இதுதான் தமிழ்நாடு! சிவன் கோவிலுக்கு சீர் கொண்டு வந்த இஸ்லாமியர்கள்! புன்னகைக்கும் புதுக்கோட்டை.!
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள நெடுவாசலில் அமைந்துள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு மதநல்லிணக்கத்தை போற்றும் வகையில் அவ்விழாவிற்காக 2 கிராமங்களை சேர்ந்த இஸ்லாமியர்கள் சீர் கொண்டு வந்தனர்.
பல தலைமுறைகளாக தங்களை கிராம பகுதி மக்களிடையே இது போன்ற மத நல்லிணக்கம் தொடர்வதாகவும் காலங்கள் கடந்தும் இதுபோன்ற நிகழ்வு தொடரும் என அந்த இரு மதங்களை சேர்ந்த மக்களும் மகிழ்வோடு தெரிவித்துள்ளனர்.
மதியம் 3 மணி முதல் அதிகாலை 1 மணி வரை நடந்த கூட்டம்! 10 மணி நேரம் என்ன ஆலோசித்தார் திருமாவளவன்!
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள நெடுவாசல் கிராமத்தில் அமைந்துள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த மங்களநாயகி உடனுறை பாலாண்ட ஈஸ்வரர் சுவாமி ஆலயம் ஸ்ரீ நாடியம்மன் ஆலயம் மற்றும் பரிவார மூர்த்திகள் ஆலயங்களின் கும்பாபிஷேக விழா நாளை மிக விமர்சையாக நடைபெற உள்ளது.

கோவில் கும்பாபிஷேகம்
இந்த விழாவை முன்னிட்டு இன்று இரவு அந்தப் பகுதியின் கலாச்சாரத்தின் அடிப்படையில் புதுக்கோட்டை தஞ்சை மாவட்ட எல்லை கிராமங்களில் உள்ள பல்வேறு கிராம மக்கள் நாட்டியக் குதிரை ஆட்டங்களுடனும் செண்டை உறுமி மேளங்கள் முழங்க கண்கவர் வாணவேடிக்கையுடன் நெடுவாசல் கிராமத்தில் உள்ள கோயிலுக்கு சீர் கொண்டு வரும் நிகழ்வில் ஈடுபட்டு வருகின்றனர்.

இஸ்லாமியர்கள் சீர்வரிசை
இந்நிலையில் அந்த விழாவிற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையிலும் மத நல்லிணக்கத்தை போற்றும் விதமாகவும் அருகே உள்ள ஆவணம் மற்றும் காசிம்புதுப்பேட்டை கிராமத்தை சேர்ந்த இஸ்லாமியர்கள் பூ,பழம், இனிப்புகள் அடங்கிய தட்டுதாம்பழங்களை கையில் ஏந்தியபடி நெடுவாசல் கோயிலுக்கு சீர்வரிசை பொருட்களை ஊர்வலமாகச் கொண்டு வருகின்றனர்.

உற்சாக வரவேற்பு
அவர்களை நெடுவாசல் கிராம மக்கள் மற்றும் விழா குழுவினர் மாலை அணிவித்து வரவேற்று இஸ்லாமியர்களை கோயிலுக்குள் அழைத்துச் சென்றனர்.பின்னர் இஸ்லாமியர்கள் கொடுத்த சீர்வரிசை பொருட்கள் மற்றும் பணத்தை விழாக்குழுவினர் பெற்றுக் கொண்டு அவர்களுக்கு தங்கள் நன்றியை தெரிவித்தனர்.இந்த காட்சி காண்பவர்களுக்கு ஒரு வியப்பை ஏற்படுத்தியது.

பாரம்பரிய பழக்கம்
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், பல ஆண்டுகளாக இப்பகுதி கிராமங்களில் உள்ள கட்டணங்களை இந்து கோயில்களின் திரு விழாவின்போது இஸ்லாமியர்கள் நேரில் சென்று வாழ்த்து தெரிவிப்பதும் அதேபோல் இஸ்லாமியர்களின் மசூதி திறப்பு விழா மற்றும் பெரு நாட்களுக்கு இந்துக்கள் நேரில் சென்று வாழ்த்துத் தெரிவிப்பது பாரம்பரியமாகத் தொடர்ந்து வருவதாகவும் மதங்களைக் கடந்து மனித நேயத்தை தங்கள் பகுதி கிராம மக்கள் தொடர்ந்து போற்றி வருவதாகவும் அப்பகுதி இஸ்லாமியர்கள் மற்றும் நெடுவாசல் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.