நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவை FETNA-ன் புதிய செயற்குழு! தமிழ்ப் பள்ளிகளுக்கு உதவி திட்டம்!

Google Oneindia Tamil News

நியூயார்க்: வட அமெரிக்க தமிழ்ச் சங்கப்பேரவையான FETNA (ஃபெட்னா) புதிய செயற்குழு தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் பெட்னாவின் ஏற்பாட்டில் தமிழ்ப் பள்ளிகளுக்கான உதவி திட்டமும் வெளியிடப்பட்டுள்ளது.

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 2020 - 22 ஆண்டுக்கான புதிய செயற்குழு அறிமுகக்கூட்டம் இணைய வழியில், பேரவையின் முதலாவது தலைவர் திரு.முத்தரசன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. தமிழக தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாண்புமிகு மாஃபா பாண்டியராஜன் அவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

FETNAs New Team and Plan for Tamil Schools in US

தாய்த்தமிழ்ப் பள்ளிகளுக்கு பேரவையின் உதவி

புதிய செயற்குழுவின் முதற் பணியாக நிதிச்சுமையில் சிக்கித் தவிக்கும் 21 தாய்த்தமிழ்ப் பள்ளிகளுக்கும், பேரவையும், உறுப்பினர் தமிழ்ச்சங்கங்களும், அமெரிக்காவில் உள்ள தமிழ்ப் பள்ளிகளும், நன்கொடையாளர்களும் இணைந்து, நிதி உதவி செய்யும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த முயற்சியை முன்னெடுக்கக் குழு ஒன்று அமைக்கப்பட்டு, அதற்கு மருத்துவர் பழனிச்சாமி சுந்தரம், மருத்துவர் ஜானகிராமன் (ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்கு அரை மில்லியன் டாலர் நிதி அளித்தவர்), முனைவர் பாலா சுவாமிநாதன் மற்றும் கால்டுவெல் வேள்நம்பி ஆகியோர் முன்னின்று நடத்துவர் என்று அறிவிக்கப்பட்டது.

அதற்கென தனி வங்கிக்கணக்கு தொடங்கப்பட்டு பேரவையின் புதிய செயற்குழுவினர் 5000 டாலர்கள் நன்கொடை அளிக்க முன் வந்துள்ளனர். மேலும் அமெரிக்காவில் இதில் பங்களிக்கும் முதற் தமிழ்ச்சங்கமாக, மெட்ரொபிள்க்ஸ் தமிழ்ச்சங்கம் 10,000 டாலர்களை முதற் தவணையாக அளிப்பதாக, அதன் தலைவர் திரு.அருண் குமார் உறுதி அளித்தார்.

அமெரிக்கத் தமிழ்க் கல்விக்கழகத் தலைவர் திரு.கரு. மாணிக்கவாசகம், உலகத் தமிழ்க் கல்விக்கழக தலைவர் திருமதி. வெற்றிச்செல்வி இராஜமாணிக்கம் அவர்களும், குழுவினரிடன் கலந்து பேசி உதவி அளிப்பதாக உறுதி அளித்தனர்.

நியூயார்க் திருமதி.காஞ்சனா பூலா அவர்கள் 10,000 டாலர்கள் மற்றும் மேனாள் தலைவர் திரு.முத்தரசன் அவர்கள் 1000 டாலர்கள் நிதி வழங்குவதாக கூட்டத்திலேயே உறுதி அளித்தனர்.

தாய்த்தமிழ்ப் பள்ளிகளுக்கு தமிழக அரசின் உதவி

கூட்டத்தில் பேசிய தமிழக தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் திருமிகு.மாஃபா பாண்டியராஜன் அவர்கள், அனைத்துத் தாய்த்தமிழ்ப் பள்ளிகளையும் ஒன்றிணைக்க உதவிய வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை, பேராசிரியர். கல்யாணி, திரு.குமணன் மற்றும் திரு.கீர்த்தி ஜெயராஜ் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். தமிழக அரசு சார்பாக, அனைத்துத் தாய்த்தமிழ்ப் பள்ளிகளுக்கும், நூலகம் கட்டித் தர முடிவு செய்துள்ளதாக அறிவித்தார்.

அஸ்ஸாம் நபரால் கடத்தப்பட்ட 3 வயது குழந்தை மீட்பு.. செங்கல்பட்டில் 7 நாளுக்கு பிறகு மீட்கப்பட்டார்!அஸ்ஸாம் நபரால் கடத்தப்பட்ட 3 வயது குழந்தை மீட்பு.. செங்கல்பட்டில் 7 நாளுக்கு பிறகு மீட்கப்பட்டார்!

மேலும் தாய்த்தமிழ்ப் பள்ளிகளில் தமிழ்ப் பயிற்சி மையம் அமைத்து, அங்கு வெளி மாநிலங்களிலிருந்து தமிழ் நாட்டிற்கு புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வார இறுதி நாட்களில் தமிழ் கற்றுத்தர வசதி ஏற்படுத்தித் தரப்படும் என்றும் தெரிவித்தார். ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கு திரட்டப்பட்டத் தொகையில், மீதி இருக்கும் நிதியினை, தாய்த்தமிழ்ப் பள்ளிகளுக்கு உதவி செய்யப் பயன் படுத்தப்படும் என்றும் அறிவித்தார்.

தாய்த்தமிழ் பள்ளிகளுக்கு உதவி செய்யும் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் திட்டத்திற்கு வாழ்த்து தெரிவித்து விடைபெற்றார்.

பேரவையின் புதிய செயற்குழு

அடுத்த நிகழ்வாக, பேரவையின் புதிய செயற்குழு அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

புதிய செயற்குழு விவரம்.

  • தலைவர் - திரு. கால்டுவெல் வேள்நம்பி
  • துணைத் தலைவர் - திரு. சுந்தரபாண்டியன் சபாபதி
  • துணைத் தலைவர் - திருமதி. புஷ்பராணி வில்லியம்ஸ்
  • செயலாளர் - முனைவர் பாலா சுவாமிநாதன்
  • இணைச் செயலாளர் - திரு. இளங்கோவன் தங்கவேலு
  • பொருளாளர் - திரு. சிவம் வேலுப்பிள்ளை
  • இயக்குனர் - திருமதி. பமிலா வெங்கட்
  • இயக்குனர் - திரு.கிங்ஸ்லி சாமுவேல்
  • இயக்குநர் - திரு. பழனிச்சாமி வீரப்பன்
  • இயக்குனர் - திரு. சுந்தர் குப்புசாமி

மாபெரும் தமிழ்க்கனவு கண்ட பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளன்று, தாய்த்தமிழ்ப் பள்ளிகளுக்கு உதவிடும் சீரிய பணியுடன் புதிய செயற்குழு தன் செயற்பாடுகளைத் தொடங்கியது.

"தாளாற்றித் தந்த பொருளெல்லாந் தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு" என்ற வள்ளுவன் வாக்கிற்கிணங்க அமைந்தது மனதிற்கு நிறைவாக இருந்தது.

செய்தி: சுந்தரபாண்டியன் சபாபதி.

English summary
Here is the details of FeTNA (Federation of Tamil Sangams of North America)'s new team and Plans for the Tamil Schools.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X