பாஜக நிர்வாகி பாலச்சந்தர் படுகொலை- எடப்பாடியில் பதுங்கிய 4 ரவுடிகள் அதிரடி கைது- சென்னையில் விசாரணை
சேலம்: சென்னை பாஜக நிர்வாகி பாச்சந்தர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சேலம் எடப்பாடியில் பதுங்கி இருந்த பிரதீப் உள்ளிட்ட 4 ரவுடிகளை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். எடப்பாடியில் பதுங்கி இருந்த 4 ரவுடிகளும் சென்னைக்கு கொண்டுவரப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்தவர் பாலச்சந்தர். தமிழக பாஜகவின் மத்திய சென்னை மாவட்ட எஸ்.சி/எஸ்.டி. பிரிவு தலைவராக இருந்து வந்தார். சென்னை சிந்தாதரிப்பேட்டையில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்களால் பாலச்சந்தர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
பாஜக மத்திய சென்னை எஸ்சி பிரிவு தலைவர் பாலச்சந்தர் படுகொலை! 6 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்

பாலச்சந்தர் யார்?
இது முன்விரோதம் காரணமாக நடைபெற்ற படுகொலை என சென்னை போலீசார் தெரிவித்தனர். இப்படுகொலை தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணையும் நடத்தி வந்தனர். ஏற்கனவே ரவுடியாக இருந்தவர் பாலச்சந்தர்; அதேபோல் போலீஸ் பாதுகாப்புக்காக தம்மையே தாம் தாக்கிக் கொண்டு நாடகமாடியவர்; மாட்டு தலையை முன்வைத்து மத கலவரம் தூண்டிவிட முயற்சித்தவர் என பல வழக்குகளும் பாலச்சந்தர் மீது இருந்தன.

பாலச்சந்தர் கொலை
அத்துடன் போலீஸ் பாதுகாப்பைப் பெற்றுக் கொண்ட பாலச்சந்தர், உள்ளூர் ரவுடிகளுடன் மோதியும் வந்தார். இது தொடர்பான முன்விரோதம் காரணமாகவே பாலச்சந்தர் கொல்லப்பட்டார் என அவரது உறவினர்கள் தெரிவித்தனர். பிரதீப், கலைவாணன் உள்ளிட்ட சில ரவுடிகளே பாலச்சந்தர் கொலைக்கு காரணம் எனவும் உறவினர்கள் போலீசில் புகார் கொடுத்தனர்.

எடப்பாடியில் கைது
இதனடிப்படையில் ரவுடி பிரதீப் உள்ளிட்டோரை போலீசார் தேடி வந்தனர். இந்த தேடுதலின் போது பிரதீப்பும் அவரது கூட்டாளிகளும் சேலம் மாவட்டம் எடப்பாடியில் பதுங்கி இருப்பதாக தகவல்கள் கிடைத்தன. இதனையடுத்து அந்த இடத்தை சுற்றி வளைத்த போலீசார் 4 பேரையும் கைது செய்தனர்.

தீவிர விசாரணை
எடப்பாடியில் பிரதீப் மற்றும் கூட்டாளிகளான சஞ்சய், கலைவாணன், ஜோதி ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அங்கிருந்து சென்னைக்கு 4 பேரும் அழைத்துவரப்பட்டனர். சென்னையில் 4 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.