கடையில் திருடியவர்களுக்கு பண உதவி.. இதல்லவோ மனிதாபிமானம்.. போலீஸ் அதிகாரிக்கு குவியும் பாராட்டு
நியூயார்க்: அமெரிக்காவில் கடை ஒன்றில் உணவுப் பொருட்களை திருடிய பெண்களை கைது செய்யாமல், அவர்களுக்கு உதவி போலீஸ் அதிகாரிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
இயந்திரமயமாகிவிட்ட இந்த சூழலில் மனிதம் இன்றும் உயிர்ப்போடு தான் இருக்கிறது என்பதை அவ்வப்போது சில சம்பவங்கள் உணர்த்தி வருகின்றன. அதுபோன்ற ஒரு சம்பவம்தான் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது.
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு ஐந்து நாட்களுக்கு முன்பு அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாநில காவல்துறைக்கு ஒரு அவசர தொலைப்பேசி அழைப்பு வந்தது. போனில் பேசியவர்கள் தங்கள் கடையில் திருட வந்தவர்களை பிடித்து வைத்திருப்பதாக தெரிவித்தனர்.

திருட்டு
இதையடுத்து சம்பவம் நிகழ்ந்த இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்த போலீஸ் அதிகாரி மாட் லிமா அனுப்பி வைக்கப்பட்டார். கடைக்கு சென்ற அவர், அங்கு என்ன நடந்தது என்பது குறித்து விசாரணை நடத்தினார். அப்போது இரண்டு பெண்களும், அவர்களுடன் வந்த இரண்டு சிறுமிகளும் உணவு பொருட்களை திருடியது தெரியவந்தது.

வறுமை
சம்பந்தப்பட்ட பெண்களிடம் லிமா விசாரித்த போது, தங்களிடம் பணம் இல்லாத காரணத்தால் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக உணவு பொருட்களை திருடியதாக அவர்கள் கூறினர். இந்த பெண்கள் மற்றும் சிறுமிகள் மீது இரக்கம் கொண்ட போலீஸ் அதிகாரி லிமா, அவர்களை கைது செய்யாமல் எச்சரித்து விட்டுட்டார்.

மகள்களின் ஞாபகம்
மேலும் அவர்களுக்கு தன்னால் முடிந்த பணத்தை கொடுத்து வேறு கடைக்கு சென்று உணவுப் பொருட்களை வாங்கிக்கொள்ளுமாறு கூறி அனுப்பி வைத்தார். சம்பந்தப்பட்ட அந்த இரண்டு சிறுமிகளை பார்க்கும் போது, தனக்கு தனது மகள்களின் ஞாபகம் வந்துவிட்டதால், இவ்வாறு செய்ததாக லிமா தெரிவித்துள்ளார்.

குவியும் பாராட்டு
போலீஸ் அதிகாரி மாட் லிமாவின் இந்த செயல் குறித்து அமெரிக்க காவல்துறை தங்களுடைய சமூகவலைதளப்பக்கத்தில் பதிவு வெளியிட்டது. இதையடுத்து லிமாவை நெட்டிசன்கள் புகழ்ந்து வருகின்றனர். பொதுமக்களின் நண்பன் போலீஸ் என்பதை லிமா நிரூபித்து விட்டார்.