காங்கிரஸில் திடீர் போர்க்கொடி.. ‘நாராயணசாமிய தூக்குங்க’ 42 பேர் கையெழுத்து- ராகுலுக்கு பறந்த கடிதம்!
புதுச்சேரி : புதுச்சேரி அரசியலில் இனி நாராயணசாமி தலையிடக்கூடாது என்று காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ராகுல் காந்திக்கு கடிதம் அனுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியில் காங்கிரஸின் தோல்விக்கு காரணமான புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவரை மாற்ற வேண்டும் என்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
காங்கிரஸ் மாநில நிர்வாகிகளுக்கு எதிராக காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏக்கள் உட்பட புதுச்சேரி காங்கிரஸ் கமிட்டியை சேர்ந்த 42 நிர்வாகிகள் கையெழுத்திட்டு ராகுல் காந்திக்கு கடிதம் அனுப்பியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஓபிஎஸ் பினாமி முதலீடு.. ஈபிஎஸ் ஆதரவாளர் கிலோ கணக்கில் தங்கம்.. பகீர் குற்றச்சாட்டுகள்- பரபர அதிமுக!

3 பேரே காரணம்
புதுச்சேரி காங்கிரஸ் கமிட்டியின் 42 நிர்வாகிகள் கையெழுத்திட்டுள்ள அந்தக் கடிதத்தில், புதுச்சேரி காங்கிரஸ் கட்சி மிகவும் மோசமான நிலையில் உள்ளது. புதுவை மண் காங்கிரஸ் கட்சியின் கோட்டை. ஆனால் கடந்த 2021-ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 30 தொகுதிகளில் வெறும் 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளோம். இந்த மோசமான தோல்விக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. இந்த தோல்விக்கு முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, தலைவர் ஏ.வி.சுப்ரமணியன், வைத்திலிங்கம் எம்.பி. ஆகியோரே முக்கிய காரணம்.

ஒரு வருடம் ஆச்சு
காங்கிரஸ் தோல்விக்கு பிறகு தோல்விக்கான காரணம் குறித்து ஆராய தினேஷ் குண்டுராவ், உத்தம் ரெட்டி ஆகியோரை புதுச்சேரிக்கு அனுப்பியது காங்கிரஸ் மேலிடம். இதில் மாநில தலைவர் ஏ.வி.சுப்ரமணியத்தை மாற்ற வேண்டும் என தலைமைக்கு தெரிவித்தனர். ஆனால் தேர்தல் முடிந்து ஓராண்டுக்கு மேலாகியும் புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் மாற்றப்படவில்லை. காங்கிரஸ் கமிட்டியின் முக்கிய கோரிக்கை புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவரை உடனடியாக மாற்ற வேண்டும்.

நாராயணசாமி தலையிடக்கூடாது
அப்படிச் செய்தால் தான் வருகிற 2024-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற முடியும். முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி காங்கிரஸ் தொண்டர்கள், நிர்வாகிகள் மற்றும் மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டார். புதுச்சேரி அரசியலில் இனி நாராயணசாமி தலையிடக்கூடாது. புதுச்சேரி மாநிலத்துக்கு புதிய தலைவரை நியமிக்க வேண்டும். இதன் மூலம் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த முடியும். மேலும் கட்சி தொண்டர்களிடமும், மக்களிடமும் நம்பிக்கையை பெற முடியும். வருகிற 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க முடியும் எனத் தெரிவித்துள்ளனர்.

பரபரப்பு
ராகுல் காந்திக்கு புதுச்சேரி காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் எழுதிய கடிதத்தால் அரசியல் வட்டாரத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கட்சியின் முக்கிய நிர்வாகிகளை மாற்றக் கோரி, 42 நிர்வாகிகள் டெல்லிக்கே கடிதம் அனுப்பியுள்ளதால், விரைவில் டெல்லி மேலிடம் புதுச்சேரிக்கு குழுவை அனுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.