நீலகிரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

EXCLUSIVE: சுமதி டீச்சர் இருந்தா போதும்.. தலைவலிகூட பறந்து போய்டும்.. நெகிழும் பழங்குடி மக்கள்

பழங்குடி மக்களுக்கு இலவச யோகா பயிற்சி வழங்கி வருகிறார் ஆசிரியை ஒருவர்

Google Oneindia Tamil News

Recommended Video

    சுமதி டீச்சர் இருந்தா போதும்.. தலைவலிகூட பறந்து போய்டும்.. நெகிழும் பழங்குடி மக்கள்

    ஊட்டி: "தலைவலி, கை, கால் வலி எது வந்தாலும் சரி.. சுமதி..ம்மா சொல்லி கொடுத்த வைத்தியம் இருக்கு" என்று தைரியமாக சொல்கிறார்கள் பழங்குடி மக்கள். யார் இந்த சுமதி!

    சுமதி.. ஆசிய யோகா போட்டியில் தங்க பதக்கம் பெற்றவர். ஆதிவாசி மக்களுக்கு, யோகா பயிற்சிஅளித்து வருகிறார். 10 பைசாகூட வாங்கிறது கிடையாது... அவ்வளவும் இலவச சேவை!

    நீலகிரி மாவட்டம், குன்னுார் அருகே, கடசோலை கிராமத்தை சேர்ந்தவர்தான் சுமதி. இவர், 2017ல், சிங்கப்பூரில் நடந்த ஆசிய யோகா போட்டியில் தங்கம் வென்றவர். பல பள்ளிகளில்இவர் யோகா டீச்சராக வேலை பார்த்துள்ளார்.

    Sumathi Teacher giving Free Yoga Training to Tribals

    இப்போது, நீலகிரியில் வசிக்கும் ஆதிவாசி மக்களுக்கு, இலவசமாக யோகா பயிற்சி அளித்து வருகிறார் இதுவரை, தோடர், கோத்தர், குரும்பர், இருளர்இன ஆதிவாசிகள் வசிக்கும் கிராமங்களுக்கு சென்று யோகா கற்று தருகிறார். கூடவே அக்குபஞ்சரும் சொல்லி தருகிறார் சுமதி. "ஒன் இந்தியா தமிழுக்காக" அவரை சந்தித்து பேசினோம்:

    கேள்வி: இலவசமா யோகாவை சொல்லி தர்றீங்களே.. இதுக்கு முறையான அனுமதி ஏதாவது வாங்கி இருக்கீங்களா?

    ஆமா.. சென்னையில் இருக்கக்கூடிய தமிழக அரசின் பழங்குடி ஆணையத்தில் இருந்து ஒரு ஆர்டர் வந்தது. "நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த சுமதி அவர்களுக்கு, இலவச யோகா பயிற்சி வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது" என்று ஒரு லட்டர் வந்தது. எனக்கு இதுவே போதும். இது எனக்கு மிகப்பெரிய பொக்கிஷம் மாதிரி. எனக்கு நிறைய இடத்துல அனுமதி கிடைக்காதபோதெல்லாம், இந்த ஆர்டர்தான் எனக்கு உதவும். இதைதான் நான் ஒவ்வொரு பழங்குடி கிராமத்துக்கு போகும்போதும் எடுத்துட்டு போய் மக்களிடம் சொல்வேன்.

    Sumathi Teacher giving Free Yoga Training to Tribals

    கேள்வி: ஸ்கூல்ல கை நிறைய சம்பளம் வாங்கிட்டு மாணர்களுக்கு யோகா டீச்சரா இருந்த நீங்கள், பழங்குடி மக்களுக்கு இலவச யோகா கற்று தர முடிவு செய்தது ஏன்?

    9 வருஷம் ஒவ்வொரு ஸ்கூலுக்கும் போய் நான் யோகா கற்று தந்தேன். நகர்ப்புற மக்களுக்கு எப்படியாவது அவங்களுக்கு நிறைய விஷயம் கிடைச்சிடுது. நான் இல்லேன்னாலும் இன்னொரு டீச்சர் போய் யோகா கற்றுதர முடியும். ஆனால் மலைவாழ் பழங்குடி மக்களுக்கு அந்த வசதி கிடையாது. ஏன்னா, இவங்க எல்லாருமே காட்டுக்குள்ளயோ, அல்லது ஊரைவிட்டு ஒதுங்கியோதான் வாழ்ந்துட்டு இருக்காங்க. வெளிஉலக தொடர்பு இவங்களுக்கு குறைவு. அதனால்தான் இந்த மாதிரி குழந்தைங்க, பெரியவங்களுக்கு யோகா சொல்லிக் கொடுக்கணும்னு நினைச்சேன்.

    கேள்வி: எப்போ இருந்து இந்த சேவையை செய்யறீங்க? இதுக்கு ஏதாவது அடிப்படை காரணம் இருக்கா?

