பெண் சேர்மனை மதிக்காத பி.டி.ஓ.க்கள்... நீதிமன்றத்தில் குட்டு பெற்ற கறம்பக்குடி யூனியன் ஆஃபிஸ்..!
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில், பெண் சேர்மனை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மதிக்காத விவகாரம் நீதிமன்றம் வரை சென்றிருக்கிறது.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி யூனியன் சேர்மனாக இருப்பவர் மாலா ராஜேந்திரதுரை. இவருக்கு அந்த யூனியனில் பி.டி.ஓ.க்களாக பணியாற்றும் ரவி மற்றும் காமராஜ் ஆகிய இருவரும் உரிய மரியாதை தருவதில்லை என்ற விவகாரம் இப்போது பூதாகரமாகியுள்ளது.

சேர்மன் மாலா தலைமையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றினால் அதில் அவருக்கே தெரியாமல் வரிகளை திருத்துவது, ஒப்பந்த பணிகள் குறித்த விவரத்தை சேர்மனிடம் தெரிவிக்காதது என ரவி மற்றும் காமராஜ் மீது புகார்கள் குவிகின்றன. இதில் காமராஜ் என்பவர் ஸ்கீம் பிடிஓ-வாகவும், ரவி என்பவர் ரெகுலர் பிடிஓ-வாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிந்ததில் இருந்தே தமிழகத்தின் பல இடங்களிலும் பெண் தலைவர்களுக்கு எதிரான இது போன்ற நிகழ்வுகள் தொடர்கதையாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. திமுக சார்பில் சேர்மனாக இருப்பதால் மாலாவுக்கு இந்த நிலையா அல்லது சாதி ரீதியான காரணங்கள் ஏதும் இருக்கிறதா என்பது பற்றிய விவரம் இல்லை.
இதனிடையே இந்த விவகாரத்தை சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளைக்கு கொண்டு சென்றிருந்தார் மாலா ராஜேந்திரதுரை. இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற கிளை, யூனியன் சேர்மன் என்ற முறையில் மாலாவை அரசு நிகழ்ச்சிகளுக்கு இனி முறையாக அழைப்பிதழ் கொடுத்து அழைக்க வேண்டும் என உத்தரவிட்டதுடன் வழக்கையும் முடித்து வைத்தது.

இன்றைய காலக்கட்டத்தில் அரசியலுக்கு பெண்கள் வருவதே சவாலாக உள்ளது. அப்படியே வந்தாலும் பல்வேறு இடர்பாடுகளை கடந்து ஒரு அங்கீகாரத்தை பெற எத்தனையோ போராட்டங்களை சந்திக்க வேண்டியுள்ளது. அப்படியெல்லாம் சந்தித்து ஒரு பொறுப்புக்கு வந்தால் அங்கு இது போன்ற அலுவலர்கள் இருந்தால் அவர்கள் படும்பாடு திண்டாட்டம் தான்.
இதனிடையே இது குறித்து ஒன் இந்தியா தமிழிடம் பேசிய சேர்மன் மாலா, நீதிமன்ற உத்தரவு இப்போது தான் வந்திருக்கிறது. இனி வரும் நாட்களில் யூனியன் அலுவலகத்தில் என்ன நடக்கிறது என பார்ப்போம் என சட்ட நம்பிக்கையோடு கூறினார். மேலும், பிடிஓ-க்கள் மீது குறை கூறுகிறீர்கள் அவர்கள் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என சந்தேகப்படுகிறீர் என்று வினவினோம். அதற்கு பதிலளித்த அவர், யார் இருக்கிறார்கள் என்பது பற்றி தமக்கு எதுவும் தெரியாது எனத் தெரிவித்தார்.