ச்சோ க்யூட்.. இந்த வீடியோவைப் பார்க்க ரெண்டு கண்கள் பத்தாது.. அவ்ளோ அழகு!
நியூயார்க்: பென்குயின்கள் கூட்டமொன்று பட்டாம்பூச்சியைத் துரத்திக் கொண்டு ஓடும் அழகிய வீடியோ ஒன்று இணையத்தில் அதிகம் பேரால் ரசிக்கப்பட்டு வருகிறது.
நாம் என்ன கலர் கண்ணாடி அணிந்து பார்க்கிறோமோ உலகமும் அதுபோலவே தெரியும் என்பார்கள். இணையமும் அப்படித்தான். ஆபத்தான வீடியோக்கள் அதிகம் பகிரப்படுவதைப் போலவே, சமூகவலைதளங்களில் அழகிய வீடியோக்களுக்கும் பஞ்சமில்லை.
இப்போதும் அப்படி ஒரு அழகிய வீடியோ தான் பத்து லட்சத்திற்கும் மேற்பட்டோரால் ரசிக்கப்பட்டு வருகிறது.

அழகோ அழகு
அந்த வீடியோவில், பத்துக்கும் மேற்பட்ட பென்குயின்கள், ஒரு பட்டாம்பூச்சியைத் துரத்திக் கொண்டு அழகாக குதித்து, குதித்து ஓடுகின்றன. சுமார் இரண்டு விநாடிகள் மட்டுமே உள்ள இந்த வீடியோ, திரும்பத் திரும்ப பார்க்கத் தூண்டும்படி அத்தனை அழகாக உள்ளது. நேற்று பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவை இதுவரை 111 ஆயிரம் பேர் பார்த்துள்ளனர்.

குதித்து குதித்து..
வெள்ளையும், கருப்பும் கலந்து அழகாக முட்டை ஒன்றில் வரையப் பெற்ற ஓவியம் போல் பென்குயின்கள் எப்போதுமே அழகுதான். பென்குயின்களைப் பிடிக்காதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். அவை நீரில் இருந்தாலும் சரி, நிலத்தில் நடந்து.. (இல்லையில்லை குதித்து குதித்து..) சென்றாலும் தனி அழகுதான். அதிலும் பட்டாம்பூச்சியைப் பிடிக்க சிறுகுழந்தைகள் போல் அவை ஓடுவது கொள்ளை அழகாக உள்ளது.

பட்டாம்பூச்சியின் பின்னே...
இறகுகள் இருந்தாலும் அவற்றால் பறக்க முடியாது. துடுப்புகள் என்று குறிப்பிடப்படும் அதன் கைகள் போன்ற அமைப்பை லேசாக அடித்துக் கொண்டே, அவை பட்டாம்பூச்சியின் பின்னே செல்லும் இந்த வீடியோ பார்ப்பதற்கு அத்தனை அழகாக உள்ளது. வழக்கம் போலவே இந்த அழகிய வீடியோவையும் கொண்டாட நெட்டிசன்கள் மறக்கவில்லை.

இப்டி பண்ணிட்டீங்களே பாஸ்..
எங்கே எடுக்கப்பட்டது, யார் எடுத்தார்கள் என்ற விபரம் இல்லை. ஆனால் இந்த வீடியோவை எடுத்தவரை பாராட்டுவதோடு, செல்லமாகத் திட்டவும் செய்திருக்கிறார்கள் நெட்டிசன்கள். 'இந்த வீடியோவை எடுத்த புண்ணியவான், இன்னும் சில நொடிகள் சேர்த்து எடுத்திருந்தால் என்ன.. இரண்டு நொடிகள் மட்டும் பதிவு செய்திருக்கிறாரே.. திரும்பத் திரும்ப இதைப் பார்க்க வேண்டும் போல் உள்ளது' என இந்த வீடியோவைப் பார்த்து சிலாகித்து வருகின்றனர்.