அதிமுக யார் தலைமையில் இருந்தாலும் ‘நோ யூஸ்’ - என்ன.. முன்னாள் கூட்டணி கட்சி தலைவரே இப்படி சொல்றாரு!?
ராமநாதபுரம்: அதிமுக ஆட்சியிலும் இல்லை, அதிகாரத்திலும் இல்லை. இப்போது அக்கட்சி யார் தலைமையில் இருந்து என்ன பிரயோஜனம் வரப்போகிறது என கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மக்கள் மீது அக்கறை இருக்குமானால், அதிமுகவில் இந்த அதிகாரப் போட்டியே வந்திருக்கக்கூடாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை மோதல் கடுமையாக நிகழ்ந்து வரும் நிலையில், ஓபிஎஸ் ஈபிஎஸ் தரப்பினர் மாறி மாறி ஆலோசனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
விஜிபி ரிசார்ட்டில் பணிகள் நிறுத்தம்.. சென்னை வானகரம் திருமண மண்டபத்திலேயே மீண்டும் அதிமுக பொது குழு

ஒற்றைத் தலைமை
அதிமுகவில் கிளம்பியுள்ள ஒற்றைத் தலைமை முழக்கம் கட்சிக்குள் புயலைக் கிளப்பிவிட்டது. எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் ஒற்றைத் தலைமை அமைவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வரும் நிலையில், ஓ.பன்னீர்செல்வம் இரட்டைத் தலைமையே நீடிக்க வேண்டும் எனக் கூறி வருகிறார். பொதுக்குழு உறுப்பினர்கள் பெரும்பான்மையானோர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உள்ள நிலையில் வரும் ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமையாக எடப்பாடி பழனிசாமிக்கு மகுடம் சூட்ட ஈபிஎஸ் தரப்பினர் முழு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

முற்றும் மோதல்
ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கு எதிராக தேர்தல் ஆணையம், நீதிமன்றங்களை நாடி வருகிறார். ஓபிஎஸ்ஸின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நேற்று தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டத்தையும் நடத்தி முடித்தனர் ஈபிஎஸ் தரப்பினர். இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ள ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி தரப்பினர் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். இதையடுத்து தேர்தல் ஆணையத்திற்கு தங்கள் தரப்பு பதிலை தெரிவிக்க தயாராகி வருகிறது எடப்பாடி அண்ட் கோ.

என்ன பிரயோஜனம்?
இந்நிலையில், சி.பி.ஐ.எம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ராமநாதபுரத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "ஆளுங்கட்சியில் இருந்து தூக்கி எறியப்பட்ட பிறகு, அதிமுகவில் அதிகாரப் போட்டியில் ஆளுக்கு ஆள் நிற்கின்றனர். அதிமுகவை பலப்படுத்தக்கூட இது பயன்படாது. அதிமுக ஆட்சியிலும் இல்லை, அதிகாரத்திலும் இல்லை. இப்போது அக்கட்சி யார் தலைமையில் இருந்து என்ன பிரயோஜனம் வரப்போகிறது? மக்கள் மீது அக்கறை இருக்குமானால், அதிமுகவில் இந்த போட்டி வந்திருக்கக்கூடாது.

எதைப் பற்றியும் அவர்களுக்கு கவலையில்லை
மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பாஜக அரசு கொண்டு வந்துள்ள அக்னிபாதை திட்டத்தைப் பற்றி அவர்கள் கவலைப்படவில்லை. பாராளுமன்ற ஜனநாயகம் பழிவாங்கப்படுவதைப் பற்றி கவலைப்படவில்லை. மகராஷ்டிராவில் இருக்கும் எம்.எல்.ஏக்களை கடத்திக் கொண்டுபோய் அசாமில் வைத்து கூத்தடிக்கின்றனர், அதைப்பற்றியும் கவலைப்படவில்லை. இந்தியாவில் ரயில்வே உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள் எல்லாம் விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் தனியார் ரயில் ஓட ஆரம்பித்துவிட்டது. மதுரையிலிருந்து சென்னைக்கும், கோவையிலிருந்து ஷீரடிக்கும் தனியார் ரயில் இயக்கப்படுகிறது. இதைப் பற்றியெல்லாம் அதிமுக கவலைப்படவில்லை. அவர்களுக்கு பதவி போட்டிதான் முக்கியம்" என அவர் சாடியுள்ளார்.