குரூப் 2 தேர்வு அறையில் செல்போன்.. மறைத்து வைத்திருந்த இளைஞரை அலேக்காக தூக்கிய போலீசார்.. பரபரப்பு!
ராமநாதபுரம்: பரமக்குடியில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு அறையில் செல்போன் வைத்திருந்த தேர்வர் ஒருவர் ஆய்வுக்கு வந்த அதிகாரிகள் மற்றும் போலீசாரால் வெளியேற்றப்பட்டார்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு இன்று தமிழகம் முழுவதும் 117 தேர்வு மையங்களில் நடைபெற்று முடிந்துள்ளது.
இந்த தேர்வில் 1 லட்சம் பேருக்கும் அதிகமாக ஆப்செண்ட் ஆன நிலையில், தேர்வு அறையில் செல்போன் வைத்திருந்த இளைஞர், தேர்வை மேற்கொண்டு எழுத அனுமதிக்கப்படாமல் வெளியேற்றப்பட்டுள்ளார்
வெறும் 2 நிமிடம்.. அரசு பணி கனவு கலைந்ததே! கதறிய பெண்.. கடுப்பான கணவர்.. குரூப் 2 தேர்வில் பரபரப்பு

டிஎன்பிஎஸ்சி தேர்வு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வின் 2, 2ஏ பதவிகளுக்கான முதல் நிலைத் தேர்வு இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது.
5,529 பணியிடங்களுக்கு நடைபெற்ற இந்த தேர்வுக்கு தமிழகம் முழுவதும் 11.78 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் இன்று 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தேர்வு எழுத வரவில்லை.

குரூப் 2 தேர்வு
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு தமிழகத்தில் 38 மாவட்டங்களில் அமைக்கப்பட்டிருந்த 117 மையங்களில் நடைபெற்றது. 4,012 முதன்மை கண்காணிப்பாளர்களும், 58,900 கண்காணிப்பாளர்களும் தேர்வை கண்காணித்தனர். சோதனை செய்யும் பணியில் 6,400 பேர் ஈடுபட்டனர்.
இன்று நடைபெற்ற முதல் நிலை தேர்வு முடிவுகள் ஜூன் மாத இறுதியில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் செப்டம்பர் மாதம் முதன்மை தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதல் நிலை தேர்வில் வெற்றி பெறுவோரில் இருந்து ஒரு பதவியிடத்துக்கு 10 பேர் வீதம் முதன்மை தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்.

ராமநாதபுரம்
கரூர் உள்ளிட்ட சில இடங்களில் 9 மணிக்கு சற்று தாமதமாக வந்த தேர்வர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படாததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இதுபோன்ற நிகழ்வுகளால் சில இடங்களில் பரபரப்பு ஏற்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சௌராஷ்டிரா மேல்நிலைப்பள்ளியில் 30 தேர்வு அறைகள் ஒதுக்கப்பட்டு, 600 மாணவர்கள் குரூப் 2 தேர்வு எழுத ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

செல்போன்
பரமக்குடி சௌராஷ்டிரா மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தேர்வில் பங்கேற்ற நெடுங்குளம் கிராமத்தைச் சேர்ந்த சங்கர் (31) என்பவர் தேர்வு எழுதும்போது தனது செல்போனை மறைத்து வைத்திருந்துள்ளார். இதனை ஆய்வுக்கு வந்த அதிகாரிகள் கண்டுபிடித்து, அவரை தேர்வு அறையில் இருந்து வெளியேற்றினர்.
அந்த தேர்வர் வேறு ஏதேனும் குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளாரா என்பதைக் கண்டறிய அவரது செல்போனை போலீசார் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.