'ஒன்இந்தியாதமிழ்' திருப்பாவை, திருவெம்பாவை பாடல் போட்டி: குவிந்த வீடியோக்கள்! 3 பேருக்கு முதல் பரிசு
சென்னை: "ஒன்இந்தியா தமிழ்" நடத்திய திருப்பாவை, திருவெம்பாவை பாடல் போட்டியில் அசத்தலாக திருப்பாவை பாடிய 3 குழந்தைகள், முதல் பரிசான தலா 1000 ரூபாய்க்கான அமேசான் கிப்ட் வவுச்சர்களை தட்டிச் செல்கிறார்கள்.
மார்கழி பிறந்ததுமே, இல்லங்களிலும், கோவில்களிலும் திருப்பாவையும், திருவெம்பாவையும் பக்தியுடன் ஒலிக்கத் தொடங்கும்.

மார்கழி மாதத்தில் 30 நாட்களும் திருப்பாவை திருவெம்பாவை திருப்பள்ளி எழுச்சி பாடி இறைவனை பெண்கள் வழிபடுகின்றனர். இறைவன் கண்ணனை நினைத்து ஆண்டாள் பாடிய திருப்பாவை முப்பது பாடல்களைக்கொண்டது. சிவனை நினைத்து மாணிக்கவாசகர் பாடிய திருவெம்பாவை இருபது பாடல்களைக்கொண்டது. இந்த இருபது பாடல்களுடன் திருப்பள்ளியெழுச்சியிலுள்ள பத்து பாடல்களுடன் சேர்த்து அதுவும் முப்பது பாடல்களாக மார்கழி மாதம் முப்பது நாட்களிலும் பாடப்படுகின்றது.
இந்த ஆண்டும் வழக்கமான உற்சாகத்தோடு மார்கழியை பக்தர்கள் வரவேற்று வழிபாடுகளை ஆரம்பித்தபோதுதான், உங்கள் "ஒன்இந்தியாதமிழ்" திருப்பாவை மற்றும் திருவெம்பாவைக்கான போட்டியை அறிவித்தது.
அதாவது.. "உங்கள் வீட்டு குட்டீஸை அழகாக ஆண்டாளைப் போல அலங்கரித்து, திருப்பாவை பாட வைத்து வீடியோவாக எங்களுக்கு அனுப்புங்கள். அதிக அளவில் திருப்பாவை பாடிய குழந்தைகளுக்கு அற்புதமான பரிசுகள் காத்திருக்கின்றன. 1000 ரூபாய்க்கான அமேசான் வவுச்சர் பரிசளிக்கப்படும்" என்று வாட்ஸ்அப் எண்ணுடன் அறிவிப்பை வெளியிட்டோம். அவ்வளவுதான் தாமதம்.. வந்து குவிந்தன வீடியோக்கள்..!
பெருநகரம், சிறிய ஊர்கள் என பேதமின்றி தமிழகம் மற்றும் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும்.., ஏன்.. வெளிநாடுகளில் இருந்தும் நமது வாசகர்கள், தங்களது குழந்தைகளை பாடல்களை பாட வைத்து, வீடியோக்களை அனுப்பி, வாட்ஸ்அப்பில் எப்போதும் அழைப்பு மணி ஒலித்துக்கொண்டே இருக்கும் அளவுக்கு திக்குமுக்காடச் செய்து விட்டீர்கள்.

நாகர்கோவிலைச் சேர்ந்த, 5ம் வகுப்பு மாணவியான லட்சரா, அச்சு அசலாக ஆண்டாள் போலவே அலங்காரமிட்டு, திருப்பாவையின் 30 பாசுரங்களையும், புத்தகத்தின் துணையின்றி, ராகத்தோடு பாடி அசத்தி முதல் பரிசை தட்டிச் செல்கிறார்.

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவிலைச் சேர்ந்த 9ம் வகுப்பு மாணவி ஹர்ஷினி திருப்பாவையின் 30 பாடல்களையும் புத்தகம் துணையின்றி பாராமல் பாடி அசத்தி முதல் பரிசை பகிர்ந்து கொள்கிறார்.

இதேபோல சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த 6ம் வகுப்பு மாணவி மம்தா ஸ்ரீ, திருப்பாவை பாடல்களை உச்சஸ்தாபியில் ராகத்தோடு பாடி முதல் பரிசை பகிர்ந்து கொள்கிறார்.
எத்தனையோ குழந்தைகள், தாங்களும் பாசுரங்கள் பாடி வீடியோ அனுப்பியிருந்தாலும், திருப்பாவை அல்லது திருவெம்பாவையை தவறில்லாமல் அதிக பாசுரங்களை பாடியது, ஆண்டாள் போல அலங்கரித்து பாடியது, பாராமல் பாடியது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களின் அடிப்படையில், முதல் பரிசுக்காக மூவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
வாசகர்கள் அனுப்பிய ஒவ்வொரு வீடியோவில் இடம் பெற்ற பாடலும், சிறுவர், சிறுமிகளும் சிறப்பாக பாடியிருந்தனர் என்பதில் ஐயமில்லை. அவர்களது ஆர்வத்திற்கும், பங்களிப்பிற்கும் உங்கள் "ஒன்இந்தியாதமிழ்" நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறது. உங்களது அளப்பரிய ஆர்வம் நெகிழ்ச்சியை தருகிறது. மீண்டும் ஒரு போட்டித் தொடரின்போது உங்களின் சீரிய பங்களிப்பை மீண்டும் வேண்டி நிற்கிறது, ஒன்இந்தியா ஆசிரியர் குழு