விடியவிடிய கட்டிவைத்து அடித்து..பணம் வாங்கிட்டு தலைமறைவானவருக்கு நேர்ந்த கொடூரம்- விசாரணையில் பகீர்!
புதுச்சேரி: கடன் வாங்கிக் கொண்டு தலைமறைவானவர் கூலிப்படையை ஏவி கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தலைமறைவானவர் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பைனான்சியர்கள் உள்பட 9 பேரை புதுச்சேரி போலீசார் கைது செய்துள்ளனர்.
அடித்துக் கொலை செய்து, உடலை வீசிய நிலையில், ஆட்டோ எண்ணை வைத்து குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.
அடுக்கடுக்கான கேள்விகள்! கோடநாடு கொலை கொள்ளை வழக்கு.. சயானிடம் போலீசார் தீவிர விசாரணை

கட்டையால் அடித்து கொலை
புதுச்சேரியை அடுத்த தட்டாஞ்சாவடி பகுதியில் ஒழுங்கு முறை விற்பனை கூடம் உள்ளது. நேற்று இங்கு 30 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று கிடந்தது. இதுகுறித்து கோரிமேடு காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இறந்து கிடந்த நபர் கட்டையால் தாக்கப்பட்டு கொலை செய்யபட்டு இருந்தது தெரியவந்தது. உடலை கைப்பற்றிய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

கடத்தி கொலை
விசாரணையில் இறந்து கிடந்த நபர் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகேயுள்ள கூனிமேடு பகுதியை சேர்ந்த ஷேக் சுல்தான் (29) என்பதும், பணம் வாங்கிவிட்டு தலைமறைவானதால் அவர் கடத்தி வந்து கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது.
இது தொடர்பாக கோரிமேடு இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தீவிர விசாரணையில் இறங்கினார். சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த ஆட்டோ நம்பரை வைத்து, டிரைவரை பிடித்து நடந்த சம்பவத்தை போலீசார் தெரிந்துகொண்டனர்.

வட்டிக்கு கடன்
புதுச்சேரி நெல்லித்தோப்பைச் சேர்ந்த பைனான்சியர்களான சிவசங்கரன் மற்றும் பிரபாகரன், சந்திரமோகன், ஜாகீர் உசேன் ஆகியோரிடம் ஷேக் சுல்தான் பல லட்சம் ரூபாயை வட்டிக்கு வாங்கி உள்ளார். பணம் வாங்கி 2 வருடங்கள் ஆகியும் திருப்பித் தராமல் இழுத்தடித்து வந்துள்ளார்.
பணத்தைக் கேட்டும் கொடுக்காத நிலையில், திடீரென ஷேக் சுல்தான் தலைமறைவாகியுள்ளார். அவரை பைனான்சியர்கள் தீவிரமாக தேடி வந்தனர். இதையடுத்து ஒரு இடத்தில் ஷேக் சுல்தான் இருப்பதாக பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

கூலிப்படை
ஷேக் சுல்தானை கடத்தி வருமாறு கூலிப்படையைச் சேர்ந்த ராஜேஷ், சரத், தெஸ்தான் ஆகியோரிடம் சிவசங்கரன் கூறியுள்ளார். உடனே அவர்கள், ஷேக் சுல்தானை ஆட்டோவில் நெல்லித்தோப்புக்கு கடத்தி வந்துள்ளனர். பிறகு சிவசங்கரனின் நண்பரான சகாயராஜ் வீட்டில், ஷேக் சுல்தானை அடைத்து வைத்தனர். பைனான்சியர்களான சிவசங்கரன், பிரபாகரன், சந்திரமோகன், ஜாகீர் உசேன் ஆகியோர் முன்னிலையில் பணம் கேட்டு கூலிப்படையினர் ஷேக் சுல்தானை கடுமையாக தாக்கினர். விடிய விடிய கட்டி வைத்து அடித்ததால் ஷேக் சுல்தான் பரிதாபமாக இறந்து போனார்.

தப்பிப்பதற்காக
இதையடுத்து போலீசில் இருந்து தப்பிக்க, ஷேக் சுல்தான் உடலை ஆட்டோவில் ஏற்றி, தட்டாஞ்சாவடி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வீசி சென்று உள்ளனர். இதையடுத்து குற்றவாளிகளை தனிப்படை அமைத்து பிடித்த போலீசார் பைனான்சியர்கள் சிவசங்கரன், பிரபாகரன், ஜாகீர் உசேன்,சந்திரமோகன், சகாயராஜ் மற்றும் கூலிபடையினர் ராஜேஷ், சரத், தெஸ்தான் ஆகியோரை கைது செய்து காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். புதுச்சேரியில் நடந்த இந்தக் கொலைச் சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.