    நான் பிறந்ததே கடசோலை என்ற குக்கிராமத்தில்தான். அது காட்டுக்குள்ள இருக்கிற ஒரு கிராமம். படுகர் சமூக பெண் நான். அடிப்படை வசதி எதுவும் இல்லாத ஊர் அது. மிருகங்கள் சர்வசாதாரணமாக கடந்து செல்லும் காட்டுக்குள்ளே வளர்ந்து, பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் படிச்சேன். இன்னைக்கு யோகாவில் டிகிரி வாங்கியிருக்கேன். டிப்ளமோவாகவும், இளங்கலை-முதுகலை கல்வியாகவும் கற்று பட்டம் பெற்றேன். அக்குபஞ்சர், இயற்கை வைத்தியம், பாத அழுத்த சிகிச்சை முறைகளிலும் முதுகலை பட்டங்களை வாங்கினேன். மலைவாழ் மக்கள் படும் கஷ்டங்களை குழந்தையில் இருந்தே நேரிலேயே பார்த்து இருக்கேன். எனக்கு சின்ன வயசிலேயே கொதுமுடி கிராமத்துல கல்யாணம் பண்ணி தந்துட்டாங்க. இருந்தாலும், பழங்குடி மக்களுக்கு ஏதாவது செய்யணும்னு தோணுச்சு. ஆரம்பத்துல எனக்கு வீட்டில எதிர்ப்பு இருந்தது. போக, போக என்னை புரிஞ்சிக்கிட்டு இப்போ ஒத்துழைப்பு தர்ற ஆரம்பிச்சிட்டாங்க.

    Sumathi Teacher giving Free Yoga Training to Tribals

    கேள்வி: வழக்கமா, ஒரு புதுவிஷயத்தை பழங்குடி மக்களால் உடனே ஏற்றுக் கொள்ள முடியாது. அப்படி இருக்கும்போது, உங்களால் எப்படி அவர்களுக்கு யோகா கற்று தர முடிந்தது? அவர்களின் ஒத்துழைப்பு எப்படி இருக்கிறது?

    ஆமா.. ஒரு விஷயத்தை கொண்டு போறது அவ்வளவு சுலபம் இல்லை. அவங்க அவங்களோட கலாச்சாரத்தை இவ்வளவு காலம் தொடர்ந்து கடைபிடிச்சிட்டு வர்றாங்க. அந்த கலாச்சாரம் எந்தவகையிலும் பாதிச்சிட கூடாதுன்னு ரொம்பவும் உணர்வா இருப்பாங்க. ஒரு கோயில் விசேஷம்னாகூட வெளியாட்களை 15 நாட்களுக்கு உள்ளே விட மாட்டாங்க. அதனால ஒரு இருளர், குரும்பர் இன கிராமத்துக்கு நான் உள்ளே போவதானால்கூட, கஷ்டம்தான். ஒவ்வொரு கிராமத்திலும், அந்தந்த ஊர் தலைவர் இருப்பார்கள். அவங்ககிட்ட நான் போய் அனுமதி வாங்கணும். என்னுடைய நோக்கத்தையும், யோகாவின் அவசியத்தையும் அவருக்கு எடுத்து சொல்லி புரிய வைப்பேன். அதுக்கப்புறம் அவர் எனக்கு அனுமதி தருவார். அதுமட்டுமில்லை, யோகாவின் பலனுக்காக அவரே அந்த ஊர் மக்களை திரட்டி அழைத்து வந்து ஒத்துழைப்பு தருவார்.

    கேள்வி: உங்க பயிற்சிக்கு எப்படி வரவேற்பு இருக்கு?

    நல்ல வரவேற்புதான். நான் எதுக்கு வந்திருக்கேன்னு பழங்குடி மக்கள் கிட்ட அறிமுகப்படுத்திப்பேன். யோகா செய்தால் என்னென்ன நன்மைகளை எடுத்து லிஸ்ட் போட்டு முதல்லயே சொல்லிடுவேன். அதை கேட்டுட்டுதான் ஆச்சரியப்பட்டு, ஒவ்வொருத்தரா யோகா கத்துக்க ஆர்வம் காட்டுவாங்க. அதிலும் பெரியவங்கதான் ரொம்ப ஆர்வமா இருக்காங்க. 70 வயசு அம்மாங்ககூட கஷ்டமான யோகாவை சர்வசாதாரணமா செய்யும்போது ஆச்சரியமா இருக்கும்.

    Sumathi Teacher giving Free Yoga Training to Tribals

    கேள்வி: பழங்குடி மக்கள் எல்லாருமே அடிப்படையிலேயே கடின உழைப்பாளிகள்தானே. நல்ல உடல்வாகும், ஆரோக்கியமும் நிறைஞ்சிருக்கிற இந்த மக்களுக்கு யோகா அவசியம்தானா?

