அமெரிக்காவில் உச்சகட்ட துயரம்: கொரோனா மரணங்கள் 50 ஆயிரத்தை தாண்டியது
நியூயார்க்: அமெரிக்காவில் கொரோனாவின் மரணங்கள் 50 ஆயிரத்தை தாண்டியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலக நாடுகளில் கொரோனாவின் தாக்கம் 4-வது மாதமாக தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த நூற்றாண்டில் மனிதகுலத்தை நாசமாக்கிய மிக மோசமான தொற்று கொரோனா.
உலகம் முழுவதும் கொரோனாவால் 27, 66,172 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் உச்சகட்டமாக 2 லட்சம் பேர் வரை கொரோனாவுக்கு உயிரிழந்தும் போயுள்ளனர். சீனாவில்தான் கொரோனா பரவல் தொடங்கியது என்றாலும் மிக மோசமான அழிவை அமெரிக்காதான் தற்போது சந்தித்து வருகிறது.
24 மணிநேரத்தில் 1752 பேருக்கு கொரோனா தொற்று- நாடு முழுவதும் பாதிப்பு எண்ணிக்கை 23,452

50 ஆயிரத்தை தாண்டிய யு.எஸ். மரணம்
அமெரிக்காவில் கொரோனாவால் மரணித்தோர் எண்ணிக்கை 50,849 ஆகும். நாள்தோறும் ஆயிரக்கணக்கில் கொரோனாவால் மாண்டுபோகின்றனர். இதுவரை கொரோனாவால் அமெரிக்காவில் மட்டும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 8,92,761. அமெரிக்காவின் நியூயார்கில் 21,283 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கு அடுத்ததாக நியூ ஜெர்சி மாகாணத்தில் 5,428 பேர் பலியாகி உள்ளனர்.

2-வது இடத்தில் இத்தாலி
அமெரிக்காவை தொடர்ந்து இத்தாலியில் மிக அதிக மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இங்கு மொத்தம் 25,549 பேர் பலியாகி உள்ளனர். இத்தாலியில் இதுவரை மொத்தம் 1,89,973 பேர் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3-வது நாடாக ஸ்பெயின் உள்ளது. ஸ்பெயினில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 22,524 ஆக உயர்ந்திருக்கிறது.

4-வது இடத்தில் பிரான்ஸ்
உலகில் கொரோனாவால் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்ட நாடுகளில் 4-வதாக உள்ளது பிரான்ஸ். இங்கு 1,58,183 கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 21,856 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கு அடுத்த இடத்தில் இங்கிலாந்து உள்ளது. இங்கு கொரோனாவால் மரணித்தவர்கள் எண்ணிக்கை 20 ஆயிரத்தை நெருங்கிவிட்டது. மொத்தம் 143,464 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பெல்ஜியத்தில் அதிக மரணங்கள்
பெல்ஜியத்தில் 44,293 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் மரணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 6,679 ஆக உயர்ந்திருக்கிறது. ஜெர்மனியில் 5,577 பேரும் ஈரானில் 5,574 பேரும் கொரோனாவால் உயிரிழந்திருக்கின்றனர். பிரேசில் நாட்டில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 3,365.