நீலகிரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கரூர் பஸ் நிற்கும் இடத்தில் கத்திரிகாய்.. விழுப்புரம் பஸ் இடத்தில் வெண்டக்காய்.. எப்படி இருந்த ஊட்டி

ஊரடங்கில் தனிமையில் தவித்து வருகிறது நீலகிரி மாவட்டத்தின் ஊட்டி

Google Oneindia Tamil News

ஊட்டி: பனியில் நடுங்கினாலும் தன் வற்றாத அழகை காட்டி வரும் மலைகளின் ராணி இன்று தனிமையில் வாடி கொண்டிருக்கிறாள்... தன்னை காண திரண்டு வரும் மக்கள் கூட்டங்கள் ஏதுமில்லாமல் ஏங்கி தவித்து காத்து கொண்டிருக்கிறாள் இந்த மலைகளின் அரசி.. ஊரடங்கில் எப்படி இருக்கிறது ஊட்டி?! லாக்டவுன் என்றாலும் லேசாக எட்டி பார்க்கலாம்.. வாருங்கள்!!

ஊட்டியை பொறுத்தவரை ஒரு சுற்றுலா தளம்.. வெகுஜன மக்களின் ஸ்விட்சர்லாந்து, லண்டன், அமெரிக்கா, என்று இப்படி சொல்லி கொண்டே போகலாம்!! விரல்கள் நடுங்க.. உடல்கள் குளிர இயற்கை அழகை ரசிக்கும் சுற்றுலாப் பயணிகளின் இதயம் கவர்ந்த இடங்களில் ஒன்று ஊட்டி தற்போது ஊரடங்கினால் அடங்கி போய் உள்ளது!!

வழக்கமாக மே மாதம் தான் ஊட்டியில் சீசன் ஆரம்பிக்கும்.. உள்ளூர், வெளியூர், வெளிமாநிலம், வெளிநாடு என நாலா பக்கமிருந்தும் திரண்டு வருவார்கள் இந்த சீசனுக்கு.. இதற்காக ஏப்ரல் மாதமே களை கட்ட தொடங்கிவிடும்.. அந்த 3 மாதங்களுக்கு ரோட்டில் கால் வைக்க இடமிருக்காது.. டிராபிக் ஒரு பக்கம், டூரிஸ்ட்கள் மறுபக்கம் என சேர்ந்து நெருக்கி தள்ளும் ஊட்டியை!

மலர்கள்

மலர்கள்

உள்ளூர் வியாபாரிகளில் பெரும்பாலானோருக்கு இந்த 3 மாதத்தில் கிடைப்பதுதான் வருமானம்!! வழக்கமான வருடங்களை போலதான் இந்த வருடமும் அனைவரையும் வரவேற்க ஊட்டி காத்து கிடந்தது.. ஆனால் எல்லாமே இப்போது தலைகீழாகிவிட்டது.. தாவரவியல் பூங்காவில் மே மாதம் நடக்கும் மலர்க்கண்காட்சிக்கான ஏற்பாடுகள் பிப்ரவரி மாதமே ஜரூராக ஆரம்பமானது.

பிப்ரவரி மாதம்

பிப்ரவரி மாதம்

தோட்டக்கலை சார்பாக அனைத்து ஏற்பாடுகளும் செய்து வந்தனர்.. பிப்ரவரி மாதம் விதை போட்டு வளர்க்க ஆரம்பித்தால் மே மாத சீசனுக்குள் அனைத்து பூக்களும் கட்டாயம் குலுங்கி சிரிக்கும்.. அந்த வகையில்ரோஜா பூங்கா, தாவரவியல் பூங்கா, சிம்ஸ் பார்க் போன்ற கார்டன்களில் ஆள் நடமாட்டமில்லாமல் மலர்கள் மட்டும் தினந்தோறும் சிரித்தபடியே உள்ளன!!

கண்டிப்பு

கண்டிப்பு

ஊரடங்கினால் ஊட்டியில் பார்க்கப்படும் மற்றொரு விஷயம் குப்பை சமாச்சாரம்.. ஊட்டி ரோடுகளிலும், தெருக்களிலும் குப்பை தொட்டிகளே கிடையாது.. ஏற்கனவே பிளாஸ்டிக் ஒழிப்பில் முன்மாதிரி மாவட்டம்தான் நீலகிரி.. பிளாஸ்டிக் பயன்பாடு விஷயத்தில் பல வருடங்களாகவே கண்டிப்பை கடைப்பிடித்து வருகிறது.. சுற்றுலா பயணிள், மக்கள் நடமாட்டம் இல்லாததால், எங்கேயுமே குப்பைகளைகூட கண்ணால் பார்க்க முடிவதில்லை.. தினந்தோறும் அனைத்து வீடுகளிலும் நகராட்சி சார்பில் லாரிகள் மூலம் குப்பைகள் பெறப்பட்டு வருகிறது.. இப்போது தொற்று நோய் அபாயம் என்பதால், ஒருநாளைக்கு 2, 3முறையாவது வந்து குப்பைகளை வாங்கி கொண்டு சென்றுவிடுகின்றனர்.. இதனால் எந்த குப்பைகளையும் தெரு, சாலைகளில்கூட பார்க்க முடியவில்லை.

