புதுச்சேரி வயர் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து - இயந்திரங்கள் எரிந்து நாசம்
புதுச்சேரி: புதுச்சேரியில் தனியார் வயர் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான இயந்திரங்கள் எரிந்து சாம்பலானது. தீ விபத்துக்கான காரணம் பற்றி தீவிரமாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
புதுச்சேரி அருகே உள்ள சேதாரப்பட்டியில் தனியார் வயர் தொழிற்சாலை இயங்கி வருகிறது. தொழிற்சாலைக்கு இன்று காலை வழக்கம் போல ஊழியர்கள் பணிக்கு திரும்பிய நிலையில், ஆலையின் ஒரு பகுதியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள், உடனே தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள்ளாகவே தொழிற்சாலை முழுவதும் மளமளவென தீ பரவியுள்ளது. தொழிற்சாலை முழுவதும் தீ கொழுந்து விட்டு எரிவதால் தீயை அணைக்கும் பணியில் சவால் நீடிக்கிறது. இந்த திடீர் விபத்தால் பல லட்சம் மதிப்பிலான இயந்திரங்கள், பொருட்கள் எரிந்து சேதமடைந்துள்ளன.

சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டிருக்கின்றனர். தகவல் அறிந்து வந்த போலீசார், தீ விபத்துக்கான காரணம் பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின்கசிவினால் தீ விபத்து ஏற்பட்டதா? இந்த விபத்தில் ஏதேனும் உயிர் சேதம் ஏற்பட்டிருக்கிறதா எனவும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

"முருகன் சொன்ன 60": முதல்ல 60 வேட்பாளர்கள் இருக்காங்களா.. கலகல சர்வே.. கலாய்த்த வாசகர்கள்!