• search
பாட்னா அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

நடிகர் டூ அரசியல்வாதி... 8 ஆண்டுகளில் கட்சியை கைப்பற்றிய காரியவாதி... யார் இந்த சிராக் பாஸ்வான்..?

|

பாட்னா: பீகார் சட்டமன்றத் தேர்தல் கூட்டணியில் ட்விஸ்டை ஏற்படுத்தி நிதிஷ்குமாருக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்திருக்கிறார் சிராக் பாஸ்வான்.

நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு எதிராக லோக் ஜனசக்தி வேட்பாளர்களை களமிறக்கி அரசியலில் ஆடுபுலி ஆட்டத்தை தொடங்கியிருக்கிறார்.

36 வயதான சிராக் பாஸ்வானின் பின்னணி என்ன அரசியலுக்கு வந்தது எப்போது என்பது பற்றியெல்லாம் இங்கே பார்க்கலாம்.

35 வருஷமாக சட்டசபை தேர்தலில் போட்டியிடவே இல்லை.. ஆனால் 5 முறை முதல்வராக சாதித்த ஜெகஜால நிதிஷ்குமார்!

ராம் விலாஸ் பாஸ்வான்

ராம் விலாஸ் பாஸ்வான்

லோக் ஜனசக்தி நிறுவனர் ராம்விலாஸ் பாஸ்வானின் மகன் தான் இந்த சிராக் பாஸ்வான். இளம் வயது முதலே சினிமா மீது தீராத ஆர்வம் கொண்ட சிராக் பாஸ்வான் மாடலிங் துறையில் தனது பணியை தொடங்கினார். அதன் மூலம் பாலிவுட் படமான 'மைலே நா மைலே ஹம்' என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு கடந்த 2010-ல் கிடைத்தது. கங்கணா ரனாவத், நீரு பாஜ்வா, சகாரிகா கட்கே என மூன்று கதாநாயகிகளுடன் சிராக் நடிப்பில் வெளியான அந்தப் படம் படுதோல்வியை சந்தித்தது.

அரசியலுக்கு வருகை

அரசியலுக்கு வருகை

இதையடுத்து சிறந்த கதைகளுக்காக ஓராண்டு காத்திருந்த சிராக் பாஸ்வானிடம் அவரது அரசியல் பின்புலம் அறிந்து எந்த இயக்குநரும் கதை சொல்ல செல்லவில்லை. இதனால் நடிப்புக்கு முழுக்குப் போட்டுவிட்டு தந்தை வழியில் அரசியலுக்குள் அடியெடுத்து வைத்தார் சிராக். கடந்த 2012-ம் ஆண்டு லோக் ஜனசக்தி கட்சியில் உறுப்பினராக இணைந்து முழு நேர அரசியல்வாதி அவதாரம் எடுத்தார். சிராக் பார்ப்பதற்கு பாலிவுட் ஹீரோவை போல் இருந்ததால் அவரது பரப்புரையும், கட்சிப்பணிகளும் லோக் ஜனசக்தி கட்சிக்கு ஓரளவு பக்கபலமாக அமைந்தது.

குடும்ப மோதல்

குடும்ப மோதல்

இதையடுத்து சிராக் பாஸ்வானை அரசியலில் தொடர்ந்து முன்னிறுத்தியதால் ராம் விலாஸ் பாஸ்வான் குடும்பத்தில் பூகம்பம் வெடித்தது. காரணம் சிராக் பாஸ்வான் ராம் விலாஸ் பாஸ்வானின் 2-வது மனைவியின் மகன் ஆவார். ராம் விலாஸ் பாஸ்வானின் முதல் மனைவி ராஜ்குமாரியின் மகள் ஆஷா, தந்தை பாஸ்வானுக்கு எதிராக வெடித்துக்கிளம்பினார். தம்பி சிராக்கிற்கு மட்டும் தனது தந்தை அதீத முக்கியத்துவம் கொடுப்பதாக கூறிய அவர் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியில் இணைந்துவிட்டார்.

