ஜனாதிபதி தேர்தல்..புதுச்சேரி வந்தார் பாஜக கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்மு - ஆதரவு கோரினார்
புதுச்சேரி: தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளரான திரெளபதி முர்மு முதற்கட்ட பயணமாகப் புதுச்சேரி வருகை தந்தார். குடியரசுத்தலைவர் தேர்தலில் தனக்கு வாக்களிக்கும் படி பாஜக, என்ஆர் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்களிடம் ஆதரவு கோரினார்.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் முடிவடைகிறது. புதிய ஜனாதிபதியை தேர்வு செய்யும் தேர்தல் வருகிற 18ஆம் தேதி நடக்கிறது. தேர்தலில் பாஜக கூட்டணி கட்சிகள் சார்பில் திரௌபதி முர்மு, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்கா போட்டியிடுகின்றனர்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இருவரும் நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களுக்கும் நேரில் சென்று எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகின்றனர்.
இதன்படி பாஜக கூட்டணி ஜனாதிபதி வேட்பாளர் திரௌபதி முர்மு, இன்று புதுவைக்கு வந்தார். டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் புதுவை லாஸ்பேட்டை விமான நிலையத்துக்கு வந்தார். அவரை முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், தேனீ.ஜெயக்குமார், சாய்.ஜெ.சரவணன்குமார், சந்திரபிரியங்கா, பாஜக மாநில தலைவர் சாமிநாதன் மற்றும் எம்எல்ஏக்கள் வரவேற்றனர்.
விமான நிலைய நுழைவு வாயிலில் புதுவை மாநில பா.ஜதா சார்பில் மங்கள இசையுடன் பூரணகும்ப மரியாதை அளிக்கப்பட்டது. அங்கிருந்து கார் மூலம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அக்கார்டு ஓட்டலுக்கு 12 மணிக்கு வந்தார். அங்கு பாஜக மகளிரணி சார்பில் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து ஓட்டலில் உள்ள அறைக்கு சென்றார். சிறிது நேரத்துக்கு பின் தரை தளத்துக்கு வந்து தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் கூட்டத்தில் பங்கேற்றார்.
கூட்டத்தில் என்.ஆர்.காங்கிரஸ் தலைவரும், முதல்-அமைச்சருமான ரங்கசாமி தலைமை வகித்தார். கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் சாமிநாதன், என்.ஆர்.காங்கிரஸ் அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், தேனீ.ஜெயக்குமார், சந்திரபிரியங்கா, பா.ஜனதா அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய்.ஜெ.சரவணன்குமார், செல்வகணபதி எம்.பி., துணை சபாநாயகர் ராஜவேலு, எம்.எல்.ஏ.க்கள் கல்யாணசுந்தரம், ஜான் குமார், ரிச்சர்டு, பாஸ்கர், லட்சுமிகாந்தன், ஏ.கே.டி. ஆறுமுகம், கே.எஸ்.பி.ரமேஷ், திருமுருகன், சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் அங்காளன், சிவசங்கரன், கொல்லப்பள்ளி சீனிவாச அசோக், பிரகாஷ்குமார், நியமன எம்.எல்.ஏ.க்கள் வெங்கடேசன், ராமலிங்கம், அசோக்பாபு, என்.ஆர்.காங்கிரஸ் செயலாளர் ஜெயபால், அ.தி.மு.க. மாநில செயலாளர்கள் அன்பழகன், ஓம்சக்திசேகர் ஆகியோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளர் திரௌபதி முர்முவை அறிமுகப்படுத்தினர். அவர், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.யிடம் தனக்கு வாக்களிக்கும்படி ஆதரவு கோரி பேசினார். புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 30 சட்டமன்ற உறுப்பினர்களில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள என்.ஆர்.காங்கிரஸ் உறுப்பினர்கள் மற்றும் பாஜக தரப்பில் 16 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களுடன் 4 சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர். இதன்மூலம் பாஜகவை சேர்ந்த ஒரு மாநிலங்களவை உறுப்பினர் உட்பட 20 சட்டமன்ற உறுப்பினர்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் குடியரசுத் தலைவர் வேட்பாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள திரெளபதி முர்முவை நேரில் சந்தித்து தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து பாஜக நிர்வாகிகளை சந்தித்தார். இதன்பின் அவர் லாஸ்பேட்டை விமான நிலையம் சென்றார். அங்கிருந்து தனி விமானம் மூலம் சென்னைக்கு சென்றார்.