அலைமோதும் அன்வர் ராஜா! அணை போட்டு வைத்துள்ள அதிமுக! அடுத்தது என்ன?
ராமநாதபுரம்: அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா மீண்டும் கட்சியில் இணைக்கப்படுவார் எனத் தெரிகிறது.
அன்வர் ராஜாவுக்கு ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமியிடம் பலத்த சிபாரிசு செய்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
இதனிடையே அன்வர் ராஜா சசிகலாவை சந்திப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஓ.பி.எஸ் தரப்பு தான் அவரை சமாதானம் செய்து விரைவில் கட்சியில் இணைக்க நடவடிக்கையும் எடுத்து வருகிறது.
அதிமுகவில் பரபரப்பு! தலைவா! என்னால் விலகியிருக்க முடியவில்லை! அன்வர் ராஜா ஒட்டிய போஸ்டர்!

முன்னாள் அமைச்சர்
அதிமுகவில் எம்.ஜி.ஆர் காலத்து சீனியரும், முன்னாள் அமைச்சருமான அன்வர் ராஜாவை அண்மையில் கட்சியில் இருந்து நீக்கினார் எடப்பாடி பழனிசாமி. இதையடுத்து அவர் திமுகவில் இணையப்போகிறார் என செய்திகள் பரவின. ஆனால் அவரை திமுக கண்டுகொள்ளவில்லை. காரணம் அன்வர் ராஜாவுக்கு என ராமநாதபுரம் மாவட்டத்தில் எந்த செல்வாக்கும் கிடையாது என்பது தான்.குறிப்பாக அவர் சார்ந்திருக்கும் இஸ்லாமிய சமுதாய மக்கள் மத்தியிலேயே அவருக்கு பெரியளவில் எந்த செல்வாக்கும் இல்லை. இப்படிப்பட்ட நபரை திமுகவில் இணைத்து அவருக்கு பதவியை தூக்கி கொடுக்க ஸ்டாலின் விரும்பவில்லை. இதனால் அன்வர் ராஜா வரவை அவர் பெரிதாக பார்க்கவில்லை.

ராமநாதபுரம் திமுக
ராமநாதபுரம் மாவட்டத்தை பொறுத்தவரை ஏற்கனவே அமைச்சர் ராஜகண்ணப்பன் தரப்பும் மாவட்டச் செயலாளர் காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் தரப்பும் எலியும் பூனையுமாக அரசியல் செய்து வருகிறது. இந்த சூழலில் அன்வர் ராஜாவை திமுகவில் இணைத்தால் இன்னும் குழப்பம் தான் அதிகரிக்கும் என உள்ளூர் நிர்வாகிகள் தலைமைக்கு கடிதம் எழுதினர். இதனால் அன்வர் ராஜாவுக்கு திமுகவின் கதவு ஏறத்தாழ மூடப்பட்டது. இதனால் விரக்தியடைந்த அன்வர் ராஜா அடுத்ததாக என்ன செய்வது என அலைமோதிக் கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு அவரை தொடர்பு கொண்ட பெங்களூரு புகழேந்தி சில ஆலோசனைகளை வழங்கியிருக்கிறார்.

சசிகலாவுடன் சந்திப்பு
அதிமுகவிலிருந்தும் நீக்கப்பட்டுவிட்டோம், திமுகவும் கதவை மூடிக்கொண்டது அடுத்ததாக என்ன செய்யலாம் என யோசித்துக் கொண்டிருந்த அன்வர் ராஜாவை அவருக்கு நெருக்கமானவர்கள் சிலர் சசிகலாவை சந்திக்கும் படி ஐடியா கொடுத்துள்ளனர். இதையடுத்து அவரும் சசிகலாவை சந்திப்பதற்கு ஆயத்தமாகியிருந்திருக்கிறார். இதையறிந்த அதிமுக மேலிடம் அன்வர் ராஜாவுக்கு லோக்கல் நிர்வாகிகள். மூலம் அணை போட்டதோடு கட்சியில் மீண்டும் இணைப்பது பற்றியும் சமிஞ்கை காட்டியிருக்கிறது.

மாவட்டச் செயலாளர்
ராமநாதபுரம் மாவட்ட அதிமுக செயலாளரும் எடப்பாடி பழனிசாமியின் தீவிர ஆதரவாளருமான முனியசாமி அன்வர் ராஜாவுடன் பேசி வருகிறாராம். இதனால் விரைவில் அன்வர் ராஜாவுக்கு அதிமுக தலைமையிடம் இருந்து கிரீன் சிக்னல் கிடைக்கக் கூடும் என்கிறார்கள். ஆனால் அதே நேரத்தில் பெரிய பதவி எதுவும் கொடுக்கப்படாது என்ற தகவலும் தெரிவிக்கப்படுகிறது.