கோவையிலிருந்து வந்த கார்... ராமேஸ்வரம் அருகே பைக்கில் ட்ரிபிள்ஸ் - கோர விபத்தில் மூவரும் பலி
ராமநாதபுரம்: ராமேஸ்வரம் அருகே மண்டபம் தேசிய நெடுஞ்சாலையில் காரும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே மரைக்காயர்பட்டினம் பாரத் பெட்ரோல் பங்க்கில் மகேஷ் (40), ஜெகதீஷ் (22) ஆகிய இருவர் பணிபுரிந்துள்ளனர். இருவரையும் மண்டபம் யாதவர் தெருவை சேர்ந்த வாசு என்பவரது மகன் ஜெகன் (42) இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் பங்க்கிற்கு அழைத்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திலிருந்து ராமேஸ்வரம் நோக்கி வேகமாக சென்றுகொண்டிருந்த கார், ஜெகன் ஓட்டி வந்த கார் மீது நேருக்கு நேர் மோதியது. அதே வேகத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த மூவரையும் இழுத்துச் சென்ற கார் அருகில் உள்ள பள்ளத்தில் விழுந்தது.
இந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கட்டுப்பாட்டை இழந்த கார் மோதியதில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்த ஓய்வுபெற்ற சார்பு ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி படுகாயமடைந்தார். அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ராமேஸ்வரம் சரக டிஎஸ்பி ராஜ் மற்றும் மண்டபம் போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.