கொரோனா காலத்தில் நீட், ஜேஇஇ தேர்வுகளை இந்தியா நடத்துவது நியாயமற்றது.. சிறுமி கிரேட்டா ஆவேசம்
நியூயார்க்: இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு மத்தியில் ஜேஇஇ மற்றும் நீட் தேர்வுகளை நடத்துவது நியாயமற்றது என சமூக ஆர்வலரான சிறுமி கிரேட்டா தன்பெர்க் ஆவேசமாக தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 32 லட்சத்தை தாண்டியுள்ளது. இதுவரை 59,612 பேர் பலியாகிவிட்டனர். கடந்த மார்ச் மாதம் முதல் தற்போது வரை இந்தியாவில் இயல்பு நிலை திரும்பவில்லை.
இந்த நிலையில் நீட் தேர்வுகள் வரும் செப்டம்பர் மாதம் 13 ஆம் தேதியும் ஜேஇஇ தேர்வுகள் வரும் செப்டம்பர் மாதம் 1 முதல் 6-ஆம் தேதியும் நடத்தப்படும் என தேசிய தேர்வுகள் ஆணையம் கறாராக அறிவித்துவிட்டது.
செப்டம்பர் 13ம் தேதி நீட் தேர்வு.. செப்டம்பர் 1-6 வரை ஜேஇஇ தேர்வு.. தேசிய தேர்வு ஆணையம் அறிவிப்பு!

சாதகமான தீர்ப்பு
நீட் தேர்வுகளை நடத்தக் கூடாது என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் அதில் மாணவர்களுக்கு சாதகமான தீர்ப்பு வரவில்லை. இந்த நிலையில் இந்தியா முழுவதும் கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில் ஜேஇஇ, நீட் தேர்வுகளை ஒத்திவைக்குமாறு நீண்ட நாட்களாக பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

முன்னெச்சரிக்கை
நீட் தேர்வுகளை ஒத்தி வைக்குமாறு பலர் ட்விட்டர் மூலம் கருத்து தெரிவித்தார்கள். தேசிய தேர்வுகள் ஆணையம் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்வுகளை நீண்ட நாட்களுக்கு ஒத்தி வைக்க முடியாது என்றும் கூறியுள்ளது.

தேர்வுகள் ஒத்திவைப்பு
இந்த இரு தேர்வுகளிலும் சுமார் 24 லட்சம் மாணவர்கள் பங்கேற்கவுள்ளனர். தேர்வுகளை ஒத்திவைத்தால் மாணவர்களுக்கு ஒரு வருடம் வீணாகிவிடும் என்கிறார்கள். எதிர்காலத்தை விட மாணவர்களின் உடல்நலனே முக்கியம் என்கிறார்கள் பெற்றோர்கள். உலகில் உள்ள கல்வி நிறுவனங்கள் மாணவர் சேர்க்கைக்கு புதிய வழிகளை கடைப்பிடித்து வரும் நிலையில் இந்தியாவில் அதை ஏன் கடைப்பிடிக்க முடியாது என மாணவர்கள் ட்விட்டரில் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

சமூக ஆர்வலர்
#PostponeJEE_NEETinCOVID என்ற ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்திற்கு ஸ்வீடனை சேர்ந்த பிரபல சமூக ஆர்வலரான சிறுமி கிரேட்டா தன்பெர்க் தனது ட்விட்டரில் அந்த ஹேஷ்டேக்குடன் ஒரு சில கருத்துகளை பதிவு செய்துள்ளார். அவர் தனது ட்விட்டரில் கூறுகையில் கொரோனா காலத்தில் தேசிய அளவிலான தேர்வுகளில் மாணவர்களை எழுதுமாறு இந்தியா கூறுவது முற்றிலும் நியாயமற்றது.

கிரேட்டா ஒத்துழைப்பு
கொரோனாவுடன் லட்சக்கணக்கானோர் பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த நிலையில் இந்த தேர்வுகளை நடத்துவதில் எந்த நியாயமும் இல்லை. #PostponeJEE_NEETinCOVID என்ற இந்திய மாணவர்களின் அழைப்பிற்கு நானும் ஒத்துழைப்பு கொடுக்கிறேன் என கிரேட்டா தனது கருத்தில் பதிவிட்டுள்ளார்.