில் நேற்று மாலை நாமக்கல் சிலுவம்பட்டியில் உள்ள அருந்ததியர் காலனிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றார். அங்கு வீதிகளில் அருந்ததியர் மக்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

கருத்து கேட்பு
அங்குள்ள படித்த இளைஞர்களை சந்தித்து ஆட்சி குறித்த கருத்துக்களை கேட்டறிந்தார். அவர்கள் செய்யும் வேலைகள் குறித்தும் அங்கிருக்கும் வேலைவாய்ப்புகள் குறித்தும் அவர் வினவினார். அத்துடன் அங்குள்ள ஏழை எளிய மக்களை சந்தித்து குறைகளை அவர் விசாரித்தார். அப்போது அங்கு குடியிருந்த ஹோமியோபதி மருத்துவர் ஜெயபிரகாஷ் என்பவரது வீட்டுக்கு சென்ற முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களிடம் தேநீர் அருந்தினார்.

பணி ஆணை
அப்போது முதலமைச்சரிடம் மருத்துவர் ஜெயபிரகாஷ் தனக்கு பணி கிடைக்க உதவுமாறு கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது. அவரது நிலையை உணர்ந்த முதலமைச்சர் உதவுவதாக உறுதியளித்தார். இந்த நிலையில் இன்று, ஜெயபிரகாஷிடம் கல்லூரியில் பணிபுரிவதற்கான பணி ஆணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வழங்கினார். கோரிக்கை விடுத்த மறுநாளே பணி கிடைத்ததால் ஜெயபிரகாஷும் அவரது குடும்பத்தினரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.