ராஜேஷ்தாஸ் மீதான பாலியல் புகார் : பெரம்பலூரில் விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி எஸ்.பி முத்தரசி
பெரம்பலூர்: டிஜிபியாக இருந்த ராஜேஷ் தாஸ் மீது பெண் ஐபிஎஸ் அதிகாரி அளித்த பாலியல் புகார் விசாரிக்க விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்ட சிபிசிஐடி எஸ்.பி. முத்தரசி இன்று பெரம்பலூரில் விசாரணையை தொடங்கியுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் ஐபிஎஸ் அதிகாரியிடம் எஸ்.பி. முத்தரசி வாக்குமூலம் பெறுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்ற போது பாதுகாப்பு பணியில் இருந்த சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் பெண் ஐபிஎஸ் அதிகாரியிடம் தகாத முறையில் நடந்து கொண்டார் என்பது குற்றச்சாட்டு. இது குறித்து அந்த பெண் ஐபிஎஸ் அதிகாரி டிஜிபி திரிபாதியிடம் புகார் அளிப்பதற்காக கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி சென்னைக்கு சென்ற போது பல தடைகள் ஏற்பட்டது.
செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி கண்ணன் நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள் உதவியுடன் காரில் வந்த பெண் எஸ்.பி யை வழிமறித்து சமாதானம் பேச முயன்றார். ஆனால் பெண் எஸ்பி அதற்கு சம்மதிக்காமல் சென்னைக்கு புறப்பட்டு செல்ல முயன்ற போது எஸ்பி கண்ணன் பெண் எஸ்பியின் கார் சாவியை எடுத்து வைத்துக்கொண்டார்.
பின்னர் கடும் போராட்டத்திற்கு பிறகு பெண் எஸ்பி சென்னை வந்து உள்துறை செயலாளர் பிரபாகர் மற்றும் டிஜிபி திரிபாதியிடம் புகார் அளித்தார்.

விசாரணைக்குழு
பெண் எஸ்.பி அளித்த புகாரின் படி உள்துறை செயலாளர் பிரபாகர், பாலியல் தொந்தரவு கொடுத்த சிறப்பு டிஜிபியை அதிரடியாக சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி பதவியில் இருந்து காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உத்தரவிட்டார். மேலும், பாலியல் புகார் குறித்து விசாரிக்க, கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையில் 6 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைத்து உத்தரவிட்டார்.

வழக்குப் பதிவு
பெண் எஸ்.பி கொடுத்த பாலியல் புகாரின் படி சிபிசிஐடி போலீசார் சிறப்பு டிஜிபி மீது ஐபிசி 354, பெண்கள் துன்புறுத்தல் தடுப்பு சட்டம் என 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதேபோல், பெண் எஸ்.பியை புகார் அளிக்க விடாமல் தடுத்த செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி. கண்ணன் மீதும் சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பெயரை வெளியிடக்கூடாது
பாலியல் புகார் வழக்கை தாமாக முன்வந்து விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஐபிஎஸ் அதிகாரியே புகார் தர இவ்வளவு சிரமம் என்றால் சாதாரண பெண் காவலர்களில் நிலை என்ன? என கேள்வி எழுப்பியுள்ளது. இதை அரசியலாக்க வேண்டாம் என்றும் பாதிக்கப்பட்ட பெண் அதிகாரியின் பெயரை வெளியிடவோ பயன்படுத்தவோ கூடாது எனவும் நீதிபதி கேட்டுக் கொண்டுள்ளார்.
பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் வழக்கை உயர் நீதிமன்றம் நேரடியாக கண்காணிக்கும் எனவும் நீதிபதி அறிவித்துள்ளார்.

எஸ்.பி முத்தரசி
இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக சிபிசிஐடி எஸ்பி முத்தரசி நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது விசாரணையை நேற்றே தொடங்கிவிட்டார். முதற்கட்டமாக செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் செங்கல்பட்டு எஸ்பி கண்ணன் வழிமறித்து கார் சாவியை பிடிங்கிய சிசிடிவி காட்சியையும் சிபிசிஐடி காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

விசாரணை தொடங்கியது
குற்றச்சாட்டிற்கு உள்ளான சிறப்பு டிஜிபி மற்றும் குற்றத்திற்கு உடந்தையாக இருந்த எஸ்.பி கண்ணனுக்கு நேரில் ஆஜராகும்படி சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதனிடையே எஸ்.பி முத்தரசி இன்று பெரம்பலூரில் தனது விசாரணையை தொடங்கியுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பியிடம் பாலியல் புகார் தொடர்பாக வாக்குமூலம் பெறுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.