அமைச்சர் பேச.. பிரதமர் மோடி ஆமோதிக்க.. அப்போ விரைவில் ‘தேசிய கல்விக் கொள்கை’? - திமுக என்ன செய்யும்?
சென்னை : தேசிய கல்வி கொள்கை தமிழ் வளர்ச்சிக்கு மிகவும் உதவும். இந்திய மொழிகளை ஊக்குவிப்பதற்காக தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது என பிரதமர் மோடி இன்று உரையாற்றியுள்ளார்.
மத்திய அமைச்சர் எல்.முருகன் பேசும்போதும், புதிய கல்விக் கொள்கை தாய்மொழியை ஊக்குவிக்கும், வலிமையான இந்தியாவை உருவாக்கும் எனப் பேசினார்.
”பாரத் மாதா கி ஜே.. வந்தே மாதரம்” - 3 முறை முழங்கிவிட்டு சென்னையில் உரையை நிறைவு செய்த மோடி
சமீபத்தில் ஆளுநர் ரவியும் புதிய கல்விக் கொள்கை பற்றி பேசியிருந்தார். தேசிய கல்விக்கொள்கையை அமல்படுத்துவதில் மத்திய அரசு திட்டவட்டமாக இருப்பதையே இந்த நிகழ்வுகள் காட்டுகின்றன.

திட்டங்கள் தொடக்கம்
சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, பல்வேறு கட்டமைப்பு செயல் திட்டங்களை துவக்கி வைத்தார். தாம்பரம்-செங்கல்பட்டு இடையே 30 கி.மீ. தூரத்துக்கு ரூ.598 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள 3-வது ரயில் பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். மதுரை-தேனி இடையே ரூ.506 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள அகல ரயில் பாதையையும் திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

31,500 கோடி மதிப்பிலான திட்டங்கள்
கலங்கரை விளக்கம் செயல் திட்டத்தின் கீழ் ரூ.116 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 1,152 வீடுகளை பிரதமர் மோடி பயனாளிகளுக்கு ஒப்படைத்தார். ரூ. 5,852 கோடி செலவில் துறைமுகம்-மதுரவாயல் இடையே அமைக்கப்படும் இரண்டடுக்கு மேம்பாலம், ரூ.14.872 கோடி செலவில் சென்னையில் இருந்து பெங்களூருக்கு விரைவு வழி சாலை ஆகிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். நிறைவுற்ற திட்டங்கள் மற்றும் புதிய திட்டங்கள் என மொத்தம் ரூ. 31 ஆயிரத்து 500 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் இன்று தொடங்கி வைத்துள்ளார்.

தேசிய கல்விக் கொள்கை
இந்த விழாவில் பேசிய பிரதமர் மோடி, "தேசிய கல்வி கொள்கை தமிழ் வளர்ச்சிக்கு மிகவும் உதவும். இந்திய மொழிகளை ஊக்குவிப்பதற்காக தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. தேசிய கல்வி கொள்கையால் மருத்துவம், தொழில்நுட்ப படிப்புகளை தாய்மொழியில் படிக்கும் வாய்ப்பு ஏற்படும். பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பாரதியார் பெயரில் தமிழ் இருக்கை அமைக்கப்பட்டுள்ளது." எனப் பேசினார்.

எல்.முருகன்
இதேபோல, மத்திய அமைச்சர் எல்.முருகன் வரவேற்புரையாற்றிப் பேசும்போதும் தேசிய கல்விக்கொள்கை பற்றிப் பேசினார். எல்.முருகன் பேசுகையில், "புதிய கல்விக் கொள்கை தாய்மொழியை ஊக்குவிக்கும், வலிமையான இந்தியாவை உருவாக்கும். அடித்தட்டு மக்களின் முன்னேற்றத்தில் பிரதமர் மோடி கண்ணும் கருத்துமாக உள்ளார். சொல்லுதல் யார்க்கும் எளியவாம்; சொல்லிய வண்ணம் செயல் என்று திருக்குறளை மேற்கோள்காட்டி, சொல்லியதை சொன்னபடி செய்பவர் பிரதமர் நரேந்திர மோடி" எனத் தெரிவித்தார்.

சமீபத்தில் ஆளுநர்
சமீபத்தில் கோவை பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுகையிலும், தேசிய கல்விக் கொள்கை பற்றிக் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆளுநர் பேசுகையில், தேசிய கல்வி கொள்கை என்பது பள்ளி கல்வியிலிருந்து பட்டப்படிப்பு வரை பிராந்திய மொழிகளை ஊக்குவிக்கிறது. மத்திய அரசு ஒரு மொழியை திணிப்பதாக ஒரு தோற்றம் உருவாக்கப்படுகிறது. ஆனால் அது உண்மைக்கு புறம்பானது எனக் கூறியிருந்தார்.

மத்திய அரசு உறுதி
இவ்வாறாக மத்திய அமைச்சர், ஆளுநர் தொடங்கி, பிரதமர் மோடி வரை தேசிய கல்விக் கொள்கை பற்றி பலரும் பேசி வருவது புதிய தேசிய கல்விக்கொள்கையை அமல்படுத்துவதில் மத்திய அரசு திட்டவட்டமாக இருப்பதையே காட்டுகிறது. இதனால், விரைவில் இதுகுறித்த உத்தரவுகள் வெளியாகலாம் என எதிர்பாரக்கப்படுகிறது. தேசிய கல்விக் கொள்கைக்கு மாநிலத்தில் ஆளும் திமுக எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இனி என்ன நிலைப்பாடு எடுக்கப்படும் எனக் கேள்வி எழுந்துள்ளது.

திமுக நிலைப்பாடு
ஆளுநர் பங்கேற்ற விழாவிலேயே தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, புதிய கல்வி கொள்கையில் உள்ள நல்ல அம்சங்களை நாங்கள் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறோம். ஆனால் மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொள்ள முடியாது. தமிழ்நாட்டிற்கு என தனி கல்வி கொள்கையும் மொழி கொள்கையும் இருக்க வேண்டும். அதற்காக தான் தமிழ்நாடு மாநில கல்வி கொள்கையை வகுக்க குழு அமைத்துள்ளார் முதல்வர் எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.