“மாஸ் காட்டிய சிங்கப்பெண்கள்” - ஊர்வலமாக சென்று டாஸ்மாக்கை இழுத்து மூடி.. அதுவும் திறந்த அன்றே!
புதுக்கோட்டை: அரிமளம் கிராமத்தில் டாஸ்மாக் கடையை 300-க்கும் மேற்பட்ட பெண்கள் ஊர்வலமாகச் சென்று இழுத்து மூடியுள்ளனர்.
அங்கு ஏற்கனவே 2 டாஸ்மாக் கடைகள் உள்ள நிலையில் இன்னொரு டாஸ்மாக் கடை அமைக்கக்கூடாது என பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
டாஸ்மாக் கடையை இழுத்து மூடி பெண்கள் போராட்டம் நடத்தி வருவதால் அந்தப் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
டாஸ்மாக் வருமானம் இத்தனை கோடியா? சில்லறை விற்பனை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு அளித்த தமிழக அரசு..!

டாஸ்மாக் கடைகள்
மதுபானத்தால் நாட்டுக்கும் வீட்டுக்கும் ஏற்படும் கேடுகள் சொல்லி மாளாது. கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றங்கள் மட்டுமல்லாது, பெரும்பாலான குடும்ப வன்முறைகளுக்கும் மது முக்கிய காரணமாக இருக்கிறது.
இத்தகைய மதுவை குடிமகன்கள் எளிதாக வாங்கும் வகையில் ஊருக்கு ஊர் இருக்கின்றன டாஸ்மாக் கடைகள். பல ஊர்களிலும், பெண்கள் தங்கள் ஊர்களில் டாஸ்மாக் கடை இருக்கக்கூடாது எனப் போராட்டம் நடத்துவதை நாம் பார்த்து வருகிறோம்.

அரிமளம் டாஸ்மாக்
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் பேரூராட்சி பகுதியில் ஏற்கனவே 2 டாஸ்மாக் கடைகள் உள்ள நிலையில் மூன்றாவதாக இன்னொரு டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டுள்ளது. மூன்றாவதாக இன்னொரு டாஸ்மாக் கடையைத் திறக்கக்கூடாது என அந்தப் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.
அந்த டாஸ்மாக் கடை இருக்கும் பகுதியில் வழிபாட்டு தலங்கள் இருப்பதாகவும், பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவர்களுக்கு இடையூறாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

பெண்கள் முற்றுகை
அதனால் அந்த டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என்றும் பொதுமக்கள் கூறி வந்த நிலையில், இன்று காலை அந்த டாஸ்மாக் கடையை போலீசார் உதவியுடன் திறந்துள்ளனர்.
இதையறிந்து பெண்கள் மற்றும் பொதுமக்கள் அங்கு ஊர்வலமாகச் சென்று அந்த டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டுள்ளனர். பின்னர், டாஸ்மாக் கடை ஷட்டரை இழுத்து மூடியதோடு தொடர்ந்து முற்றுகை போராட்டம் நடத்தினர்.

இழுத்து மூடிய பெண்கள்
300க்கு மேற்பட்ட பெண்கள் குவிந்து டாஸ்மாக் கடைக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். மூன்று டாஸ்மாக் கடைகளையும் நிரந்தரமாக மூடுவதாக உறுதியளித்தால் மட்டுமே கலைந்து செல்வோம் என பெண்கள் தெரிவித்தனர். மற்ற இரு டாஸ்மாக் கடைகளையும் 3 மாதங்களில் படிப்படியாக மூடுவதாக உறுதியளித்த பிறகு போராட்டம் கைவிடப்பட்டது. இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.