ஊரையே வாரி விழுங்கிய கடல்! நெஞ்சை பதைபதைக்க வைத்த துயரத்தின் 57வது ஆண்டு இன்று! தனுஷ்கோடி அழிந்த கதை
ராமநாதபுரம்: கடந்த 1964-ம் ஆண்டு டிசம்பர் 23-ம் தேதி நள்ளிரவு புயலால் தனுஷ்கோடி என்ற நகரமே மொத்தமாக சிதைந்த நிலையில் அந்த துயர நிகழ்வின் 57-ம் ஆண்டு நினைவு தினம் கடைபிடிக்கப்படுகிறது.
பொழுது மறைந்து விடிவதற்குள் ஒரே இரவில் 1,500-க்கும் மேற்பட்டோரின் உயிர்களை கொத்தாக பறித்துக்கொண்ட கடல், ஊரையே உருகுலைய வைத்து உலகையே தமிழகத்தை நோக்கி திரும்பிப்பார்க்க வைத்தது.
இந்தக் காலத்தில் இருப்பது போல், தகவல் தொழில்நுட்ப வசதி இல்லாததால் புயலால் ஒரு ஊரே அழிந்த நிகழ்வு 2 நாட்கள் கழித்துத் தான் அரசு நிர்வாகத்திற்கே தெரியவந்தது என்பது வேதனையிலும் வேதனையான ஒன்று.
புகையை போட்டு நகையுடன் தப்பிய மந்திரவாதி.. அப்படியே ஆடிப்போன ஆயிஷா!

தனுஷ்கோடி
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்திலிருந்து 20 கி.மீ.தூரத்தில் இருக்கிறது தனுஷ்கோடி. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் துறைமுக நகரமாக கட்டமைப்பட்ட தனுஷ்கோடியில், 3,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் 1964-ம் ஆண்டு புயலுக்கு முன்பு வரை வசித்து வந்தனர். ரயில்நிலையம், பள்ளி, காவல்நிலையம், தபால்நிலையம், தேவாலயம், மசூதி, கோயில் என ஒரு ஊருக்கு தேவையான அனைத்தும் தனுஷ்கோடியில் இருந்தது. அங்கு வசித்தவர்களுக்கு மீன்பிடித் தொழிலும், கடலும் மட்டுமே வாழ்வாதாரமாக இருந்தது.

1964-ம் ஆண்டு டிசம்பர்
1964-ம் ஆண்டு டிசம்பர் 15-ம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறி பிறகு அதிதீவிர புயலாக மாறியது. இப்போது இருப்பது போல் வானிலை அறிக்கையை அறிவிக்கும் வசதியோ, தகவல் தொழில்நுட்ப வசதியோ இல்லாத காலம் என்பதால் ஊரை நோக்கி வருவது கோரப்புயல் என்பதை அறியாமலேயே தனுஷ்கோடி மக்கள் தங்கள் வழக்கமான பணிகளில் ஈடுபட்டிருக்கின்றனர். இந்த மழையும், காற்றும் நம்மை என்ன செய்துவிடப் போகிறது என்ற நம்பிக்கையில் இருந்தவர்களை 1964 டிசம்பர் 23-ம் தேதி மொத்தமாக கபளீகரம் செய்தது அந்தக் கோரப்புயல்.

பேயாட்டம்
காற்றின் பேயாட்டத்தால் ஊரே சின்னாபின்னமான நிலையில், சென்னையிலிருந்து தனுஷ்கோடி நோக்கி வந்த ரயிலும் புயலின் கோரப்பிடியில் இருந்து தப்பவில்லை. தனுஷ்கோடி ரயில்நிலையத்தை அடைவதற்கு சில கிலோமீட்டர்களுக்கு முன்னர், ஆர்ப்பரித்து எழுந்த அலைகளால் ரயிலின் 5 பெட்டிகள் கடலில் கவிழ்ந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஒரே இரவில் ஆயிரத்துக்கும் ஐநூறுக்கும் மேற்பட்ட உயிர்கள் பலியான சோக நிகழ்வு உலகிலேயே இதுவாகத் தான் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

57 ஆண்டுகள்
இதனிடையே இந்த துயரம் நிகழ்ந்து இன்றுடன் 57 ஆண்டுகள் ஆகிவிட்ட போதும், தனுஷ்கோடியில் அந்த கோர நிகழ்வின் சாட்சிகளாக பல நினைவுச்சின்னங்கள் இன்றும் இருக்கின்றன. அதனை முறையாக பராமரிக்காவிட்டால் அவைகளும் விரைவில் அழியக்கூடும் என்று வேதனைப்படும் உள்ளூர்வாசிகள், தனுஷ்கோடிக்கு மீண்டும் புத்துயிர் அளிக்கும் அரசின் திட்டங்களுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

ஜெமினி தப்பினார்
தனுஷ்கோடி அழிந்த கதையை படிக்கும் பலருக்கும் நடிகர் அஜீத்குமாரின் சிட்டிசன் திரைப்படம் தான் நெஞ்சில் நிழலாடக்கூடும். இதனிடையே இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், 1964 டிசம்பர் 22-ம் தேதி தனுஷ்கோடியில் படப்பிடிப்புக்காக சென்ற நடிகர் ஜெமினிகனேசன், மழை அதிகம் இருந்ததால் படப்படிப்பை ரத்துசெய்துவிட்டு ராமேஸ்வரத்தில் இருந்த அறைக்கு திரும்பியிருக்கிறார். ஒரு வேளை அவர் தனுஷ்கோடியில் தங்க நேரிட்டிருந்தால் அவரும் அந்தப் புயலில் சிக்கியிருப்பார்.

அழிவின் எச்சம்
1964 நிகழ்வுக்கு பிறகு தனுஷ்கோடியில் மனிதர்கள் வசிக்க இன்றுவரை அனுமதி தரப்படவில்லை. ஆனாலும், ராமேஸ்வரம் வரும் சுற்றுலாபயணிகள் தவறாமல் தனுஷ்கோடிக்கும் சென்று அழிவின் எச்சங்களை காண தவறுவதில்லை. ராமனின் வில் போன்ற நிலப்பரப்பை உடையதால் அந்த ஊருக்கு தனுஷ்கோடி என்ற பெயர்காரணமும் கூறப்படுகிறது.