தூக்கத்திலேயே பிரிந்த 7 பிஞ்சுகளின் உயிர்கள்.. அப்பார்ட்மென்டில் தீ .. 13 பேர் பலி.. அமெரிக்காவில்!
நியூயார்க்: அமெரிக்காவில், அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 குழந்தைகள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். பிலடெல்பியாவில் இந்த சோகம் நிகழ்ந்துள்ள நிலையில் 2வது நாளாக மீட்பு பணி நடந்து வருகிறது.. உயிர்பலி அதிகம் இருக்கக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.
அமெரிக்காவில் பென்சில்வேனியா மாகாணத்தில் பிலடெல்பியா பகுதியில் 3 அடுக்குமாடி குடியிருப்பில் ஏராளமானோர் குடும்பத்துடன் வாழ்ந்து வருகின்றனர்..

இந்நிலையில், காலையில் அந்த குடியிருப்பின் 2வது தளத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அங்குள்ள நேரத்தின்படி சுமார் காலை 6.40 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது..
குழந்தைகள் உட்பட அனைவருமே தூங்கி கொண்டிருந்துள்ளனர்.. உடனடியாக வீடுகளுக்குள் தீபிடிக்க ஆரம்பித்ததும், அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்து, தீயணைப்பு துறையினருக்கு தகவல் தந்தனர்.. வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, ஏறக்குறைய 50 நிமிட போராட்டத்திற்குப் பிறகு அந்த தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்..
அமெரிக்காவில் சோகம்.. குடியிருப்பில் பயங்கர தீ விபத்து.. 7 குழந்தைகள் உள்பட 13 பேர் உயிரிழப்பு!
மொத்தம் 26 பேர் இந்த தளத்தில் தங்கியிருந்திருக்கிறார்கள்.. 2 நுழைவாயில்கள் இருந்தும், ஒன்றின் வழியாக 8 பேர் மட்டுமே அந்த கட்டிடத்திலிருந்து தப்பிக்க முடிந்தது, .. எனினும், இந்த தீ விபத்தில் 7 குழந்தைகள் உட்பட 13 பேர் உயிரிழந்ததாக பிலடெல்பியா தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது...மேலும் 2 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது.. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் 4 தீ கண்டறியும் கருவிகள் இருந்துள்ளன...

எப்போதும் அவை செயல்பாடுகளில் இருந்து கொண்டே இருக்கவேண்டுமாம்.. ஆனால் நேற்றிரவு முதல் அவை வேலை செய்யவில்லை.. இந்த கருவி இயங்கியிருந்தால், அலாரம் மூலம் எச்சரிக்கை ஒலி கிடைத்திருக்கும், அதன்மூலம் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டிருக்கும் என்று அதிகாரிகள் சொல்கிறார்கள்.. எனினும், இந்த தீ விபத்து எதனால் ஏற்பட்டது என்று தெரியவில்லை.. காரணம் குறித்து ஆய்வு நடந்து வருகிறது...
அதேசமயம், இந்த தீ விபத்தில் இறந்தவர்களின் பெயர்கள் மற்றும் வயதை தீயணைப்பு அதிகாரிகள் வெளியிடவில்லை... தூக்கத்திலேயே குழந்தைகள் உயிர் பிரிந்துள்ளது பெரும் சோகத்தை அங்கு ஏற்படுத்தி வருகிறது.. தொடர்ந்து மீட்பு பணிகளும் நடக்கின்றன.