முதுகுளத்தூர் மணிகண்டன் வழக்கில் திருப்பம்- விஷம் குடித்து பலியானதாக ஏடிஜிபி தாமரைக் கண்ணன் விளக்கம்
இராமநாதபுரம்: இராமநாதபுரத்தில் மாணவர் மணிகண்டன் காவல்துறையினரால் தாக்கப்பட்டதால் உயிரிழந்ததாகக் கூறப்பட்ட நிலையில், அவர் விஷம் குடித்ததாலேயே உயிரிழந்துள்ளதாக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி தாமரைக் கண்ணன் கூறியுள்ளார்.
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே கீழத்தூவல் காவல் நிலைய போலீசார் மேலதூவல் கிராமம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த நீர்க்கோழியேந்தல் கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் மணிகண்டன் தனது நண்பரான சஞ்சய் உடன் முதுகுளத்தூர் வந்துள்ளார். வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் மணிகண்டனின் இரு சக்கர வாகனத்தை தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. கல்லூரி மாணவன் மணிகண்டன் நிற்காமல் சென்றதால் ஆத்திரமடைந்த போலீஸார் அவரை பின்தொடர்ந்து சென்றுள்ளனர். மாணவனை விரட்டிப்பிடித்து போலீஸார் மணிகண்டனை மட்டும் மேலதூவல் கிராமத்திலிருந்து அடித்து காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர். இதையடுத்து மாலை 6.30 மணிக்கு மணிகண்டனின் பெற்றோருக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு கல்லூரி மாணவன் மணிகண்டனை வீட்டிற்கு அழைத்து செல்லுமாறு தெரிவித்துள்ளனர்.

போலீசார் அடித்துக் கொலை என புகார்
இதனையடுத்து காவல்நிலையம் வந்த மாணவனின் பெற்றோர் நடக்கக் கூட முடியாத நிலையில் இருந்த மணிகண்டனை வீட்டிற்கு அழைத்து சென்றனர். வீட்டில் 3 முறை மணிகண்டன் ரத்தவாந்தி எடுத்துள்ளார். இரவில் தூங்கிய நிலையில் காலை இறந்த நிலையில் படுக்கையில் கிடந்துள்ளார். மணிகண்டனின் உடலை உறவினர்கள் சோதித்து பார்த்ததில் ஆண் உறுப்பில் வீக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீஸார் மணிகண்டனை அடித்துக் கொலை செய்ததாக உறவினர்கள் குற்றச்சாட்டுகின்றனர்.

மறு உடற்கூறு ஆய்வு நடத்தப்பட்டது
இந்த வழக்கின் விசாரணையில், மாணவன் மணிகண்டனின் உடலை மறுஉடற்கூறாய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து மாணவர் மணிகண்டனின் உடல் நீண்ட பேராட்டத்திற்கு பிறகு மறு உடற்கூறு ஆய்வுக்காக உட்படுத்தப்பட்டது. மணிகண்டனின் குடும்பத்தினர் சார்பாக ஒரு மருத்துவரும் அந்த குழுவில் இடம் பெற்றிருந்தார். உடல்கூறு ஆய்வுக்குப் பிறகு மணிகண்டனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

உடற்கூறு ஆய்வு அறிக்கை
இந்த நிலையில் மாணவர் மணிகண்டனின் உடர்கூறு ஆய்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. அதில் மாணவர் மணிகண்டன் விஷம் அருந்தி மரணம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய, சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி தாமரை கண்ணன் ,மணிகண்டன் 4.12.2021 இறந்துள்ளளார், இறப்பு குறித்து பல விதமாக தகவல் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது எனவும், இது குறித்த விளக்கம் அளிக்க இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு என ஏடிஜிபி தாமரை கண்ணன் தெரிவித்தார். மாணவர் மணிகண்டர் விஷம் குடித்ததாலேயே உயிரிழந்தார் எனவும், போலீசார் அடித்ததால் உயிரிழக்கவில்லை என கூறியுள்ளார், மேலும் விஷ பாட்டில் மணிகண்டன் வீட்டில் இருந்து காவல்துறையினர் கைப்பற்றி உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

டிஎஸ்பி தலைமையில் விசாரணை
முதுகுளத்தூர் மாணவர் மனிகண்டனை காவல்நிலையத்தில் இருந்து அவரது தாயார் நல்ல முறையில் அழைத்து சென்ற காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளதாகவும், மணிகண்டனை போலீசார் அடித்தது குறித்து விசாரணை செய்யப்படும் என்றார். வழக்கு குறித்து டிஎஸ்பி தலைமையில் முழு விசாரணை நடைபெற்று வருகிறது எனவும், மணிகண்டனின் உடற்கூறு ஆய்வு அறிக்கை ஆர்டிஓ அவர்களிடம் அளிக்கப்பட்டுள்ளதாக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி தாமரைக் கண்னன் கூறியுள்ளார்.