4வது முறையாக பீகார் முதல்வராக பதவியேற்றார் நிதிஷ் குமார்.. பாஜகவிலிருந்து 2 துணை முதல்வர்கள்
பாட்னா: பீகாரில் 4ஆவது முறையாக இன்று முதல்வராக பொறுப்பேற்றார் நிதிஷ்குமார்.
243 உறுப்பினர்களை கொண்ட பீகார் சட்டசபைக்கான தேர்தல் 3 கட்டங்களாக நடந்தது. இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 125 இடங்களை கைப்பற்றியது. பெரும்பான்மைக்கு 122 இடங்களே போதுமானது. அந்த 125 -இல் பாஜக 74 இடங்களிலும் ஐக்கிய ஜனதா தளத்தின் கட்சி 43 இடங்களிலும் வெற்றி பெற்றன.
நவம்பர் 29-ஆம் தேதியுடன் பீகார் சட்டசபை முடிவடைகிறது. பீகார் சட்டசபை கடந்த 13-ஆம் தேதி கலைக்கப்பட்டது. இந்த நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சட்டசபை உறுப்பினர்கள் கூட்டம் நேற்று மதியம் நடைபெற்றது. இதில் அடுத்த முதல்வராக நிதிஷ் குமார் தொடர்வது என ஒருமித்த முடிவு எடுக்கப்பட்டது.

இந்நிலையில், பீகார் மாநிலத்தின் முதல்வராக இன்று மாலை 4.30 மணிக்கு மேல் நிதிஷ் குமார் பதவியேற்றார். ஆளுநர் பகு சவுகான் அவருக்கு பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
துணை முதல்வராக பாஜகவின் தர்கிஷோர் பிரசாத் மற்றும் அவரையடுத்து ரேணு தேவி ஆகிய இருவர் பதவியேற்றுள்ளனர். பதவி ஏற்பு விழாவில் பாஜக தலைவர் ஜேபி நட்டா, மத்திய உள்துறை அமைச்சர், அமித்ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிதிஷ் குமார் தொடர்ந்து 4வது முறையாக பீகார் முதல்வராக பதவியேற்றுள்ளார்.