50 வருடம் பின்னோக்கி போன அமெரிக்கா.. இனி பெண்கள் அபார்ஷன் பண்ண முடியாதா? அதிர்ச்சி பின்னணி
நியூயார்க்: உலகில் பெண் உரிமைகளில் மிகவும் பின் தங்கி இருக்கும் நாடுகள் கூட பெண் உரிமைகளை நிலைநாட்டுவதை பற்றி தீவிர விவாதங்களை முன்னெடுத்து வரும் நிலையில்.. தன்னை வளர்ந்த நாடாக காட்டிக்கொள்ளும்.. மேற்கத்திய கலாச்சாரம் கொண்ட உயர்ந்த நாடாக காட்டிக்கொள்ளும் அமெரிக்காவில் கருக்கலைப்பு உச்ச நீதிமன்றம் மூலம் தடை செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் கருக்கலைப்பிற்கு அனுமதி அளித்து வந்த 1972 வழங்கப்பட்ட ரோ vs வேட் வழக்கின் தீர்ப்பை நேற்று இரவு உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. 1972 தீர்ப்பு படி அமெரிக்காவில் எந்த மாகாணத்திலும் பெண்கள், கருக்கலைப்பு செய்ய முடியும். இது அடிப்படை உரிமை என்று கோர்ட் வரையறுத்தது.
ஆனால் தற்போது அந்த தீர்ப்பை நீக்கி.. அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. 50 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பழைய நிலைக்கு அமெரிக்கா சென்றுள்ளது.
அமெரிக்காவில் கருக்கலைப்பு தடை செய்யப்பட்டது ஏன்? கலங்கும் பெண்கள்! கொண்டாடிய டிரம்ப்! விளாசிய பிடன்

தீர்ப்பு 50 வருடம்
சரியாக அமெரிக்கா 50 வருடம் பின்னோக்கி சென்றுள்ளது. இந்த தீர்ப்பின் படி கருக்கலைப்பிற்கு வழங்கப்பட்ட உரிமைகள் நீக்கப்பட்டள்ளன. இதன் காரணமாக இனி பல்வேறு மாகாணங்களில் அங்கு கருக்கலைப்பு செய்யப்படுவது தடை செய்யப்படும். இதனால் அமெரிக்காவில் உள்ள மாகாணங்கள் மீண்டும் கருக்கலைப்பு சட்டங்களை கொண்டு வர முடியும்.50 மாகாணங்களில் பெரும்பாலான மாகாணங்கள் இந்த சட்டத்தை கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எப்படி வந்தது?
கருக்கலைப்பிற்கு எதிராக டிரம்ப் ஆட்சி காலத்தில் செய்யப்பட்ட கடுமையான பிரச்சாரங்கள் இந்த தீர்ப்பிற்கு ஒரு காரணம் ஆகும். டிரம்ப் தனது தேர்தல் பிரச்சாரத்தில் கூட இந்த வாக்குறுதியை கொடுத்தார். இந்த வழக்கில் 9 உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் 6 பேர் கருக்கலைப்பை தடை செய்துள்ளனர். அதில் 3 நீதிபதிகள் டிரம்பிற்கு நெருக்கமானவர்கள். டிரம்ப் மூலம் நியமிக்கப்பட்டவர்கள். அதாவது நேரடியாக நீதிபதிகள் ஆகாமல் நியமன முறையில் டிரம்ப் மூலம் நீதிபதிகள் ஆனார்கள்.

கசிந்த தகவல் போராட்டம்
இதனால் அவர்கள் முன்முடிவோடு அணுகி இந்த தீர்ப்பை வழங்கி உள்ளதாக புகார் வைக்கப்பட்டு இருக்கிறது. கடந்த மாதம் இந்த வழக்கில் ஒரு நீதிபதியான சாமுவேல் அலிட்டோவின் தீர்ப்பு நகல் கசிந்தது. அதிலேயே கருக்கலைப்பிற்கு தடை என்ற வாசகங்கள் இருந்தன. இதற்கு எதிராக அப்போதே பெண்கள் அங்கு கடுமையாக போராட்டம் செய்தனர். இந்த தீர்ப்பு தற்போது வெளியாகி உள்ள நிலையில் பெண்கள் மேலும் போராட்டம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எத்தனை மாகாணங்கள்
இந்த தீர்ப்பு வந்த சில மணி நேரங்களில் வரிசையாக பல மாகாணங்கள் அங்கு கருக்கலைப்பை தடை செய்து உத்தரவிட்டுள்ளது. அலபாமா, அர்கான்சஸ், கென்டகி, லுய்சியானா, மிசோரி, ஓக்லகோமா, தெற்கு டக்கோடா ஆகிய 7 மாகாணங்கள் முதல் கட்டமாக கருக்கலைப்பை தடை செய்துள்ளது. மொத்தாமாக் 50 மாகாணங்களில் 28 மாகாணங்களில் இந்த தடை வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவை எல்லாம் டிரம்பின் குடியரசு கட்சியின் கவனர்களை கொண்ட மாகாணங்கள் ஆகும்.

என்ன செய்ய வேண்டும்?
இந்த மாகாணங்கள் கருக்கலைப்பு தடை செய்யப்பட்டால் அவர்கள் வேறு மாகாணம் செல்ல வேண்டும். உதாரணமாக அலபாமாவில் இருந்து கருக்கலைப்பு செய்ய வேண்டும் என்றால் கலிபோர்னியா போன்ற ஜனநாயக கட்சி கவர்னர்கள் ஆளும் மாகாணங்களுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் இவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதற்காக பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது பல நூறு கிலோ மீட்டர்கள் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

மாத்திரை
அதே சமயம் குடியரசு கட்சி ஆளும் மாகாணங்களில் கருக்கலைப்பு மாத்திரைகள் தடை செய்யப்படலாம். ஆனால் மற்ற மாகாணங்களில் இருந்து மருந்துகளை கொரியர் மூலம் வாங்குவதை மாகாண அரசு தடுக்க முடியாது. இது கூட்டாச்சி சட்டத்தின் கீழ் வரும், இது மாகாணம் - கூட்டாட்சி அரசுகளுக்கு இடையில் மோதலை ஏற்படுத்தும். இதனால் மாத்திரைகளை கொரியர் மூலம் மற்ற மாகாணங்களில் இருந்து வாங்கி கருக்கலைப்பு செய்ய முடியும்.

கருத்தடையிலும் சில தடைகள் வரலாம்
அதே சமயம் அமெரிக்காவில் குடியரசு கட்சி ஆளும் சில மாகாணங்களில் கருத்தடையிலும் சில தடைகள் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சில கருத்தடை சாதனங்கள், கருக்கலைப்பிற்கு ஈடானது என்று பிரச்சாரம் வைக்கப்படுவதால் அதற்கு தடை விதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளது. இதன் காரணம் அமெரிக்காவில் பெண்கள் மட்டுமின்றி LGBTQA+ பிரிவினர் கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. இந்த தடைக்கு எதிராக அங்கு போராட்டங்கள் தொடங்கி உள்ளன.