காய்கறி சந்தை

காய்கறி சந்தை

அதேபோல ஊட்டி பஸ் ஸ்டாண்டில் எப்போதுமே கூட்ட நெரிசல் இருக்கும்.. மதுரை, திருச்சி, திருநெல்வேலி என்று பெயர் பலகை தொங்கி கொண்டிருக்கும்.. அந்தந்த இடங்களில் அந்தந்த ஊர் பஸ்கள் வந்து போகும்.. ஆனால் இப்போது அப்படி இல்லை.. பஸ் ஸ்டாண்டு அப்படியே மார்க்கெட் ஆகிவிட்டது.. கரூர் பஸ் நிற்கும் இடத்தில் கத்தரிக்காய், விழுப்புரம் பஸ் நிற்கும் இடத்தில் வெண்டைக்காய் என வித்தியாசமாக காட்சி தருகிறது. வழக்கமாக செயல்படும் ஊட்டி மார்கெட் நகரின் மையத்தில் உள்ளது.. நெருக்கடியும் அதிகம்.. இப்போது சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்காக பெரிய மைதானம் போல உள்ள பஸ் ஸ்டாண்டைதான் டெம்பரவரி மார்க்கெட்டாக மாற்றி உள்ளனர்.

மைதானம்

மைதானம்

அதேபோல, குதிரை ரேஸ்கள் நடக்கும் ரேஸ் கோர்ஸ் மைதானம் வெறிச்சோடி உள்ளது.. வருடா வருடம் ஏப்ரல் 14-,ம் தேதிதான் குதிரை ரேஸ் நடத்துவது வழக்கம்.. தொடர்ந்து 4 மாதங்கள் நடக்கும்.. இதற்காக பிப்வரி மாத இறுதியிலேயே நூற்றுக்கணக்கான குதிரைகள் லாரிகளில் வந்து இறங்கும்.. அந்த குதிரைகளுடன் குதிரை ஓட்டிகளும் ஜாக்கிகளுடன் வந்து அமர்க்களப்படுத்துவார்கள்.. இந்த குதிரை பந்தயத்தை பார்க்க தனி ரசிகர்கள் கூட்டம் லட்சக்கணக்கில் உண்டு.. 4 மாசமும் ஜெ.ஜெ.வென கூட்டம் நிரம்பி வழியும்.. ஆனால் இந்த ரேஸ் கோர்ஸ் மைனதானத்தின் ஒரு பகுதி காய்கறி மார்கெட்டாக உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. மக்கள் வரிசையில் பொறுமையாக நின்று காய்கறிகளை வாங்கி கொண்டு செல்கின்றனர்.

திருவிழாக்கள்

திருவிழாக்கள்

நீலகிரி மக்களுக்கு எல்லா திருவிழாக்களும் ஏப்ரல் 14-ல்தான் ஆரம்பிக்கும்... குறிப்பாக மாரியம்மன் திருவிழா வெகு பிரசித்தி பெற்றது... இங்கு வசிக்கும் இருளர், படுகர், குரும்பர் இன மக்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாள் தங்கள் திருவிழாவை நடத்துவார்கள்.. தங்களது குல தெய்வங்களை, இஷ்ட தெய்வங்களை ஊர்வலமாக கொண்டு சென்று, பட்டாசுகளை வெடித்து மகிழ்வார்கள்.. ஆங்காங்கே வேலை, படிப்பு என்று சிதறி கிடக்கும் ஊர் மக்கள் ஏப்ரல் மாத திருவிழாவுக்கு கட்டாயம் ஆஜர் ஆவார்கள்.. இது எல்லாமே இப்போது நிறுத்தப்பட்டுள்ளது. கோயில்களில் நடமாட்டமே இல்லை!!

காட்டேஜ்கள்

காட்டேஜ்கள்

சுற்றுலாதலம் என்பதால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது ஓட்டல்கள், காட்டேஜ்கள்தான்.. 3 மாதம் சுற்றுலா பயணிகள் வந்தாலும் அவர்களுக்காகவே காட்டேஜ்களையும், ரிசார்ட்களையும் ஜனவரி மாதம் முதலே தயாராக வைத்திருக்க ஆரம்பிப்பார்கள்.. 3 மாதமும் லாட்ஜ்கள் முதல் காட்டேஜ்களுக்கு படு கிராக்கியாக இருக்கும்.. இவர்கள் எல்லாருமே தற்போது வருமானத்தை இழந்து வருகின்றனர்.. பயணிகள் வருகை இல்லாமல் ஆட்டோ, டாக்சி, கேப், வேன் டிரைவர்கள் வேலையிழந்து உள்ளனர்.. உள்ளூர் மக்களும் பயணம் செய்யாததால், மொத்தமாகவே இழப்பை சந்தித்து வருகின்றனர்.

