• search
புதுக்கோட்டை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

முதல்வர் எடப்பாடியாரின் வார்த்தைகள்.. உச்சி குளிர்ந்து போன விஜயபாஸ்கர்.. புதுக்கோட்டையில் கலகல!

Google Oneindia Tamil News

புதுக்கோட்டை : நாடே பாராட்டும் அளவிற்கு இன்றைக்குத் திறம்பட சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நிர்வகித்ததால்தான் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டிருக்கிறது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெகுவாக பாராட்டினார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அ.தி.மு.க சார்பில் விராலிமலை தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் விஜயபாஸ்கர், புதுக்கோட்டைத் தொகுதி வேட்பாளர் கார்த்திக் தொண்டைமான், திருமயம் தொகுதி வேட்பாளர் வைரமுத்து, அறந்தாங்கி தொகுதி வேட்பாளர் ராஜநாயகம், ஆலங்குடி தொகுதி வேட்பாளர் தர்ம. தங்கவேல், கந்தர்வக்கோட்டை தொகுதி வேட்பாளர் ஜெயபாரதி ஆகியோரை ஆதரித்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.

அப்போது முதல்வர் பேசுகையில், "கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களைப் பார்ப்பதற்கே பயந்து கொண்டிருந்த காலக்கட்டத்தில் மருத்துவமனையில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த, அந்த நோயாளிகளை நேரடியாகச் சந்தித்து ஆறுதல் சொல்லியதுடன், அவரோடு மருத்துவக் குழுவையும் அழைத்துச் சென்று சரியான சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கூறி, அந்த நோயாளிகள் மனம் குளிரும்படி செய்தார் உங்கள் மாவட்ட அமைச்சர், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர். நாடே பாராட்டும் அளவிற்கு இன்றைக்குத் திறம்பட அவரது துறையை நிர்வகித்ததால்தான் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

வைகை-குண்டாறு இணைப்புத் திட்டம்

வைகை-குண்டாறு இணைப்புத் திட்டம்

புதுக்கோட்டை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை கொண்டு வரப்பட்டுள்ளது. நானே நேரடியாக வந்து திறந்து வைத்தேன். அதற்கும் மேலாக அமைச்சர் விஜயபாஸ்கரின் கோரிக்கையை ஏற்று, எந்த மாவட்டத்திலும் இல்லாத வகையில் புதுக்கோட்டையிலே அரசு பல் மருத்துவக்கல்லூரி கொண்டு வந்திருக்கிறோம். நீர் மேலாண்மையில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக ரூ.14ஆயிரம் கோடிக்குக் காவிரி, தெற்கு வெள்ளாறு- வைகை-குண்டாறு இணைப்புத் திட்டம் அ.தி.மு.க ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டிருக்கிறது. இந்தத் திட்டம் நிறைவடையும் போது வறண்ட புதுக்கோட்டை, செழிப்பான புதுக்கோட்டையாக மாறும். தமிழகம் முழுவதும் 2,000 அம்மா மினி கிளினிக்குகள் துவங்கி வைக்கப்பட்டுள்ளது. அதில், புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் 79 அம்மா மினி கிளினிக்குகள் தொடங்கப்பட்டிருக்கிறது.

அரசு பள்ளி மாணவர்கள்

அரசு பள்ளி மாணவர்கள்

முன்பு தமிழகத்திலிருந்து அரசுப்பள்ளியில் படித்த குறைவான மாணவர்கள் தான் டாக்டருக்கு படிக்க முடிந்தது. தற்போது, அரசுப்பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவை நிறைவேற்றும் விதமாக 7.5சதவீத உள் இட ஒதுக்கீட்டின் மூலம் தமிழகத்தில் தற்போது அரசுப்பள்ளியில் படித்த 435பேர் எம்.பி.பி.எஸ் சேர்ந்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து மட்டும் 17 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். அடுத்தாண்டு துவங்கப்படும் 11 மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவர் எண்ணிக்கை 1,650 ஆக அதிகரிக்கப்படும்.

ஸ்டாலின் நாடகம்

ஸ்டாலின் நாடகம்

எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் மு.க.ஸ்டாலின் ஊர் ஊராகச் சென்று மக்களிடம் மனுக்களை வாங்கி அதைப் பெட்டியில் போட்டு பூட்டி அந்த மனுக்களுக்குத் தான் ஆட்சிக்கு வந்தவுடன் 100 நாட்களுக்குள் தீர்வு காண்பதாகக் கூறுகிறார். இவர் துணை முதல்வராக இருந்த போது ஏன் மக்களைச் சந்திக்கவில்லை. இது மக்களை ஏமாற்ற ஸ்டாலின் போடும் நாடகம் என்பதை மக்கள் நன்கு புரிந்துகொள்வார்கள். ஆனால், நாங்கள் 2020-ல் சட்டசபையில் 110 விதியின் கீழ் அறிவித்த உதவி மையத்தை, உடனே அறிமுகப்படுத்தி அதன்மூலம் பெறப்பட்ட 9.77லட்சம் மனுக்களில் 5.27லட்சம் மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது. இனிமேல் ஸ்டாலின் கொண்டு போன பெட்டியை திறக்கவே முடியாது. மனுக்களையும் ஸ்டாலின் வாங்க மாட்டார்.

தேங்காய் கேட்டு சண்டை

தேங்காய் கேட்டு சண்டை

திமுக என்றாலே அராஜக கட்சி. ஓட்டலில் ஓசி பிரியாணி கேட்டு திமுகவினர் சண்டை போடுகிறார்கள். பெரம்பலூரில் திமுக மாவட்ட கவுன்சிலர், பெண்கள் அழகு நிலையத்திற்குச் சென்று ஒரு பெண்ணைத் தாக்குகிறார். திருமயத்தில் தேங்காய் கடை வைத்திருக்கும் ஏழைப் பெண்மணியிடம் இலவசமாய் தேங்காய் கேட்டு சண்டை போட்ட கட்சி திமுக. இப்படிப்பட்ட அராஜக கட்சியான திமுகவை வருகின்ற தேர்தலில் படுதோல்வி அடையச் செய்ய வேண்டும்.

அரசின் திட்டங்கள்

அரசின் திட்டங்கள்


நான் முதல்வராகப் பொறுப்பேற்ற போது, "எடப்பாடியோட ஆட்சி ஒரு மாதத்தில போயிடும், 3 மாசத்துல போயிடும்னு ஊர், ஊரா போய் ஸ்டாலின் பேசினாரு. ஒரு மாசம் இல்ல, மூணு மாசம் இல்ல, 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5வது ஆண்டில் வெற்றிகரமாக நடத்திக்காட்டிக்கிட்டு இருக்கேன். உழைப்பு, நேர்மை, விசுவாசம் எங்களிடத்தில் இருக்கிறது. டிராக்டர் மானியம், சோலார் மின் மோட்டர் மானியம் என வேளாண் இயந்திரங்கள் வாங்க மானியம் ஏராளமான திட்டங்களைக் கொடுத்து விவசாயிகளைக் காக்கும் அரசாக அதிமுக திகழ்கிறது. இப்படி ஏராளமான திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம். ஆனால், எடப்பாடி அரசு மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் பொய்யான பிரசாரம் செய்து வருகிறார்" இவ்வாறு கூறினார்.

English summary
Chief Minister Edappadi Palanisamy lauded the effective management of Health Minister Vijayabaskar for bringing the spread of corona virus under control in Tamil Nadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X