சிராக் மகிழ்ச்சி

சிராக் மகிழ்ச்சி

அரசியலில் தனக்குப் போட்டியாக இருந்த அக்கா ஆஷா தேவி ஒரு வழியாக கட்சியை விட்டு வெளியேறியதால் சிராக் பாஸ்வானுக்கு ரூட் கிளியரானது. கட்சியின் தான் வைத்தது தான் சட்டம் என்ற நிலை உருவானது. 2012-ல் லோக் ஜனசக்தி கட்சியில் இணைந்த சிராக் 2019-ல் அக்கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுகிறார். வெறும் 8 ஆண்டுகளில் கட்சியை கைப்பற்றினார் என்றால் சிராக்கின் அரசியல் சாணக்கியத்தனம் எந்தளவிற்கு இருந்திருக்கும் என்பதை நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள்.

36 வயது

36 வயது

இதனிடையே பீகார் மாநிலம் ஜமுவாய் மக்களவைத் தொகுதி உறுப்பினராக உள்ள சிராக் பாஸ்வான் நாடாளுமன்ற பொதுப்பணிகள் குழு உறுப்பினராகவும் இருக்கிறார். 36 வயதுடைய சிராக் பாஸ்வானுக்கு இன்னும் திருமணம் நடைபெறவில்லை. அவர் ஒரு பெண்ணை காதலித்து வருவதாக கூறப்பட்டாலும், தனக்கு வரவிருக்கும் மனைவியை தனது அப்பாவும் அம்மாவும் தேர்ந்தெடுப்பார்கள் எனக் கூறி வருகிறார்.

சாணக்கியத்தனம்

சாணக்கியத்தனம்

சிராக் பாஸ்வானின் சாணக்கியத்தனத்திற்கு ஒரு எடுத்துக்காட்டை கூற வேண்டுமென்றால் இதனைக் கூறலாம். கடந்த 2002-ம் ஆண்டு நிகழ்ந்த குஜராத் கலவரத்திற்கு பின்னர் பாஜகவுடனான உறவை முறித்துக்கொண்ட ராம்விலாஸ் பாஸ்வான் அதற்கு பிறகு பாஜகவை கடுமையாக விமர்சித்து வந்தார். இந்நிலையில் அடிமேல் அடித்தால் அம்மியும் கரையும் என்பது போல் தந்தை ராம்விலாஸ் பாஸ்வானை சமாதானம் செய்து ஒரு வழியாக அவரது மனதை கரைத்து, கடந்த 2014-ம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணியில் லோக் ஜனசக்தியை இணைத்தார் சிராக்.

தேஜஸ்வி யாதவ்

தேஜஸ்வி யாதவ்

பீகார் சட்டமன்றத் தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ் முன்னிறுத்தப்படுகிறார். இந்நிலையில் தானும் சளைத்தவனல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் லோக் ஜனசக்தியை தனித்து களமிறக்கி பலப்பரீட்சை நடத்த முன் வந்துள்ளார் சிராக் பாஸ்வான். பீகார் சட்டமன்றத் தேர்தலை பொறுத்தவரை அதை கூர்ந்து கவனிப்பவர்களுக்கு ஒன்று புரிய வரும், அதாவது நிதிஷ்குமார் இந்த முறை மோத இருப்பது இரண்டு இளைஞர்களிடம்.

தன்மானப் பிரச்சனை

தன்மானப் பிரச்சனை

லாலு பிரசாத் யாதவ், ராம் விலாஸ் பாஸ்வான் ஆகிய இருவரும் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் இருப்பதால் அவர்களது மகன்கள் தலைமையில் இந்த முறை ஆர்.ஜே.டியும், லோக் ஜனசக்தியும் தேர்தலை சந்திக்கின்றன. இவர்கள் இருவரிடம் தோற்றால் அரசியலில் நீண்ட அனுபமிக்க நிதிஷ்குமாரின் பிம்பம் தேசியளவில் சிதறக்கூடும். இதனால் தன்மானப் பிரச்சனையாக கருதி காரியமாற்றத் தொடங்கியிருக்கிறார் நிதிஷ்.

 
 
 
English summary
Who is this Chirag Paswan and what his background?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X