ஒரே பள்ளியில் 50 ஆண்டுகள்.. ஓய்வு பெற்ற ஆங்கில ஆசிரியைக்கு பிரியாவிடை கொடுத்த பள்ளி!
நியூயார்க்: ஒரே பள்ளியில் ஐம்பது ஆண்டுகள் ஆங்கில ஆசிரியையாக பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஆசிரியைக்கு, பள்ளியே சேர்ந்து நின்று கை தட்டி பிரியாவிடை கொடுத்த வீடியோ நெட்டிசன்களை நெகிழ வைத்துள்ளது.
நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் மறக்க முடியாதவர்கள் ஆசிரியர்கள். சிறுவயதில் நம்மால் அதிகம் வெறுக்கப்பட்டவர்களாகவும், பெரியவர்களானதும் நம்மால் அதிகம் நினைத்துப் பார்க்கப்பட்டவர்களாகவும் ஆசிரியர்கள் நிச்சயம் இருப்பார்கள். அதனால்தான் மாதா, பிதாவிற்கு அடுத்த இடத்தில் குருவை வைத்தார்கள்.
காஷ்மீர் பண்டிட்டுகள் மீண்டும் வெளியேற்றம்..இப்பவும் சினிமா எடுங்க- மத்திய அரசு மீது சிவசேனா அட்டாக்
அதிலும் ஒரே பள்ளியில் ஐம்பது ஆண்டுகள் வேலை பார்த்தவர் என்றால் எவ்வளவு மாணவர்களின் அன்பைச் சம்பாதித்து வைத்திருப்பார். அப்படிப்பட்ட ஆசிரியை ஒருவருக்கு பள்ளியே சேர்ந்து பிரியாவிடை கொடுத்த வீடியோ தற்போது நெட்டிசன்களை தங்களது பள்ளிப்பருவத்திற்கு அழைத்துச் சென்றுள்ளது.

இன்ஸ்டா வீடியோ
அமெரிக்காவைச் சேர்ந்த கேத்ரீன் என்பவர் இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவரது தாய் தான் அந்த வீடியோவில் இருக்கும் ஓய்வு பெறும் ஆசிரியை. தனது தாயின் பெயரை அவர் தனது வீடியோவில் குறிப்பிடவில்லை.

ஒரே பள்ளியில் 50 ஆண்டுகள்
அந்த ஒரே பள்ளியில் கேத்ரீனின் தாய் சுமார் 50 ஆண்டுகள் ஆங்கில ஆசிரியையாக பணி புரிந்து வந்துள்ளார். தனது 22 வயதில் அங்கு பணிக்கு சேர்ந்தவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு பணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். ஒரே பள்ளியில் 50 ஆண்டுகள் பணிபுரிந்தவர் என்பதால், பள்ளியே சேர்ந்து வந்து அவருக்கு பிரியாவிடைக் கொடுத்துள்ளது.

ஆனந்தக் கண்ணீர்
தனது கடைசி வேலை நாள் முடிந்து, வீட்டுக்கு கிளம்பும் அந்த அசிரியை, மாடிப் படிக்கட்டுகளில் இறங்கி வருகிறார். அப்போது இரண்டு புறமும் மற்ற ஆசிரியர்களும், மாணவர்களும் நின்று கைதட்டி, அவரைப் பாராட்டி மரியாதை செய்கின்றனர். இதனால் நெகிழ்ச்சி அடையும் அவரால் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

குவியும் லைக்குகள்
கண்ணீரோடு நன்றி கூறியபடியே நடந்து செல்கிறார். அப்போது சக ஆசிரியர் ஒருவர் கண்ணீரைத் துடைத்துக் கொள்ள டிஸ்யூ பேப்பரைக் கொடுக்கிறார். அதனை வாங்கிக் கண்ணீரைத் துடைத்தபடியே நடந்து செல்கிறார் அந்த ஆசிரியை. பார்ப்பவர்களையும் நெகிழச் செய்யும்படி உள்ள இந்த வீடியோவிற்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.