புதுச்சேரி ரீனாவுக்கு பல வாலிபர்களுடன் தொடர்பு.. கண்டித்த புதுமாப்பிள்ளை.. நடந்த பயங்கரம்
புதுச்சேரி: புதுச்சேரி வில்லியனூர் அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கணவனை கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணம் நடந்த 15 நாளில் இந்த பயங்கரம் நடந்திருக்கிறது. திருமணத்துக்கு பிறகும் ரீனா ஒரு வாலிபருடன் தொடர்ந்து தொடர்பு வைத்திருந்தார். இதை கண்டித்ததால் கணவனை ரீனா கொலை செய்திருக்கிறார்.

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்தவர் மன்சூர். இவரது மகன் இலியாஸ் (வயது30). இவருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி உள்ள நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மனைவியை பிரிந்து இலியாஸ் புதுவை வந்தார்.
வில்லியனூர் அருகே தமிழக பகுதியான பெரம்பையில் ஒரு தனியார் டிராவல்ஸ் உரிமையாளருக்கு சொந்தமான இடத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். அப்பகுதியில் பழைய இரும்பு-பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து அதனை விற்பனை செய்து பிழைப்பு நடத்தி வந்தார்.

இலியாஸ் மரணம்
கடந்த 15 நாட்களுக்கு முன்பு இவருக்கும் அதே பகுதியில் வசித்த டெல்லியை சேர்ந்த ரீனா என்பவருக்கும் திருமணம் நடந்தது. கடந்த 2-ந் தேதி மயங்கிய நிலையில் இலியாசை அவரது மனைவி ரீனா மற்றும் ரீனாவின் பெற்றோர் வில்லியனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இலியாஸ் இறந்து விட்டதாக தகவல் தெரிவித்தனர்.

உடலை புதைக்க எதிர்ப்பு
இதையடுத்து இலியாசின் உடலை ரீனாவின் பெற்றோர் கொண்டு சென்று சுல்தான் பேட்டையில் உள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்ய முயன்றனர். ஆனால் இதற்கு அப்பகுதியை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இறந்து போன இலியாசின் கழுத்தில் காயம் இருந்ததால் அவர்கள் சந்தேகமடைந்து உடலை புதைக்க அனுமதிக்கவில்லை.

நேரில் விசாரணை
இதையடுத்து வில்லியனூர் போலீசில் புகார் அளிக்கப்படவில்லை. ஆனால் சம்பவம் நடந்த இடம் தமிழக பகுதி என்பதால் கோட்டக்குப்பம் போலீசாருக்கு வில்லியனூர் போலீசார் தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து கோட்டக்குப்பம் துணை போலீஸ் சூப்பிரண்டு அஜய்தங்கம், இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கனகசெட்டிக்குளத்தில் உள்ள பிம்ஸ் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

முண்ணுக்குபின் முரண்
பின்னர் இது தொடர்பாக கோட்டக்குப்பம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் பிரேத பரிசோதனை முடிவில் இலியாஸ் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ரீனாவிடம் விசாரணை நடத்தினர். விசாரணையின் போது ரீனா முன்னுக்குபின் முரணான தகவல்களை தெரிவித்தார். மேலும் அப்பகுதியில் போலீசார் விசாரணை நடத்திய போது ரீனாவுக்கு பல வாலிபர்களுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

விசாரணையில் அம்பலம்
இதைத்தொடர்ந்து போலீசார் ரீனாவிடம் கிடுக்குபிடி விசாரணை நடத்தினர். இலியாசுடன் நடந்த திருமணத்துக்கு பிறகும் ரீனா ஒரு வாலிபருடன் தொடர்ந்து தொடர்பு வைத்திருந்தார். இதனை இலியாஸ் கண்டித்து வந்துள்ளார். கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் ரீனா தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து இலியாசை வயரால் கழுத்தை இறுக்கி கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து ரீனா கள்ளக்காதலன் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கணவனை கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.