பயங்கரம்.. அமெரிக்காவில் மர்மநபர் துப்பாக்கி சூடு.. 4 பேர் பலி.. கொலையாளியை சுட்டு வீழ்த்திய போலீஸ்
நியூயார்க்: அமெரிக்காவில் மீண்டும் ஒரு துப்பாக்கி சூடு சம்பவம் நடந்துள்ளது.. இதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
கடந்த வாரம், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் உவால்டே பகுதியில் தொடக்கப் பள்ளிக்கூடம் ஒன்றுக்குள் 18 வயதுள்ள மர்ம நபர் திடீரென துப்பாக்கியுடன் நுழைந்துள்ளார்..
அப்போது அந்த நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 19 குழந்தைகள் உள்பட 21 பேர் கொல்லப்பட்டனர்.. உவால்டே நகரில் ரோப் என்ற தொடக்கப்பள்ளியில் நடந்த கொடூர தாக்குதலில் 5 முதல் 11 வயதுக்கு உட்பட்ட 19 குழந்தைகளும், 2 ஆசிரியர்களும் சுருண்டு விழுந்து உயிரிழந்தனர்..
அமெரிக்காவில் டெக்சாஸில் பள்ளியில் புகுந்து துப்பாக்கிச் சூடு.. விசாரணையில் பகீர் தகவல்கள்

அதிர்ச்சி
இந்த தொடர் துப்பாக்கி சூடு சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது... இது தொடர்பான விசாரணையே இன்னும் முடிவடையாத நிலையில், மீண்டும் ஒரு துப்பாக்கி சூடு சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.. ஓக்லஹோமா நகரில் உள்ள துல்சா மருத்துவமனை வளாகத்தில் திடீரென புகுந்த மர்மநபர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளார்... அது ஒரு 5 மாடி கட்டிட மருத்துவமனையாகும்.. அங்குதான் திடீரென அந்த நபர் புகுந்துவிட்டார்.. அங்கிருந்த நபர்கள் மீது கண்மூடித்தனமாக சுட்டதில் 4 பேர் அங்கேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர்..

வளாகம்
தகவலறிந்த ஆயுதப்படை போலீசார், உடனடியாக மருத்துவமனை வளாகத்தை சுற்றி வளைத்தனர்... துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.. இதையடுத்து, துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை சுற்றிவளைத்த போலீசார், அங்கேயே அவரையும் சுட்டுவீழ்த்தினர்... எனினும், இந்த துப்பாக்கிச் சூடு எதற்காக நடத்தப்பட்டது என தெரியவில்லை.. இந்த துப்பாக்கி சூட்டில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்று கண்டறிந்து வருகிறோம் என்கிறார்கள் போலீசார்..

துப்பாக்கி சூடு
இந்த துப்பாக்கி சூட்டில் மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.. அவர்கள் அனைவரும் உயிருக்கு ஆபத்தான நிலைமையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.. இந்த சம்பவத்தினால், அந்த மருத்துவமனை வளாகமே ஒரு போர் களம் போல் காட்சி தந்ததாக போலீசார் சொல்கிறார்கள்.. அந்த மருத்துவமனையின் ஒவ்வொரு வளாகத்திலும், ஒவ்வொரு அறையிலும், கொலையாளிகள் வேறு யாராவது இருக்கிறார்களா? என்று சோதனை நடத்தி வருகிறார்கள்..

புள்ளிவிவரம்
அமெரிக்காவில் இந்த துப்பாக்கிச் சூடு கலாச்சாரம் என்பது பெரும் பிரச்சனையாக உள்ளது. இந்த வருடம் மட்டும் 200க்கும் மேற்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அமெரிக்காவில் நடந்துள்ளன..அதுமட்டுமல்ல, அமெரிக்காவில் மட்டும்தான் உலகிலேயே மக்கள் தொகையைக் காட்டிலும் துப்பாக்கிகள் எண்ணிக்கை அதிகம் என்கிறது ஒரு புள்ளி விவரம்.. அதாவது 100 பேருக்கு 120.48 துப்பாக்கி இருக்கிறதாம்.. ஆனால், எல்லாரிடமும் துப்பாக்கி இருப்பது தான் பாதுகாப்பு என்று அம்மக்கள் நினைக்கிறார்களாம்.. எனினும், தொடர் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அமெரிக்க மக்களை நிலைகுலைய வைத்து வருகிறது.