திபெத்தியர்கள்

திபெத்தியர்கள்

இந்த சீசன் சமயத்தில் ஆயிரக்கணக்கான நடைபாதை வியாபாரிகள் கடைவிரித்து லாபம் பார்ப்பார்கள்.. ஊட்டி ஏரி, ரோஜா பூங்கா, தொட்டபெட்டா, என எங்கு திரும்பினாலும் இவர்கள்தான் எதையாவது விற்று கொண்டிருப்பார்கள்.. ஊட்டியில் விளையும் கேரட், மக்காசோளம், ஊட்டி ஆப்பிள், என அத்தனை ஸ்பெஷல் அயிட்டங்களும் சாலையோரம் பரவி கிடக்கும்.. இந்த வியாபாரம் அத்தனையும் தடை பட்டுள்ளது.. குறிப்பாக திபெத்தியர்கள் இங்கு பெரும்பாலானோர் வசித்து வருகின்றனர்.. எப்போதோ வந்து ஊட்டியில் குடியேறியவர்கள் இன்றுவரை பிரிய மனமில்லாமல் இங்கேயே காலங்காலமாக குடியிருந்து வருகிறார்கள்.. கம்பளி, ஸ்வர்ட்டர்களுடன் துணி கடைகளை வைத்துதான் வாழ்க்கை ஓட்டி வருகின்றனர்.. இவர்களுக்கென பிரத்யேகமாக தனி மார்க்கெட் பகுதிகூட ஒதுக்கப்பட்டுள்ளது. இவர்களும் ஊரடங்கினால் வருமானத்தை இழந்து உள்ளனர்.

நோய் தொற்று

நோய் தொற்று

வருமானம் இழப்பு, நஷ்டம், தொழில் பாதிப்பு என்றெல்லாம் குறையாக சொன்னாலும் நீலகிரியில் கொரோனா கட்டுக்குள் உள்ளது ஒரு முக்கியமான விஷயம் ஆகும்.. இதுவரை மொத்தம் 9 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.. இந்த எண்ணிக்கை ஒரு வாரமாக அப்படியே கூடாமல் உள்ளது.. நிலைமை கட்டுக்குள் உள்ளது... இதற்கு முக்கிய, முழு முதற்காரணம் கலெக்டர் இன்னசென்ட் திவ்யாதான்.. ஒரு நிமிடமும் சும்மா இருக்க மாட்டார்.. மார்கெட், பஸ் ஸ்டாண்ட், அரசு ஆஸ்பத்திரி என எல்லா இடங்களிலும் ரவுண்டு கட்டி ஆய்வு நடத்துவார்.. விதிகளை மீறுவர்கள் யாராக இருந்தாலும் லெப்ட் & ரைட் அங்கேயே வாங்கிவிடுவார்.. மாஸ்க் யாராவது போடாவிட்டாலும் செம ரைடுதான்.. அதனாலேயே நீலகிரி தொற்று பாதிப்பில் தப்பிவிட்டது!!

காத்து கிடக்கும் மலர்கள்!!

காத்து கிடக்கும் மலர்கள்!!

ஊட்டியில் எப்போதுமே ஒரு அமைதி நிலவும்.. இரைச்சல், சத்தம், இப்படி எதுவுமே இருக்காது.. இப்போது ஊரடங்கினால் மேலும் நிசப்தம் நிலவுகிறது.. மாசு இல்லை.. குப்பை கூளங்கள் இல்லை.. ஒட்டியுள்ள வனப்பகுதியில் இருந்து யானைகள், குரங்குகள், காட்டெருமைகள் ஒருசில அவ்வப்போது ஊருக்குள் வந்து, "என்ன ஒரே அமைதி" என்று எட்டிப்பார்த்து விட்டு ஹாயாக நடந்து போகின்றன.. குயில்களும் குருவிகளும் எந்நேரமும் மகிழ்ச்சியாக இரைச்சலிட்டு கொண்டுள்ளன.. கொத்து கொத்தாய் நின்று, "நான் வாடும் முன்னே வாருங்களேன்" என தினந்தோறும் மலர்கள் மனிதர்களுக்கு அழைப்பு விடுத்து காத்து கொண்டிருக்கின்றன!!

English summary
lockdown: How is Ooty during curfew, a roundup
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X