ஸ்டாலின் தூண்டுதலில் பேசிய திருமாவளவனை கைது செய்யும் வரை வேறு பிரச்சனைக்கு இடமே இல்லை: ஹெச். ராஜா
புதுக்கோட்டை: பெண்களுக்கு எதிரான கருத்துகளை கூறிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை கைது செய்யும் வரை வேறு பிரச்சனைக்கு இடமே இல்லை என பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா திட்டவட்டமாக கூறியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் வாராப்பூர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

திருமாவளவனை கைது செய்க
பெண்களுக்கு எதிராக பேசிய திருமாவளவனை தமிழக அரசு ஏன் இதுவரை கைது செய்யவில்லை? திருமாவளவனை உடனடியாக கைது செய்யாவிட்டால் கைது செய்வதற்கு பாஜக அழுத்தம் கொடுக்கும். இந்து மதத்தில்தான் பெண்களை தெய்வமாக கருதி வழிபாடு நடத்துகிறோம்.

ஸ்டாலின் தூண்டுதலில் பேச்சு
மூன்று நாள் லட்சுமி, மூன்று நாள் சரஸ்வதி, மூன்று நாள் துர்க்கையை வழிபட்டு வரும் நவராத்திரியின்போது திருமாவளவன் இந்து மதத்தை இழிவு படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு பெண்கள் குறித்த கருத்தை ஸ்டாலின் தூண்டுதலின் பேரில் திருமாவளவன் பேசியுள்ளார்

பெண்களை அடிமையாக்கிய மதங்கள்
ஆனால் இஸ்லாமிய மதத்திலும் கிறிஸ்துவ மதத்திலும் பெண்கள் அடிமைகளாக தான் இன்றுவரை உள்ளனர். இந்தப் பிரச்சனை தேர்தல் நேரத்தில் கடுமையாக எதிரொலிக்கும். எங்கு பெண்களை ஆதாரிக்கிறார்களோ அங்கு ஆண்டவன் அக மகிழ்வான். பெண்களை யார் ஆதாரிக்கவில்லையோ அவர்கள் ஆண்டவனை வணங்கினாலும் பயனில்லை.

வேறு பிரச்சனையே இல்லைங்க..
கார்ட்டூனிஸ்ட் வர்மாவை கைது செய்த தமிழக அரசு ஏன் இதுவரை திருமாவளவனை கைது செய்யவில்லை? திருமாவளவனை கைது செய்யும் வரை வேறு பிரச்சனைக்கு இங்கு இடம் இல்லை. பிரச்சினையை திசை திருப்பாதீர்கள். இவ்வாறு ஹெச். ராஜா கூறினார்.