    அப்படி இல்லை, அந்த கால ஆதிவாசிகள் மாதிரி காட்டுக்குள்ள என்ன கிடைக்குமோ அதை சாப்பிட்டு வந்தாங்க. இப்போ அப்படி இல்லையே... நம்மள மாதிரிதான் எல்லா சாப்பாடும் சாப்பிடறாங்க. அப்போ அதில இருக்கிற கெமிக்கல் உட்பட நமக்கு வர்ற பாதிப்பும் அவங்களுக்கும் வர்றதானே செய்யும். கை, கால் வலி, தலைவலி, முதுகுவலி இப்படி நிறைய பிரச்சனைகள் இவங்களுக்கு இருக்கும். ஆஸ்பத்திரியும் பக்கத்தில இருக்காது. இதையெல்லாம் யோகாவிலேயே குணப்படுத்திடலாம், எல்லாத்துக்கும் மருந்து, மாத்திரை தேவையில்லை என்பதுதான் என் நோக்கம். இப்போ அவங்களுக்கும் உடல் உபாதைகளுக்கு தீர்வு கிடைக்கிறதா, ஆர்வமா வந்து கத்துக்கறாங்க.

    கேள்வி: இதுவரைக்கும் எத்தனை கிராமம், எத்தனை பேருக்கு யோகா, அக்குபஞ்சர் மூலம் குணப்படுத்தி இருப்பீங்க?

    இதுவரை 20 பழங்குடி கிராமங்களுக்கு மேல போயிருக்கேன். ஆயிரக்கணக்கான பழங்குடியின பெண்களுக்கு யோகா பயிற்சி தந்திருக்கேன். அதேமாதிரிதான் பிள்ளைகளுக்கும் சொல்லி தர்றேன். யோகா-ன்னா கை, காலை ஆட்டணுமா?ன்னு அப்பாவித்தனமா அவங்க கேட்பாங்க. இப்படி அடிப்படைகூட இல்லாம இருக்கிற மக்கள் இன்னைக்கு கொஞ்சம் கொஞ்சமா மாறிட்டு வர்றது சந்தோஷமா இருக்கு. ஒரு தலைவலி வந்தாலே என்னை நினைக்கிறாங்களா

    Sumathi

    கேள்வி: இலவசமாகவே சொல்லி தர்றீங்க.. உங்களுக்கு பொருளாதார சிக்கல் வரவில்லையா? எப்படி சமாளிக்கிறீங்க?

    முதல் 2 வருஷம் அப்படிதான் கஷ்டப்பட்டேன். நானும் வறுமையான குடும்பத்தை சேர்ந்தவள்தான். அதனாலதான் பஸ்சார்ஜ்கூட இல்லாமல் என்னால் நிறைய கிராமங்களுக்கு போக முடியாத சூழல் ஏற்பட்டது. நான் அக்குபஞ்சர்-ல டிகிரி முடிச்சிருக்கிறதால கோயம்புத்தூர்ல பிரைவேட் ஓல்ட்ஏஜ் ஹோம்-ன்னு ஒரு முதியோர் இல்லம் இருக்கு. அவங்களுக்கு அக்குபஞ்சர் பார்க்க போவேன். வாரத்துல 3 நாள் கிளாஸ். அவங்க எனக்கு அதுக்கான ஃபீஸ் தருவாங்க. 3 நாள் கிளாஸ்-க்கு தர்ற அந்த பணத்தை கை செலவுக்கு வைச்சிக்கிட்டுதான் இந்த கிராமங்களுக்கு மத்த 4 நாள் போய் சொல்லி தருவேன்.

    கேள்வி: கடைசியா ஒரு கேள்வி.. யோகா பத்தி சுருக்கமா சொல்லுங்களேன்..

    என்னைக்கு இடுப்பு உயரத்துக்கு அடுப்பு வந்ததோ, அன்னைக்கே இடுப்புக்கு கீழே நோய்கள் வந்துவிட்டன. என்னைக்கு இடுப்பில குடத்தை தூக்கி வெக்க மறந்துட்டாங்களோ, அன்னைக்கே பிரசவ வலி வருவது இல்லை.. சிசேரியன்தான். தலைகீழாக நிக்கிறது, கண்ணை மூடி உட்கார்வது, உடம்பை வளைக்கிறது, ஒருகாலை தூக்குவது, இன்னொரு காலை மடக்குவது.. இதுக்கு பேர் யோகா இல்லை. யோகா என்பதற்கு இணைதல் என்று பொருள். யோகா செய்யும்போது உடலோடு உயிர் இணையும். உயிரோடு மனம் இணையும். மனதோடு சமுதாயம் இணையும். இதுதான் யோகா" என்கிறார் சுமதி.

    English summary
    Sumathi teacher giving free Yoga training and Acu Treatment for Tribals in Nilgiris District
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X