ஊட்டி மலர் கண்காட்சியில் விபத்து.. சரசரவென சரிந்த பிரமாண்ட வடிவமைப்பு.. எடை தாங்கலயா?- என்ன காரணம்?
நீலகிரி: நீலகிரி மாவட்டம் ஊட்டி தாவரவியல் பூங்காவில் ஒரு லட்சம் மலர்களால் உருவாக்கப்பட்ட, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக முகப்பு வடிவமைப்பு திடீரென சரிந்து விழுந்தது.
பலத்த காற்று வீசியதன் காரணமாக எடை தாங்க முடியாமல் இந்த மலர் வடிவமைப்பு கீழே சரிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. முதல்வர் ஊட்டியில் தங்கியிருக்கும் நிலையில் நடந்த இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி டூ நீலகிரி.. தமிழகத்தின் பல பகுதிகளில் வெளுத்த மழை.. சென்னை வானிலை எப்படி இருக்கும்?

ஊட்டி மலர் கண்காட்சி
ஊட்டி தாவரவியல் பூங்காவில் ஆண்டுதோறும் மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக ஆன்லைன் வாயிலாக கண்காட்சி நடந்தது. மக்கள் வீட்டில் இருந்தபடி தாவரவியல் பூங்காவில் வைக்கப்பட்டிருந்த பல்வேறு வண்ண செடிகளை கண்டு ரசித்தனர். இந்நிலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு ஊட்டி தாவரவியல் பூங்காவில் 124-வது மலர் கண்காட்சி 20-ஆம் தேதி தொடங்கியது. இந்த கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். வருகிற 24-ஆம் தேதி வரை 5 நாட்கள் இந்த கண்காட்சி நடக்கிறது.

மலர் அலங்காரம்
இந்த மலர் கண்காட்சியில் உதகை 200 வது ஆண்டைக் குறிக்கும் விதத்தில் மலர்களால் வடிவமைக்கப்பட்ட ஊட்டி 200, ஒரு லட்சம் கார்னேஷன் மலர்களை கொண்டு வடிவமைக்கப்பட்ட தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக முகப்பு ஆகியவை பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன. முதல்வர் ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ஆகியோரும் இந்த மலர் அலங்காரங்களை ரசித்துப் பார்த்தனர்.

வேளாண் பல்கலைக்கழக வடிவமைப்பு
ஒரு லட்சம் மலர்களைக் கொண்டு 80 அடி நீளமும் 20 அடி உயரமும் கொண்ட கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் முகப்பு, கண்காட்சி வளாகத்தினுள் வடிவமைக்கப்பட்டது. இதற்காக, பெங்களூர், ஓசூர் போன்ற பகுதிகளிலிருந்து கார்னேஷன் மலர்கள் கொண்டு வரப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

திடீரென சரிந்தது
இந்நிலையில் இன்று மாலை, ஒரு லட்சம் மலர்களால் உருவாக்கப்பட்ட, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக முகப்பு தோற்றத்தின் ஒரு பகுதி சரிந்து விழுந்தது. கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, இந்த மலர் வடிவமைப்பில் அதிக அளவில் தண்ணீர் தேங்கியிருந்துள்ளது. இதனால் பலத்த காற்று வீசும்போது எடை தாங்காமல் சரிந்ததாக கூறப்படுகிறது.

யாருக்கும் பாதிப்பில்லை
இந்த மலர் அலங்கார வடிவமைப்பு சரிந்து விழுந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கபப்ட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் ஊட்டியில் தங்கியிருக்கும் நிலையில் நடந்த இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக, சேதமடைந்த பகுதிகளை சீரமைக்கும் பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.