கூட்டணியில் என்.ஆர். காங். சேர நெருக்கடி தருகிறது பாஜக- ரங்கசாமியை டெல்லிக்கு அழைத்த அமித்ஷா !
புதுச்சேரி: தேசிய ஜனநாயக கூட்டணியில் என்.ஆர். காங்கிரஸ் இணைய வேண்டும் என பாஜக நெருக்கடி கொடுத்து வருகிறது. என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியை உடனே டெல்லிக்கு வர உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதுச்சேரியில் காங்கிரஸ், திமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்ததால் நாராயணசாமி தலைமையிலான அரசு கவிழ்ந்தது. இதையடுத்து ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்கள் பலரும் பாஜகவில் இணைந்துவிட்டனர்.

புதுவையில் பாஜக ஆட்சி
காரைக்காலில் பிரசார கூட்டத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, புதுச்சேரியில் பாஜக தலைமையில்தான் அடுத்த ஆட்சி அமையும் என்றார். தம்மை முதல்வர் வேட்பாளராக அறிவிக்காமல் பாஜக தலைமையில் ஆட்சி என அமித்ஷா பேசியதால் என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி அதிருப்தி அடைந்தார்.

ரங்கசாமி அதிருப்தி
ரங்கசாமியை பாஜக சமாதானப்படுத்துவதற்கு மேற்கொண்ட முயற்சிகள் எதுவும் முன்னேற்றம் தரவில்லை. தம்மை முதல்வர் வேட்பாளர் என பாஜக அறிவிக்க வேண்டும் என்பது ரங்கசாமியின் எதிர்பார்ப்பு. என்.ஆர். காங்கிரஸ், அதிமுக இல்லாமல் புதுச்சேரியில் பாஜகவால் தேர்தலை எதிர்கொள்ள முடியாது என்பது யதார்த்த நிலவரம்.

ரங்கசாமியுடன் அமித்ஷா பேச்சு
இதையடுத்து ரங்கசாமியை வீடியோ காலில் தொடர்பு கொண்டு உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாக கூறப்படுகிறது. அப்போது, பிரச்சனைகளை நேரில் பேசி தீர்த்து கொள்வோம். தனிவிமானம் அனுப்புகிறேன்.. டெல்லிக்கு உடனே வாங்க என ரங்கசாமியை அமித்ஷா அழைத்துள்ளார்.

நெருக்கடியில் பாஜக
இருந்தபோதும் ரங்கசாமி இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் புதுச்சேரியில் பாஜக கடும் நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது.