Great Maya Angelou: வலிகளின் முடிச்சு.. முதல்முறை கருப்பின பெண் உருவம் பொறித்த நாணயம்.. சபாஷ் மாயா
நியூயார்க்: அமெரிக்க வரலாற்றிலேயே முதல்முறையாக கருப்பின பெண் ஒருவரின் உருவம் பொறித்த நாணயம் வெளியிடப்பட்டுள்ளது.. இந்த பெருமைக்கு சொந்தக்காரர் மாயா ஏஞ்சலோ ஆவார்..!
யார் இந்த மாயா ஏஞ்சலோ?
கறுப்பின எழுத்தின் பெண்ணிய அடையாளமாக திகழ்ந்தவர் மாயா ஏஞ்சலோ... இன்று உலகம் போற்றும் இந்த பெண்ணின் வாழ்க்கை ஆரம்ப காலத்தில் அவ்வளவு ஆனந்தமாய் இல்லை.
கொரோனா: தமிழக அரசின் விதிகளை மீறிய 6 மருத்துவமனைகளுக்கு நோட்டீஸ்.. சென்னை மாநகராட்சி அதிரடி!
கரடுமுரடுகளாய் நிரம்பி போன பாதையில்தான் மாயாவின் வாழ்க்கை ஆரம்பமானது.. மிக எளிமையான குடும்பத்தில் பிறந்தவர்.. அதனாலேயே ஏராளமான ஒடுக்குமுறைகளை நேரடியாக சந்தித்தவர்.. தன்னை ஒரு எழுத்தாளராக இவர் பரிணமித்து கொள்வதற்கான பாடங்களை சமூகத்தில் இருந்தே கற்றார்.. அங்கிருந்தே பெற்றார்..!

நடிகை
எழுத்தாளரையும் தாண்டி, மாயா ஒரு நடிகை.. நாடக ஆசிரியர்... பாடலாசிரியர்.. பத்திரிகையாளர்.. எல்லாவற்றிற்கும் மேலாக பெண்ணுரிமைப் போராளி... இந்த போராட்டத்தில்தான் மாயா தன்னை அடையாளப்படுத்தி கொள்கிறார்... இதைவிட முக்கியம், ஒரு கவிஞராகவும் எழுத்தாளராகவும் தனக்கான அங்கீகாரத்தை பெறுவதற்கு முன்பு, மாயா ஒரு சமையல்காரர்.. பாலியல் தொழிலாளி.. இரவு விடுதிகளில் நடனம் ஆடுதல்.. இப்படியான வேலைகளை பார்க்கும்போதுதான், சமூகத்துடன் அவருக்கு நேரடியாக உரையாட முடிந்திருக்கிறது.

தாக்குதல்கள்
பொதுவாக, குழந்தைகள் மீதான வன்முறைகள், வெளிநபர்களால் நிகழ்த்தப்படுவதில்லை.. அவர்களுடன் நெருக்கமாக பழகும் நண்பர்கள், உறவினர்கள, குடும்ப உறுப்பினர்களிடம்தான் ஏற்படும் என்பார்கள்.. அதுபோல தான் மாயாவுக்கும் நேர்ந்தது.. 8 வயதாக இருக்கும்போதே, தன் அம்மாவின் நண்பரால் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார்... பிஞ்சு வயதிலேயே ஒடுக்குமுறைக்கும், அடக்குமுறைக்கும், தன்னை காப்பாற்ற கொள்ள போராட முடியாத இயலாமையிலும் சிக்கி கொள்கிறார்.. இப்படித்தான் மாயாவின் வாழ்க்கை தொடங்கியது.

கறுப்பின
17 வயதிலேயே வலிகள் நிறைந்த எழுத்துக்களை எழுத ஆரம்பிக்கிறார்.. நிறைய கட்டுரைகளையும், கவிதை தொகுப்புகளையும் வெளியிடுகிறார்.. ஒரு கறுப்பின பெண்ணுக்கான சிக்கல்கள் அனைத்தையுமே, கொஞ்சமும் துயரம் குறையாமல் தன் எழுத்தில் கொட்டி கொட்டி தீர்த்தார் மாயா.. அந்த எழுத்துக்கள் கறுப்பின பெண்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றன.. குறிப்பாக இவர் எழுதிய "கூண்டுப் பறவை ஏன் பாடுகிறது என்று எனக்குத் தெரியும்" என்ற சுயசரிதை உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்தது..

நாணயம் வெளியீடு
பல விருதுகளை பெற்று தந்தது. 2010-ம் ஆண்டு அமெரிக்காவின் உயரிய மக்கள் விருதான ஜனாதிபதி விருது வழங்கப்பட்டது. பெண் விடுதலையின் அடையாளமாக வாழ்ந்து முடித்த மாயா, கடந்த 2014-ல் இறந்துவிட்டார்.. இப்படிப்பட்ட மாயாவின் நினைவாக, அவரது உருவம் பொறித்த ¼ டாலர் நாணயத்தை அமெரிக்கா வெளியிட்டுள்ளது... அமெரிக்க வரலாற்றில் கருப்பின பெண் ஒருவரின் உருவம் பொறித்த நாணயம் வெளியிடப்படுவது இதுவே முதல் முறையாகும்.

மறுவடிவமைப்பு
அமெரிக்காவின் முதல் பெண் நிதித்துறை செயலாளரான ஜெனட் லெயனால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.. இதை பற்றி அவர் சொல்லும்போது, "ஒவ்வொரு முறையும் நமது நாணயத்தை மறுவடிவமைப்பு செய்யும் போது, நமது நாட்டை பற்றி நாம் எதை மதிக்கிறோம், ஒரு சமூகமாக நாம் எப்படி முன்னேறி வருகிறோம் என்பதை பற்றி ஏதாவது சொல்ல வாய்ப்பு உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

எழுத்துக்கள்
மாயாவின் எழுத்துக்களே இத்தகைய பெருமையை இன்று ஏற்படுத்தி தந்துள்ளது என்பதை மறுக்க முடியாது.. கருப்பின கவிதைகளுக்கே உரிய வீரியத்தன்மை கொஞ்சம்கூட குறையாமல் உள்ளதே மாயாவின் ஆகச்சிறந்த பலமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது.. பொதுவாக, எதையும் மறைக்காமல் வெளிப்படையாக பேசும் கவிதைகள் உலகில் எங்கிருந்தாலும் ஒளிவீசிவிடும்.. அப்படித்தான் மாயாவின் அழுத்தமான ஆணித்தரமான எழுத்துக்களும் திகழ்ந்து கொண்டிருக்கின்றன..

விருது
ஆம்.. மாயாவின் எழுத்துக்கள் ஒவ்வொன்றும் கண்ணீராலும், பசியாலும், அவமானத்தினாலும் எழுதப்பட்டவை.. அதனால்தான் அந்த வலியில் இருந்து தன்னை விடுவித்து கொள்ள முடியாமல் இன்னமும் தகித்து கொண்டேயிருக்கிறது..!