அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலியில் கொரோனா தாண்டவம்-இந்தியாவிலும் ஒருநாள் பாதிப்பு 1லட்சத்தை தாண்டியது!
நியூயார்க்/டெல்லி: உலக நாடுகளில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அமெரிக்காவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6 லட்சத்தை கடந்துள்ளது. பிரான்ஸ், இத்தாலியில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை தாண்டியும் இந்தியாவில் 1 லட்சத்துக்கு அதிகமாகவும் பதிவாகி உள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் கடந்த 2 ஆண்டுகளைவிட மிக அதிகமாக உள்ளது. ஓமிக்ரான் எனும் உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளது. பல நாடுகளில் கொரோனா 4-வது அலையும் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா 3-வது அலையும் தாக்கி இருக்கிறது.
உலக நாடுகளில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 23,82,116. உலகம் முழுவதும் ஒருநாள் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 6284. உலகம் முழுவதும் நேற்று கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6,60,278.

அமெரிக்காவில் அதிக பாதிப்பு
அமெரிக்காவில் ஒரே நாளில் 6,63,368 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. மேலும் அமெரிக்காவில் கொரோனாவால் ஒரே நாளில் 1642 பேர் மரணம் அடைந்தனர். அமெரிக்காவில் கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று மட்டும் 77,613 பேர் குணமடைந்தனர்.

இந்தியாவில் 1 லட்சத்தை தாண்டியது
அமெரிக்காவை தொடர்ந்து பிரான்ஸ் நாட்டில் 2,61,481 பேருக்கும் இத்தாலியில் 2,19,441 பேருக்கும் இங்கிலாந்தில் 1,79,756 பேருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இந்தியாவிலும் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,14,4841 ஆக பதிவாகி இருக்கிறது.

கொரோனா மரணங்கள்
ரஷ்யாவில் ஒருநாள் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 802; போலந்தில் கொரோனாவால் நேற்று மட்டும் 646 பேர் உயிரிழந்தனர். ஜெர்மனியில் 305 பேரும் இங்கிலாந்தில் 231 பேரும் நேற்று கொரோனாவால் மரணம் அடைந்தனர். உலகம் முழுவதும் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30,05,61,068. உலகம் நாடுகளில் மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 54,88,934. உலக நாடுகளில் இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் 25,74,55,478.

மும்பையில் அதிகம்
இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் கொரோனா பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் 36,265 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் மட்டும் 20,181 பேருக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டது. 2020-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குப் பின்னர் மும்பையில் மிக அதிகபட்சமாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.