அச்சு அசலாக.. அப்படியே யானை மாதிரியே.. அசர வைக்கும் சாக்லேட் கேக் செய்த அமரி!
நியூயார்க்: சாக்லேட் கொண்டு நிற்பது போன்ற யானை சிலை ஒன்றைச் செய்து அசர வைத்துள்ளார் ஜெனீவாவைச் சேர்ந்த செஃப் ஒருவர்.
சமீபகாலமாக கேக்குகளில் விதவிதமான உருவங்களை செய்யும் பொழுதுபோக்கு பிரபலமாகியுள்ளது. வட்டம், சதுரம் என்பதைத் தாண்டி பிடித்தமான விலங்குகள், காட்சிகள், உருவங்கள் போன்றவற்றை செய்து அசத்தி வருகின்றனர் கேக் செய்யும் வல்லுநர்கள்.
அப்படிப்பட்டவர்களில் ஒருவர் தான் அமரி கிச்சான் என்ற பேஸ்ட்ரி செஃப். சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவைச் சேர்ந்த இவர் சாக்லேட், மாவு உள்ளிட்டவைகளை கொண்டு விதவிதமான கேக்குகளை செய்வதில் கைத்தேர்ந்தவர். கொரில்லா, தொலைநோக்கி என பலவகையான சாக்லேட் கேக் சிலைகளை செய்து அசத்தி இருக்கிறார்.

சாக்லேட் கேக்குகள்
இவரது ஒவ்வொரு கேக்குகளுமே சமூகவலைதளத்தில் லைக்குகளை அள்ளுவது வழக்கம். இன்ஸ்டாகிராமில் இவரை சுமார் 2.6 மில்லியன் மக்கள் பாலோ செய்து வருகின்றனர். தனது பாலோயர்களை மகிழ்விக்கும் வகையில் தான் சாக்லேட் கேக்குகளை உருவாக்கும் வீடியோக்களையும் அவ்வப்போது வெளியிட்டு வருகிறார் அமரி.

சாக்லேட் யானை
அந்தவகையில் தற்போது சாக்லேட்டில் நிற்பது போன்ற யானை சிலை ஒன்றை செய்து அசர வைத்துள்ளார் அமரி கிச்சான். இதுதொடர்பாக தனது சமூகவலைதளப் பக்கத்தில் அமரி பதிவிட்டுள்ள வீடியோவில், ஆரம்பம் முதல் முடிவு வரை சாக்லேட் யானை சிலை செய்வதை அவர் காட்சிப்படுத்தியுள்ளார்.

தத்ரூபமான சிலை
அந்த வீடியோவில், சாக்லேட்டை கொண்டு தும்பிக்கை, கால்கள், தந்தம் என யானையின் அனைத்து உறுப்புகளையும் ஒவ்வொன்றாக மிக தத்ரூபமாக வடிவமைக்கிறார் அமரி. குழல் போன்ற சாக்லேட் உருளை மற்றும் முட்டை போன்ற வடிவத்தை வைத்தே அந்த யானையின் சிலையை அவர் உருவாக்கியுள்ளார். இறுதியாக யானைக்கு அடியில் சில செடிகளையும் செய்து பார்ப்பதற்கு நிஜ யானை போன்ற தோற்றத்தை உருவாக்கி அசர வைக்கிறார் அமரி.

அமரிக்கு பாராட்டு
அமரி கிச்சானின் இந்த சாக்கேட் யானை சிலை செய்யும் வீடியோ நெட்டிசன்களை வெகுவாக கவர்ந்துள்ளது. சாக்லேட்டில் நின்றபடி இருக்கும் இந்த யானையை பார்க்க அத்தனை அழகாக இருப்பதாக பலரும் கமெண்ட் செய்துள்ளனர். இதை சாப்பிடவே மனது வராதே என அமரியின் படைப்பை அவர்கள் பாராட்டி வருகின்றனர்.