நிதி வேண்டாம்.. நீதிதான் வேண்டும்..! அமைச்சரிடம் குமுறிய மணிகண்டனின் உறவினர்கள்
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டத்தில் முதுகுளத்தூர் அருகே மர்மமான முறையில் உயிரிழந்த மாணவர் மணிகண்டனின் வீட்டுக்கு ஆறுதல் கூறச் சென்ற அமைச்சர் ராஜகண்ணப்பனிடம், தங்கள் மகனின் மரணத்திற்கு நிதி வேண்டாம் நீதி தான் வேண்டும் என உறவினர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே கீழத்தூவல் காவல் நிலைய போலீசார் மேலதூவல் கிராமம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த நீர்க்கோழியேந்தல் கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் மணிகண்டன் தனது நண்பரான சஞ்சய் உடன் முதுகுளத்தூர் வந்துள்ளார். வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் மணிகண்டனின் இரு சக்கர வாகனத்தை தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது.
மணப்பாறையில் மேக வெடிப்பு போன்றதொரு மழை.. 3 மணி நேரத்திற்கு நகராத மேகங்கள்.. வெதர்மேன் போஸ்ட்
கல்லூரி மாணவன் மணிகண்டன் நிற்காமல் சென்றதால் ஆத்திரமடைந்த போலீஸார் அவரை பின்தொடர்ந்து சென்றுள்ளனர். மாணவனை விரட்டிப்பிடித்து போலீஸார் மணிகண்டனை மட்டும் மேலதூவல் கிராமத்திலிருந்து அடித்து காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர். இதையடுத்து மாலை 6.30 மணிக்கு மணிகண்டனின் பெற்றோருக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு கல்லூரி மாணவன் மணிகண்டனை வீட்டிற்கு அழைத்து செல்லுமாறு தெரிவித்துள்ளனர்.

போலீசார் அடித்துக் கொலை என புகார்
இதனையடுத்து காவல்நிலையம் வந்த மாணவனின் பெற்றோர் நடக்கக் கூட முடியாத நிலையில் இருந்த மணிகண்டனை வீட்டிற்கு அழைத்து சென்றனர். வீட்டில் 3 முறை மணிகண்டன் ரத்தவாந்தி எடுத்துள்ளார். இரவில் தூங்கிய நிலையில் காலை இறந்த நிலையில் படுக்கையில் கிடந்துள்ளார். மணிகண்டனின் உடலை உறவினர்கள் சோதித்து பார்த்ததில் ஆண் உறுப்பில் வீக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீஸார் மணிகண்டனை அடித்துக் கொலை செய்ததாக உறவினர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

ட்விடிட்டரில் ட்ரெண்டான #JusticeForManikandan
இந்நிலையில் காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் மணிகண்டனின் மரணத்திற்கு நீதி கேட்டு #JusticeForManikandan என்ற ஹேஸ்டேக் டிவிட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.பாஜக அண்ணாமலை, அமமுக தினகரன் உள்ளிட்டோர் மணிகண்டனின் மரணம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி அறிக்கைகள் வெளியிட்டனர். அதிமுகவின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்திலும் மணிகண்டனின் மரணம் குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டது.

நீதிவிசாரணைக்கு கோரிக்கை
இந்த வழக்கின் விசாரணையில், மாணவன் மணிகண்டனின் உடலை மறுஉடற்கூறாய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இது தொடர்பாக நீதி விசாரணை வேண்டும் என அதிமுகவின் ஓபிஎஸ், இபிஎஸ், பாமகவின் அன்புமணி ராமதாஸ், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட ஏராளமான அரசியல் கட்சியினர், அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அறிக்கை மூலம் கோரிக்கை விடுத்தனர்.

அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆறுதல்
இந்தநிலையில் உயிரிழந்த மாணவன் மணிகண்டனின் வீட்டிற்கு சென்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அவரது பெற்றோர்களுக்கு ஆறுதல் தெரிவித்தும், மரணமடைந்த அன்று நடைபெற்ற சம்பவங்கள் குறித்து கேட்டாதாகவும் கூறப்படுகிறது. அப்பொழுது தனது மகனின் உயிரிழப்பிற்கு காவல்துறைதான் காரணம் என்றும், தனது மகனை அடித்துக் கொலை செய்த காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும், தங்களுக்கு நீதி கிடைக்க உரிய விசாரணை நடத்த தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என மணிகண்டனின் தாயார் அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் கோரிக்கை வைத்தார்.

நிதி வேண்டாம்.. நீதிதான் வேண்டும்..!
அப்பொழுது அமைச்சர் ராஜகண்ணப்பன் போலீசாரால் தாக்கப்பட்டதால் மரணமடைந்ததாகக் கூறப்படும் மணிகண்டனின் தந்தையிடம் நிதியுதவி வழங்கினார். அப்போது அருகில் இருந்த மணிகண்டனின் உறவினர்கள் தங்களுக்கு பணம் வேண்டாம் எனவும் மணிகண்டனின் குடும்பத்தினரில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்க ஆவண செய்ய வேண்டும் எனவும், தங்களுக்கு உரிய நீதி கிடைக்கும்வரை அரசு சார்பில் கிடைக்கும் எவ்வித உதவிகளையும் பெறப்போவதில்லை எனவும், தமிழக முதலமைச்சர் தங்களுக்கு உரிய நீதி கிடைக்க உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.