ஏட்டையாவுக்கு தெரிந்தது கூட அண்ணாமலைக்கு தெரியல.. இவர் எப்டி எஸ்பியா இருந்தாரோ? -அமைச்சர் ஆவடி நாசர்
நீலகிரி: சாதாரண ஏட்டையாவிற்கு இருக்கும் காம்மன்சென்ஸ் கூட அண்ணாமலைக்கு இல்லை எனவும் இந்திய அளவில் ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, எம்ஜிஆர் ஜெயலலிதா ஆகியோரை எதிர்த்து அரசியல் செய்தது திமுக ஒருபோதும் இழக்காது என பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர் பேசியுள்ளார்.
உதகையில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் மற்றும் ஆவின் பால்பண்ணை உள்ளிட்ட இடங்களில் தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர் ஆய்வு மேற்கொண்டார். அங்குள்ள ஆவின் பால் பண்ணைகளில் நெய், வெண்ணை, உற்பத்தி செய்யப்படும் இடங்களையும் ஆய்வு செய்து அவற்றின் தரம் குறித்து அமைச்சர் பார்வையிட்டார்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், தமிழ்நாட்டில் விற்பனை செய்யப்படும் ஆவின் ஹெல்த் மிக்ஸ் பொருட்கள் தரமில்லாமல் இருப்பதாக பொய்யான குற்றச்சாட்டுகளை கூறிவரும் அண்ணாமலை மீது வழக்கு தொடர உள்ளதாக பால்வளத்துறை அமைச்சர் கோவையில் கூறிய நிலையில் அது குறித்து செய்தியாளர்கள் மீண்டும் அவரிடம் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த ஆவடி நாசர், "சாதாரண ஏட்டையாவிற்கு இருக்கும் பொதுஅறிவு கூட ஐபிஎஸ். அண்ணாமலைக்கு இல்லை. அதான் எனக்கு வருத்தமாக இருக்கிறது. இவரெல்லாம் எப்படி எஸ்பியாக இருந்தாரோ? ஜவஹர்லால் நேரு, எட்டு மணிநேரத்தில் வங்கதேசை பிரித்துக் கொடுத்த இந்திரா காந்தி, எம்ஜிஆர், இரும்பு பெண் ஜெயலலிதா ஆகியோரை எதிர்த்து அரசியல் செய்தது திமுக. இந்திய ஒருமைப்பாட்டிற்காக எதை வேண்டுமானாலும் இழப்போம், ஆனால் சுயமரியாதையை ஒரு போதும் இழக்க மாட்டோம்." என்றார்.